வாகனம்
சிம்ம வாகனத்தில்
அமர்ந்து அம்மன்
வீதியுலா செல்வதென்னவோ
டிராக்டர் வாகனத்தில்!
- பா.விஜயராமன்,
திட்டச்சேரி
தயக்கம்
வாசலில் கோலம்
தாண்டிப் போகத் தயங்கும்
காற்று!
- ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி.
நிரப்பல்
என்னோடு எப்போதுமிருக்கும்
உன் வெறுமையை
எதைக் கொண்டு நிரப்ப,
சூன்யத்தைத் தவிர!
- அ.கார்த்திகேயன், சேலம்.
நீ, நான் மற்றும் மழை
மழை மீதான உன் கோபங்கள்
எனக்குக் கவலையளிக்கின்றன
என் மீதான உன் காதலும்
மழை மீதான என் காதலுமே
அதற்குக் காரணிகள்
என்றறிகிறபோது
அதே மழையிலேயே
கவலைகள் கரைந்துவிடுகின்றன!
- ச.நாகராஜன், திருச்சி-7.
காரணம்
எதற்காக
சத்தியம் செய்கிறது,
எரியும் கற்பூரத்தை
அணைத்த காற்று!
- இரா.கமலக்கண்ணன், சித்தோடு.
கவனம்
புழுதி படிந்த
சாலையோரச் செடிகள்
பூக்கும்போது மட்டும்
யார் கண்ணிலாவது
பட்டு விடுகின்றன.
- இளங்கீரன், சென்னை-101.