சூப்பர் ஸ்டார் ரஜினியையும், சூப்பர் ஆக்டர் கமலையும் ஒரு சேரப் பார்த்துவிட்டு வந்த களிப்பில் இருக்கிறது இயக்குநர் செல்வாவின் ‘நாங்க’ டீம். செல்வாவின் வெள்ளி விழாப் படமாக அமைய இருக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் பெரும்பாலானோர் புதுமுகங்கள் என்பது ஒருபுறமிருக்க, அதில் ஹீரோக்கள், வில்லன், காமெடியன்களாகும் ஆறு பேருமே இதுவரை சினிமாவில் சாதித்த பல துறை பிரபலங்களின் வாரிசுகள் என்பதும் ஹைலைட்டான விஷயம்.
அதனால் தமிழ் சினிமாவில் இணையற்ற சாதனைகள் புரிந்து நடிகர்களுக்கு உதாரணமாக இருக்கும் கமலையும், ரஜினியையும் தங்கள் டீம் சந்தித்து வாழ்த்துப் பெறுவது புதுமுகங்களுக்கு நம்பிக்கை தரும் நிகழ்வாக இருக்கும் என்று நம்பிய செல்வா இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்.
பழம்பெரும் நடிகர் ஆதித்யனின் மகன் நிவாஸ், இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய்கிருஷ்ணா, இசையமைப்பாளர் வாசுராவின் மகன் முனிஷ், தயாரிப்பு நிர்வாகிகளான குருசாமி, ராஜகோபாலின் மகன்கள் முறையே வினோத், உதய் ஹீரோக்களாக... பாடகர் மனோவின் மகன் ஷாகிர் வில்லனாகும் படத்தில் தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகன் அஸ்வின்ராஜாவும், நடிகர் பெரியகருப்புத் தேவரின் மகன் விருமாண்டியும் காமெடியன்கள் ஆகிறார்கள் என்கிற விஷயத்தைக் கேள்விப்பட்ட கமலும், ரஜினியும் உடனே அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.
எண்பதுகளில் கல்லூரியில் கை கோர்த்த ஒரு நண்பர்கள் குழு மீண்டும் 2011 ல் சந்திக்கும் நிகழ்ச்சி படத்தின் ஆணி வேராகியிருக்க, எண்பதுகளில் இருந்த இளைஞர் களின் கெட்டப்புகள் மற்றும் அதே நடிகர்களின் 2011க்கான கெட்டப் மாற்றங்கள் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் செல்வா அவர்களிடம் காட்டியிருக்கிறார். படத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து வியந்த ரஜினி, ‘‘இவங்களா இது..?’’ என்று கேட்டுப் பாராட்டியிருக்கிறார். அருகிலிருந்த தனது நண்பர், இயக்குநர் நட்ராஜிடமும் படத்தைக் காட்டி சிலாகித்தாராம். படத்தின் கதையையும் கேட்டவர், ‘‘டிஃப்ரன்ட்டான நாட் இது. எல்லாருக்குமே அவங்களோட கடந்த கால நண்பர்களைப் பார்க்க ஆர்வமிருக்கும். அதை சரியா பயன்படுத்தியிருக்கீங்க...’’ என்று வாழ்த்தி
யிருக்கிறார்.
கமலும் அந்தப் படத்தைப் பார்த்து மனம் லயித்து, ‘‘எக்ஸ்ட்ரார்டினரி...’’ என்று பாராட்டியதுடன், ‘‘நீங்க எல்லோருமே திறமையாளர்களோட வாரிசுகள். அவங்களைப் போலவே நல்ல பேர் வாங்குங்க...’’ என்று வாழ்த்தியதுடன் அனைவரும் நடிகர்களாக இருந்ததால், ‘‘உங்க கேரக்டர் என்ன கேக்குதோ அதை நோக்கியே உங்க கவனம் இருக்கணும்...’’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.
மேற்படி வாரிசுகள் அனைவரையுமே தங்கள் அனுபவத்தில் தெரிந்து வைத்திருந்த ரஜினியும், கமலும் ஒவ்வொருவரிடமும் நலம் விசாரித்து, அவர்களின் நடிப்பு அனுபவங்களையும் கேட்டு ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறார்கள்.
அதில் நெகிழ்ந்து போயிருந்த சந்தானபாரதியின் மகன் சஞ்சய், ‘‘எனக்கு கமல் சாரை முன்னாலேயே தெரியும்னாலும் நான் நடிக்கிறேன்னு கேள்விப்பட்டதும், ‘அப்பாவும் சினிமாக்காரரா இருக்கிறதால உனக்கு பொறுப்பு அதிகமா இருக்கு...’ன்னு சொல்லி உடலைப் பேணவும், உடற்கட்டோடு இருக்கவும் டிப்ஸ் தந்தார். படத்துல என் ஸ்டில்களைப் பார்த்த ஸ்ருதி கூட ‘வெரி நைஸ்...’னு பாராட்டியது மகிழ்ச்சியா இருந்தது...’’ என்றார்.
‘‘ரஜினி சார் என்னைப் பார்த்ததும், ‘உங்கப்பா மனோ என்னோட பிரண்ட். அவரோட மகனான நீ நடிக்க வந்ததுல, அதுவும் வில்லனாகியிருக்கிறதுல ரொம்ப சந்தோஷம். நல்லா வருவே’ன்னு ஆசீர்வதிச்சார்...’’ என்று மனோவின் மகன் ஷாகிர் சொன்னார்.
‘‘பெல்பாட்டத்தோட எண்பதுகள் கெட்டப் போட்டப்ப எப்படி இருந்தது..?’’ என்ற ரஜினியின் கேள்விக்கு ‘‘நீங்கள்லாம் ஆரம்பத்துல அப்படி நடிச்சதைத்தான் நினைச்சுக்கிட்டோம் சார்...’’ என்று அஸ்வின்ராஜா கமென்ட் அடித்ததை ரஜினி ரொம்பவே ரசித்திருக்கிறார். ‘‘அப்பா புரட்யூசரா இருக்க, நீ காமெடியனா நடிக்க வந்தது பெரிய விஷயம்...’’ என்று கமல் பாராட்டியதையும் நெகிழ்ச்சியுடன் சொன்ன அஸ்வின்ராஜா, ‘‘உண்மையிலேயே இத்தனை பெரிய ஸ்டார்களோட வாழ்த்து கிடைச்சதுல அதிர்ஷ்டசாலிகள்தான் ‘நாங்க’...’’ என்று பஞ்ச் வைத்தார்.
வேணுஜி