கொஞ்ச நாட்களுக்கு முன்பு...
கர்நாடக சட்டசபையில் மூன்று அமைச்சர்கள் நீலப்படம் பார்த்தார்கள்.
தமிழ்நாட்டில் இரண்டு மாணவர்கள் சில மாணவிகளோடு குழுப் புணர்ச்சி கொண்ட படம் இணையதளத்தில் வெளியானது.
அந்தமானில்
ஜாரவா பழங்குடியினருக்கு உணவு வாங்கிக் கொடுத்து, அவர்களை சுற்றுலாப்
பயணிகளுக்கு முன்னால் நிர்வாணமாக ஆட வைத்தார்கள் காவலர்கள்.
பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று சீரழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
‘கள்ளக்காதலி’,
‘விபச்சாரி’ என்கிற பெயரில் யாராவது சில பெண்கள் கைது செய்யப்பட்டு,
ஒவ்வொரு நாள் செய்தித்தாளிலும் முகத்தை மூடிக் கொண்டு அல்லது தலையைத்
தொங்கப் போட்டுக் கொண்டு நிற்கிறார்கள்.
வன்புணர்ச்சியினாலும்
சந்தேகத்தினாலும் பிற தொடர்புகளினாலும் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக பிறக்கும் குழந்தைகள் குப்பைத் தொட்டிகளில்
வீசியெறியப்படுகின்றன.
தினந்தோறும் இப்படி வரும் செய்திகளைத்
தேநீர்க் கடைகளில் ருசிகரமாக வாய்விட்டுப் படிக்கிறவர்களைப் பார்க்கிறேன்.
அதைக் கவனமாகக் கேட்கிற பெரியவர்களையும் பார்க்கிறேன். செக்ஸுக்காகவே
பழக்கி வைக்கப்பட்டிருக்கிற மூளையின் இன்னொரு குணாம்சம்தான் இது.
இது
மாதிரியான பாலியல் பிறழ்வுகள் ஏன் உண்டாகின்றன? செக்ஸ் உறவுகளை எப்படிப்
பார்ப்பது? இன்றைய சமூகத்திற்குத் தலைவலியை உண்டாக்கியிருக்கிற மிகப்பெரிய
கேள்வி இதுதான்.
குழந்தைகளுக்கு பாலியல் கல்வியைப் போதிக்க வேண்டும்
என்று ஒரு விவாதம் வெகு காலமாக நடந்து வருகிறது. கூட்டங்களும் மாநாடுகளும்
கூடிக் கூடிக் கலைந்து கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி விரிவாகவும்
வெளிப்படையாகவும் விவாதிப்பதற்கு நம்மில் பலரும் பயப்படுகிறோம்; அல்லது
கூச்சப்படுகிறோம்.
சரியான
வழிகாட்டுதல் இல்லாத இந்த இடைவெளிகளில்தான், தப்பையும் தவறையும் வணிக
நோக்கத்தோடு முன்னிறுத்தும் ஊடகங்களால் செக்ஸை தப்பும் தவறுமாக உணர்ந்து
கொள்கிறார்கள் நமது குழந்தைகள். கைபேசிகளும், கணினிகளும், இன்ன பிற
ஊடகங்களும் ஆபாசத்தை நம் வீட்டுக்குள் கொண்டு வந்து கொட்டுகின்ற இந்தக்
காலத்தில், அது குறித்துப் பேசுவதற்கு நாம் ஏன் தயங்குகிறோம்? எதற்காக அதை
ரகசியமாக மூடி மறைக்கிறோம்?
நிஜமாகவே செக்ஸ் பற்றிப் பேசுவது
தவிர்க்கப்பட வேண்டியதுதானா? பருவத்தின் இயல்பான அந்த உணர்வை சுதந்திரமாக
அனுபவிக்க இயலாமல் நமது இளைஞர்களும் பெண்களும், கூக்குரலிடும் கலாசாரக்
காவலர்களுக்குப் பயந்து பயந்துதான் வாழ வேண்டுமா?
