சந்தேகம





போன் வந்தால் என் எதிரில் பேசாமல் தனியாக எங்காவது போகிறாள். பேசியது யார் என்றும் சொல்வதில்லை. இதனால் சமீபகாலமாக ரகுவுக்கு தன் மனைவி மஞ்சு மீது சந்தேகம். அதனால் அலுவலகத்திலிருந்து அடிக்கடி வந்து, மஞ்சுவுக்குத் தெரியாமல் அவள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தான். ‘ஆபீஸ்ல ஏ.சி என்னாச்சு’... ‘சட்டையெல்லாம் ஏன் வேர்வையா இருக்கு’..., ‘பைக் ஏன் இத்தனை கிலோமீட்டர் ஓடியிருக்கு?’ - இப்படி அவள் கேட்கும் கேள்விகளை தட்டுத் தடுமாறி சமாளித்து வைத்தான். ஆனால், எத்தனை முயற்சித்தும் அவளைப் பற்றி ஏதும் அறிய முடியவில்லை. எனவே, தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடினான்.

ஒரு வாரம் கழித்து துப்பறியும் நிறுவன அதிகாரி அவனை அழைத்தார். ‘‘சார்... நீங்க சந்தேகப்பட்டது உண்மைதான். உங்க மனைவி மஞ்சு, நீங்க அலுவலகம் போன உடனே கிளம்பி ஒருத்தரை தேடிப் போறாங்க. அவர் பின்னாடியே சுத்துறாங்க. அவங்க யாரு பின்னாடி சுத்தறாங்கன்னு தெரிஞ்சா நீங்க ஷாக் ஆயிடுவீங்க...’’ ஆர்வத்தையும் கோபத்தையும் அடக்க முடியாமல், ‘‘சொல்லுங்க, அவன் யாரு?’’ என்றான் ரகு. ‘‘உங்க பின்னாடிதான்! சமீபகாலமா உங்க மனைவிகிட்ட உண்மையைப் பேசாம ஏதேதோ பொய் சொல்லி சமாளிச்சதால, அவங்க உங்க மேல சந்தேகப்பட்டு உங்களை ஃபாலோ பண்ணியிருக்காங்க!’’ரகுவுக்கு தன் தவறு உறைத்தது.