சத்தம்

குளித்துவிட்டு அவசரமாக வந்த லலிதா கணவனிடம் முறையிட்டாள்.
‘‘பாருங்க, இன்னிக்கும் ஆரம்பிச்சுட்டாங்க அந்தப் பசங்க... கத்தல் தாங்கல!’’ அவள் கோபம் பரசுவுக்குப் புரிந்தது.
பக்கத்துக்கு வீட்டு பசங்களுக்கு ஸ்கூல் லீவு விட்டது முதல் இப்படித்தான். கேட் முன்னால கூடி ஒரே சத்தம், ஆரவாரம், லூட்டிதான்! என்னதான் இரண்டு பேருமே வேலைக்குப் போகிறவர்கள் என்றாலும், காலையிலும் மாலையிலும் காது கொள்ளாது. இன்னும் ரெண்டு மாதம் அவர்கள் ரகளைதான்.
‘‘இன்னிக்காவது ஆபீஸ் புறப்படறப்போ அவங்களை ரெண்டு வார்த்தை கண்டிச்சு வையுங்க...’’ - சொல்லிவிட்டு அவசரமாக அவள் முதலில் புறப்பட்டுப் போய்விட்டாள்.
மாலையிலும் அதே சத்தம், ஆரவாரம்... பரசு இன்றைக்கும் வாயைத் திறக்கவில்லை என்று தெரிந்தது. ‘‘என்னங்க, இப்படி கண்டுக்காம இருந்தா என்ன நினைப்பாங்க அவங்க? இன்னும் துளிர்விட்டுப் போகாதா?’’
அவளை அமைதிப்படுத்திவிட்டு சொன்னார் பரசு... ‘‘நானும் கண்டிக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனா, யோசிச்சுப் பாரு... இப்பதான் நாம ரெண்டு பேரும் ஆபீசில் நிம்மதியா இருக்கிறோம். ‘வீட்டைப் பூட்டிட்டு வந்திருக்கோமே... தெருவில ஈ, காக்கை நடமாட்டம் இருக்காதே. எவனாவது உள்ளே புகுந்திடுவானோ’ன்னு ஒரு கவலை மனசுல ஓடிட்டே இருக்குமே! அதிலேர்ந்து நமக்கு விடுதலை தர்றதுக்காகவாவது இந்தப் பசங்களோட ஜாலி கத்தலை மன்னிச்சுடுவோமே...’’ லலிதா புன்னகைத்தாள்.
|