தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

           சென்னையில் இரண்டாவது வங்கிக் கொள்ளை நடந்த இரண்டே நாட்களில் கொள்ளையர்கள் 5 பேரை போலீஸ் என்கவுன்ட்டர் செய்தது அதிரடி என்றாலும், தமிழ் மக்கள் கவலை நீங்கவில்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு எங்கும் எட்டிப் பார்க்கும் துப்பாக்கிகள்தான் கவலைக்குக் காரணம். வங்கிக் கொள்ளையர்கள் வீட்டில் ஏழு துப்பாக்கிகள் இருந்தன. நெய்வேலி அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த கும்பலின் கையிலும் துப்பாக்கி இருந்தது. 20 ஆயிரம் ரூபாய்க்கு பீகாரில் வாங்கினார்களாம். இதுவரை அரிவாளால் மட்டுமே அச்சுறுத்திய கொள்ளையர்கள் கைகளில் எங்கிருந்து முளைத்தது துப்பாக்கி?

‘‘கட்டிட வேலைக்கும், படிக்கிறதுக்கும் ஆந்திரா, ஒடிசா, பீகார், ஜார்கண்ட், ம.பி., உ.பி.ன்னு நிறைய வெளிமாநிலத்துக்காரங்க சென்னை வர்றாங்க. கூலித் தொழிலாளியா வந்த சில பேரு சின்னச் சின்ன திருட்டு வழக்குகள்ல மாட்டிட்டிருந்தாங்க. ஆனா படிக்க வர்றவங்க சிலரும் குற்றச் செயல்கள்ல ஈடுபடுறதை இப்பத்தான் கண் முன்னால பார்க்குறோம்.

 கூலித் தொழிலாளிகளுக்கு வேலைக்கேத்த சம்பளம் கிடைக்கறதில்ல. படிச்சவனும் நல்ல வேலையை இங்கயே தேட, அது அமையாத பட்சத்துல குரூப் சேர்ந்துக்கிட்டு பணம் சம்பாதிக்க குறுக்கு வழியைத் தேடுறாங்க. நக்சல்களும், துப்பாக்கிகளும் சாதாரணமாப் புழங்கற அவங்க மாநிலங்கள்ல வங்கிகளைச் சூறையாடுறதெல்லாம் சாதாரண விஷயம்ங்கிறதால இங்கயும் அதுக்குத் துணிஞ்சிருக்காங்க’’ என்கிறார் பெருங்குடி அடங்கும் துரைப்பாக்கம் சரக முன்னாள் உதவி ஆணையர் முரளி. ஆரம்பத்தில் சிறுசிறு திருட்டு, வழிப்பறிகளில் இவரிடம் நிறைய வட இந்திய இளைஞர்கள் சிக்க, அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க ‘பெப்பர் ஸ்பிரே’வை அறிமுகப்படுத்தியவர் இவர்.

‘‘துப்பாக்கி முனையில கொள்ளைங்கிறது சென்னை அறியாதது தான். இங்க லைசென்ஸ் வாங்கி துப்பாக்கி வச்சிருக்கிறவங்க லிஸ்ட் போலீஸ்கிட்ட இருக்கு. சின்னச் சின்ன பெட்டி கேஸ்ல முன்னால பிடிபட்ட வட இந்தியக்காரங்க சிலர்கிட்ட இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் பண்ணியிருக்கோம். அவங்க ஊர்ல இருந்து கொண்டு வந்தது. பீகார் போன்ற மாநிலங்கள்ல வேலை தேடி வெளியூர் கிளம்பறவங்க சர்வ சாதாரணமா பெட்டி படுக்கையோட துப்பாக்கியைத் தூக்கிட்டுக் கிளம்புவாங்கன்னு சொல்றாங்க’’ என்கிறார் அவர்.

‘‘இந்த வழக்குகள்ல குற்றவாளிகள் தங்களை புத்திசாலிகளா நினைச்சிட்டி ருந்திருக்காங்க. தமிழ்நாடு போலீஸ் தங்களைத் தேடி தங்களோட மாநிலத்துக்குத் தான் போகும் ங்கிறது அவங்க கணிப்பு. பெருங்குடி வங்கிக் கொள்ளையில எந்தத் துப்பும் போலீசுக்குக் கிடைக்கலங்கிறதை அவங்களோட வெற்றியா நினைச்சிருக்காங்க. உண்மையைச் சொல்லணும்னா, முந்தைய சம்பவத்துலயே எங்களுக்கு சில தடயங்கள் கிடைச்சது. குற்றவாளிகளை மொத்தமா அள்ளணும்னுதான் அந்த தகவல்களை லீக் பண்ணாம வச்சிருந்தோம். இதெல்லாம் தெரியாம ஒரே மாசத்துல திரும்பவும் கீழ்க்கட்டளை வங்கியில கைவரிசை காட்டி, மொத்தமா உயிரை விட்டிருக்காங்க. தமிழ்நாடு போலீசை சாதாரணமா எடை போட்டு முடிவைத் தேடிக்கிட்டாங்க’’ என்கிறார் இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையில் அங்கம் வகித்த பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி. 

இந்த விவகாரத்தில் வங்கிகள் மீது பொதுமக்களிடமிருந்தும் போலீஸ் தரப்பிலிருந்தும் ஏகப்பட்ட பாய்ச்சல்கள். ‘‘கண்காணிப்புக் கேமரா, ஒலி எழுப்பும் அலாரத்தோட செக்யூரிட்டியும் வங்கிகள்ல இருக்கணும். இதுக்குத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட வங்கிகளோட தலைமை அலுவலகங்கள் எடுக்கணும். பாதுகாப்பை பக்காவா வச்சிருக்கிற சில கிளைகள்ல அலாரத்தோட ‘ஆட்டோ டயலர்’ங்கிற தானியங்கி தொலைபேசி இணைப்புகூட இருக்கு. இந்த இணைப்பு, அலாரம் ஒலிக்கறப்ப கூடுதலா இரண்டு இடங்களுக்கும் தகவலைக் கொண்டு போயிடும்.

 வங்கியோட தலைமை அலுவலகம், லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அந்த இணைப்பைத் தந்து வச்சிருப்பாங்க. அலாரங்கள், கேமராக்கள் நல்ல நிலையில இருக்கான்னு தினமும் செக் பண்ண வேண்டியதும் வங்கியாளர்கள் கடமை. நடந்த சம்பவங்கள்ல துப்பாக்கி காட்டி மிரட்டுனதால எல்லோரும் பயந்திருக்காங்க’’ என்கிறார் பாரத ஸ்டேட் வங்கி ஒன்றில் துணை மேலாளராகப் பணிபுரியும் மோகன்.

துப்பாக்கிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதுதான் இப்போது போலீஸ் செய்யவேண்டிய முதல் வேலை.
  அய்யனார் ராஜன்