சந்தோஷம்,
துக்கம் இரண்டு நிலையிலும் மனித உயிர்களுக்கு ஒரு வடிகாலாக செக்ஸ்
இருக்கிறது. அதன் ஊற்றுக் கண்களை அடைக்கும்போது அது மன அழுத்தமாக
மாறிவிடுகிறது. மன அழுத்தம் கொண்டவர்கள் பாலியல் பிறழ்வுகளுக்கு
ஆளாகிவிடுகிறார்கள். இந்த இடத்தில்தான் குற்றவாளிகள் உருவாகிறார்களா அல்லது
உருவாக்கப்படுகிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த நூற்றாண்டின்
இணையற்ற சிந்தனையாளர் பெரியார் இது குறித்து ஒரு கருத்தை முன் வைக்கிறார்.
‘இன்று
உலகத்தில், சிறப்பாக நமது நாட்டில் இருந்து வரும் கட்டுப்பாடு, ஒழுக்கம்
முதலியவை எல்லாம் பெரிதும் இயற்கைக்கு எதிராகவும் அடிமைத்தனத்திற்கு
ஆதரவாகவும் தனிப்பட்டவர்கள் சுயநலத்திற்கேற்ற சூழ்ச்சிகளுமாகவே
இருக்கின்றன. ஜீவ சுபாவம் என்னவென்றால், உணர்ச்சியும் இந்திரியச் செயலும்
ஆசையுமேயாகும். உணர்ச்சியின் காரணமாய் பசி, நித்திரை, புணர்ச்சி மூன்றும்
முக்கிய இயற்கை அனுபவம். பொது உணர்ச்சியும், இந்திரியச் செயலும் மனிதனுக்கு
ஆசையை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றன... இதை மனிதனால் கட்டுப்படுத்த
எளிதில் முடிவதில்லை.
கட்டுப்படுத்தியவர்கள் பல லட்சத்திற்கு
ஒருவர் இருப்பாரோ என்னவோ? அந்தப்படி இல்லாத சாதாரண மனித ஜீவனின்
உணர்ச்சியையும் இந்திரியச் செயலையும் ஆசையையும் கட்டுப்படுத்தும்படியான
தாகக் கொள்கைகளை கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அவை செலாவணியாகுமா?’
காதலுக்கும்
காமத்துக்கும் பள்ளிக்கூடமும் கட்ட முடியாது; காவல் நிலையமும் கட்ட
முடியாது என்பதைக் கலாசாரக் காவலர்கள் பெரியார் வழி புரிந்து கொள்வார்கள்
என நினைக்கிறேன்.
‘கன்றும் உண்ணாமல்
கலத்திலும் நிறையாமல்
நல்ல பசுவின் நறும்பால்
நிலத்தில் சிந்தி வீணாவதைப் போல
வரிபடர்ந்த அல்குலையுடைய
என்னுடைய பேரழகு
எனக்கும் அழகு தராமல்
என் தலைவனுக்கும் இன்பம் தராமல்
பசலையால்
விரும்பி உண்ணப்படுகிறதே’
என்று குறுந்தொகையில் ஒரு தலைவி, தன் காமத்தின் வலியை உயிர்மொழி கொண்டு உணர்த்துவதாக வெள்ளிவீதியாரின் பாடல் உண்டு.
இப்படி
பெண்கள் வெளிப்படையாக இருந்த நமது சமூகத்தில் இன்று இத்தனை தடுப்புகளும்
தடுமாற்றங்களும் எப்படி வந்தன என்று புரியவில்லை. பாலியல் உறவுகளுக்கு
என்று வகுக்கப்பட்ட சட்டங்களும் விதிமுறைகளும் நடைமுறைகளும் பெண்களை
மட்டுமே குறி வைத்துத் தாக்குகின்றன. ஆண்களுக்கு வலிமையாகக் கற்பிக்கப்படாத
‘கற்பு’ என்னும் ஒரு வார்த்தை, பெண்களின் தலைகளில் மட்டும்
பாறாங்கல்லாய்க் கனக்கிறது.
