பெண்கள் இருக்கும் வீடுகளின் அத்தியாவசியத் தேவை இது. தரக்குறைவின் காரணமாக அலர்ஜி, புற்றுநோய் மற்றும் பலவித சரும நோய்களை உருவாக்குவதாக சானிட்டரி நாப்கின் தயாரிப்புகளைப் பற்றி, சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கிறது. எந்த நாப்கின் நல்லது, எது பிரச்னைக்குரியது என்பதில் பலருக்கும் குழப்பம்! ''சுத்தமான, சுகாதாரமான முறையில் தயாரிப்பதோடு, உபயோகிக்கிற பொருள்களின் தரமும் சரியாக இருந்தால் இந்தப் பிரச்னைகளே வராது’’ என்கிறார்கள் ஸ்ரீமதி, ஜெரீனா, நசீரா, ஃபாத்திமா, திலகவதி மற்றும் சித்ரா குழுவினர். இவர்கள் இணைந்து தயாரிக்கிற சானிட்டரி நாப்கின்கள், நகரத்தின் முக்கிய மருத்துவமனைகளுக்குக் கூட சப்ளை ஆகின்றனவாம்!

‘‘சிறிய, பெரிய முதலீடுகளில் வீட்டிலிருந்தபடியே செய்வதற்கேற்ற சரியான தொழில் இது’’ என்கிற இவர்கள், ஆர்வமுள்ளோருக்கு அதற்கான வழிகளைக் காட்டுகிறார்கள்.
என்னென்ன தேவை? முதலீடு?‘‘உட் பல்ப், பஞ்சு, ஜெல், என்.ஹெச்.கவர்... இவை மட்டும்தான் மூலப் பொருள்கள். அவங்கவங்க வசதிக்கு ஏத்தபடி கைகளாலயும் பண்ணலாம். மெஷின் வச்சும் பண்ணலாம். கைகளால பண்றதானா, ஒரு மிக்சி, ஒரு அயர்ன் பாக்ஸ், பிரெஸ்சிங் டிரே வேணும். 5 ஆயிரம் முதலீடு. மெஷின்ல தயாரிக்கறதுன்னா அரைக்க ஒன்று, சீலிங் பண்ண மூன்று, டிசைன் போட ஒன்றுன்னு மொத்தம் 5 மெஷின்கள் தேவை. 10க்கு 15 அடி அளவுள்ள இடமும், ஒன்றரை லட்சம் முதலீடும் அவசியம்.’’
எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்? ‘‘பிரசவத்துக்கான நாப்கின், எக்ஸ்ட்ரா லார்ஜ், விங்ஸ் வச்சது, சாதாரண மாடல், டிசைன் செய்ததுன்னு 5 மாடல்கள் செய்யலாம். சுத்தமான காட்டன்ல பண்றதால, இதுல பக்க விளைவுகள் இருக்காது. அலர்ஜியை உண்டாக்காத ஜெல் உபயோகிக்கிறோம். கடைகளை விட விலையும் கம்மி.’’
ஒரு நாளைக்கு எத்தனை? விற்பனை வாய்ப்பு?‘‘ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறு நாப்கின் வரை பண்ணலாம். முதல்ல அக்கம்பக்கத்து வீடுகள், சின்னச்சின்னக் கடைகள், ஆஸ்பத்திரிகளுக்கு சாம்பிள் கொடுத்து ஆர்டர் பிடிக்கலாம். தரம் பிடிச்சதுன்னா கிடைக்கிற வாய்வழி விளம்பரம் மூலம் மற்ற இடங்கள்லேருந்து ஆர்டர் வரும். 10 சதவீத லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?‘‘ஒரே நாள் பயிற்சி. மெஷின்ல கத்துக்க 750 ரூபாயும், கைகளால பண்ணக் கத்துக்க 500 ரூபாயும்
கட்டணம்.’’
- ஆர்.வைதேகி படங்கள்: ஆர்.சந்திரசேகர்