1500 திரைப்படங்கள், 6000 நாடகங்கள், பல நூறு எபிசோடுகளைக் கடந்த தொலைக்காட்சித் தொடர்கள் என வாழ்நாள் முழுக்க நடித்துக்கொண்டே இருந்த எஸ்.என்.லட்சுமி இன்றைக்கு இல்லை. அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘மகான் கணக்கு’. அதில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் தரும் சமூக சேவகி கேரக்டர் அவருக்கு. ‘‘நிஜ வாழ்க்கையிலும் அவரது ஒரே லட்சியம் அதுவாகத்தான் இருந்தது’’ என்கிறார் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக தாயாய் பிள்ளையாய் அவருடன் நெருங்கிப் பழகிய நடிகை வடிவுக்கரசி. அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
‘‘விருதுநகர், தென்னல்குடி கிராமம்தான் அம்மாவுக்கு. 6 அண்ணன்கள், ஒரு அக்கானு ஏழு பேருக்கு அப்புறம் அவங்கதான் கடைக்குட்டி. வாழ்க்கையில தனக்குனு எதையும் சேர்த்து வைக்காத ஜீவன். 1000 ரூபாய் சம்பளம்னா 900 ரூபாயை உதவின்னு யாருக்காவது கொடுத்துடுற கேரக்டர். கல்யாணமே செஞ்சுக்காம கடைசி வரை அண்ணன் பிள்ளைகள், பேரன், பேத்திகள்னு வாழ்ந்துட்டாங்க. அதுலயும் 2வது அண்ணன் மகன் சங்கர் நாராயணன் மேல ரொம்ப ப்ரியம். ‘பாவல் சங்கர்’ங்கற பேர்ல ‘பேராண்மை’, ‘இயற்கை’ன்னு சில படங்கள்ல திரைக்கதை எழுதியிருக்குறார் அவர்.
லட்சுமி அம்மா கார்ல எப்பவும் வேட்டி, சேலை, பேன்ட் ஷர்ட்னு வச்சிருப்பாங்க. கஷ்டப்படுற குடும்பம் ஏதும் கண்ல பட்டா அவர்களுக்குக் கொடுக்கறதுக்காகத்தான் அது. சும்மா ஃபார்மாலிட்டிக்காக நலம் விசாரிக்கிறவங்களுக்குக் கூட சின்னச் சின்னதா ஏதாவது கொடுப்பாங்க. கிட்டத்தட்ட ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா மாதிரின்னு வச்சுக்கங்களேன்.
லட்சுமி அம்மாவுக்கு மாரியம்மானு ஒரு பொண்ணு உதவியாளரா இருந்துச்சு. பிறந்ததுல இருந்து உருவ வளர்ச்சி இல்லாம இருந்த அந்தப் பொண்ணை வளர்க்கறதுக்கு பெத்தவங்களே யோசிச்சாங்க. அம்மாதான் வளர்த்தாங்க. 11ம் தேதி, ‘தென்றல்’, ‘முந்தானை முடிச்சு’ சீரியல்களுக்கு டப்பிங் பேசிக்கிட்டு இருந்தப்போ மாரியம்மாளோட அம்மா இறந்துட்டதா தகவல் வந்துச்சு. அவசரமா கிளம்பிட்டாங்க.
அங்கேதான் பாத்ரூம்ல விழுந்து அடிபட்டுடுச்சு. சென்னைக்குக் கூட்டி வந்து சிகிச்சை கொடுத்தப்ப மூச்சுத் திணறல் வந்திருக்கு. கேள்விப் பட்டு போனப்போ, என் கையை இறுக்கமா பிடிச்சுக்கிட்டாங்க. பல்ஸ் கொஞ்சம் கொஞ்சமா இறங்கி உயிர் பிரிஞ்சுடுச்சு. அவங்க கண்ல என் முகம் பிரதிபலிச்ச அந்த நிமிஷம்... இப்பவும் மனசைப் பிசையுது!’’ என்று கண்கலங்குகிறார் வடிவுக்கரசி.
சொந்த ஊரில் நிலம் வாங்கி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் ஒன்று கட்ட நினைத்தாராம் லட்சுமி. விரைவில் அங்கு பள்ளிக்கூடம் கட்டும் முயற்சியில் வடிவுக்கரசியும், சங்கர் நாராயணனும் ஈடுபடப்போகிறார்கள். நடித்த படங்கள், நாடகங்களின் எண்ணிக்கை மட்டுமல்ல... லட்சுமி பாட்டியின் பேரப்பிள்ளைகளின் எண்ணிக்கையும் இனி ஆயிரங்களாகப் பெருகும்.
அமலன்