‘‘ஆண் அப்படிச் செய்தால் நான் ஏன்
இப்படிச் செய்யக்கூடாது’’ என்று எதிர்க்கேள்வி கேட்கிற பெண்
அடங்காப்பிடாரியாக கற்பில்லாதவளாகப் பார்க்கப்படுகிறாள். ‘கற்பும்
வேண்டாம்; கத்தரிக்காயும் வேண்டாம்’ என்று ஒரு பெண், ஆண்களை விட்டு
தனித்தும் வாழ முடியவில்லை. அப்போதும¢ ஆயிரமாயிரம் சந்தேகக் கண்களால் அவள்
அந்தரங்கம் உளவு பார்க்கப்படுகிறது. யாரிடம் அவள் காதல் கொள்ள வேண்டும்,
யாரோடு அவள் வாழ வேண்டும் என்பதையும் ஓர் ஆண்தான் தீர்மானிப்பான் என்றால்
பெண்ணை இந்தச் சமூகம் உடலாக மட்டுமேதான் பார்க்கிறதா?
‘‘அட
பரம மூடர்களே! ஆண்பிள்ளைகள் தவறினால், ஸ்திரீகள் எப்படி பதிவிரதைகளாக
இருக்க முடியும்?’’ என்று கேட்டான் பாரதி. ஆண்கள் தவறித் தவறித்தான்
இந்தியாவில் இன்று நிறைய பெண்கள் வாழ வழியற்ற அபலைகளாகவும், பாலியல்
தொழிலாளிகளாகவும் பரிதவித்து நிற்கிறார்கள். இந்த நிலையில் நாம் செக்ஸைப்
பற்றிப் பேச வேண்டுமா, வேண்டாமா?
மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள
நாற்பது வயதைத் தொட்டு நிற்கும் பெண்களுக்கு செக்ஸ் சுரப்பிகள் அதீதமாக
சுரக்கின்றன. அப்போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்கள் பாதிப்புக்கு
உள்ளாகிறார்கள். அவர்களது பலவீனங்களைப் பயன்படுத்தி உறவு கொண்டு, அதை
மொபைல் போன்களிலும் இன்டர்நெட்டிலும் வெளிப்படுத்துகிற நரம்பு நோய் பீடித்த
ஒரு ஆண் கூட்டம் இப்போது கேரளா போன்ற இடங்களில் பெருகி வருகிறது
என்கிறார்கள். இந்த நிலையில் நாம் செக்ஸைப் பற்றி பேச வேண்டுமா, வேண்டாமா?
ஊட்டச்சத்து
என்கிற பெயரில் பதப்படுத்தப்பட்டு டப்பாக்களிலும் டின்களிலும் விற்பனை
செய்யப்படுகிற உணவு வகைகள், குழந்தைகளின் உடலில் அத்துமீறிய சக்தியைக்
கிளப்பி செக்ஸை நோக்கியே திருப்பி விடுகின்றன என்று சில ஆய்வாளர்கள்
சொல்கிறார்கள். இதனால் பிரச்னைகளில் குழந்தைகள் சிக்கித் தவிக்கும் இந்தப்
பொழுதில் நாம் செக்ஸைப் பற்றிப் பேச வேண்டுமா, வேண்டாமா?
செக்ஸைத்
தூண்டிவிடும் செயற்கையான ஊட்டச்சத்து உணவுகள், உடற்பயிற்சியில்லாமல் அசையாத
உடல் கொண்ட தொழில் முறை இவற்றால் நமது ஆண்களுக்கும் பெண்களுக்கும் செக்ஸ்
உந்துதல் சீக்கிரமே தொடங்கி சீக்கிரமே முடிந்துவிடுகின்றன என்கிறார்கள்
மருத்துவர்கள். இந்த நிலையில் நாம் செக்ஸைப் பற்றிப் பேச வேண்டுமா,
வேண்டாமா?
நெருப்பில் விழும் விட்டில்களைப் போல நமது தலைமுறைக்
குழந்தைகள் தடுமாறக் கூடாது என்றால், நாம் நம் குழந்தைகளிடம் செக்ஸைப்
பற்றிப் பேசியே ஆக வேண்டும்.
(சலசலக்கும்...)
பழநிபாரதி