முகமும், அகமும் ஒருசேர அமைவது ஆயிரத்தில் ஒருவருக்கு எனலாம். அந்த விஷயமே மது ஷாலினியையும் ஆயிரத்தில் ஒருத்தி ஆக்கியிருக்கிறது. சாந்தமான அழகு முகத்தைப் போலவே அமைந்திருக்கிறது மதுவின் பாந்தமான மனமும்.
''எனக்கு வச்ச பேரே மது ஷாலினிதான். சினிமாவுக்காக எதுக்குப் பெயரை மாத்தணும்..? பேரை மாத்திட்டா வாழ்க்கையையே மாத்திட முடியுமா..?’’ என்று மலரும் மதுவுக்கு தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஆரம்பம் சற்று மந்தம்தான். தெலுங்கில் அறிமுகமாகி சூப்பர்ஹிட் படங்கள் தந்தும் கோலிவுட் என்னவோ அரவணைக்கவில்லை. அதற்காகத் தமிழுக்கு ஒரு புதுப்பெயர் வைத்துக்கொண்டு வாய்ப்புகளைத் தேடாமல் தன் திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்ததில் வாராது வந்து வாய்த்தது பாலாவின் ‘அவன் இவன்’.
‘‘சினிமாவுக்காகவே பிறந்தவர் பாலா. காட்சிகள்ல அவர் ஆழ்ந்து போயிடறார். அது நம்மகிட்டயும் வரணும்னு எதிர்பார்க்கிறார். அவரை மூத்த அண்ணன் போலத்தான் பார்த்தேன். ‘அவன் இவன்’ல நான் ஏற்ற கேரக்டருக்காக 300 பேரைப் பார்த்து முப்பது பேரை ஆடிஷன் செய்தும் திருப்தியில்லாம இருந்தவர், என்னைப் பார்த்த மாத்திரத்திலேயே ஓகே பண்ணினார் என்றால் அவர் எதிர்பார்ப்புக்கு நான் பொருத்தமா இருந்தேன்னுதான் அர்த்தம்...’’ என்ற மது ஷாலினிக்கு ஒரு வருத்தம், படம் ரிலீசான நேரத்தில் உறவினர் திருமணத்துக்காக அமெரிக்கா போனது.
‘‘படம் பார்த்துட்டு நல்ல ஆஃபர்கள் வந்த நேரம் நான் இங்கே இல்லாததால அதெல்லாம் போயிடுச்சு...’’ என்றவருக்கு அதே நல்ல வாய்ப்பு இந்தியில் வாய்த்தி ருக்கிறது. ராம் கோபால் வர்மா வின் ‘டிபார்ட்மென்ட்’டில் அமிதாப் பச்சன், சஞ்சய் தத்துடன் நடித்துக் கொண்டிருக்கிறார் மது.
‘‘வர்மா படங்கள்னா எனக்கு உயிர். அவரே மும்பை கூப்பிட்டு ஆடிஷன் வச்சுப் படங்கள் எடுத்துட்டு, ‘சொல்றேன்...’னு அனுப்பியதும் எனக்கு இருப்பு கொள்ளலை. மாலையில் ஒரு அஸிஸ்டன்ட் டைரக்டர் வந்து நான் தேர்வாகிட்டேன்னு சொன்னதும்தான் உயிரே வந்தது...’’ என்ற மதுவுக்கு படத்தில் ‘பெண் தாதா’ வேடம்.
‘‘இதுவரை எந்த மொழிப்படத்திலும் இப்படி ஒரு கேரக்டர் வந்ததில்லை. அதனால எனக்கு இன்ஸ்பிரேஷனே கிடைக்கலை. என் மாடுலேஷன்களை ஏழெட்டு விதமா பேசிக் காண்பிச்சதுல ஒண்ணை செலக்ட் பண்ணி அப்படியே நடிக்க வச்சார் வர்மா. தமிழ்லயும் இந்திலயும் நானேதான் டப்பிங் பேசறேன்...’’ என்று ஜொலிக்கிறது ஹைதராபாத் முத்து.
வேணுஜி