இத்தாலிக்கு ஒரு நீதி... இலங்கைக்கு ஒரு நீதியா...?



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                      கேரளத்தின் கொல்லம் கடற்பகுதியில் மீன்பிடித்த 2 மீனவர்களை ‘என்ரிகா லெக்ஸி’ என்ற இத்தாலியக் கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொல்கிறார்கள். சில நிமிடங்களில் ‘அலர்ட்’ ஆகிறது கேரளா. கடலோரப் பாதுகாப்புப் படை கப்பலும், கடற்படை ஹெலிகாப்டரும் துப்பாக்கிச்சூடு நடத்தி கப்பலை நிறுத்துகின்றன. பாதுகாவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து கைது செய்கிறார்கள். பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்கியது கேரள அரசு. இறந்த ஒரு கேரள மீனவரின் மனைவிக்கு மீன்வளத்துறையில் பணியும் வழங்கப்படுகிறது. கேரளக்காரரான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி நேரடியாகக் களத்தில் இறங்குகிறார். இத்தாலி தூதரை அழைத்துக் கண்டிக்கிறார்கள்.  

நன்றாகக் கவனியுங்கள்... சம்பந்தப்பட்ட கப்பல், சோனியா பிறந்த இத்தாலி(!)யைச் சேர்ந்தது. இத்தாலிய வெளியுறவு அமைச்சரே அலறிக்கொண்டு ஓடிவருகிறார்.

ஆனாலும், ‘இந்திய சட்டப்படிதான் நடவடிக்கை’ என்கிறது மத்திய அரசு.

அப்படியே கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு வந்து ‘தெற்காசிய மீனவர் தோழமை’ அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் சொல்வதைக் கேளுங்கள்.  

‘‘அரசு புள்ளிவிபரப்படி 1991 முதல் 2011 வரை சிங்கள மீனவர்கள் மற்றும் கடற்படையால் 167க்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன. 85க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். 180க்கும் அதிகமானோருக்குக் காயம். இதுவரை தாக்குதலில் சம்பந்தப்பட்ட எவர் மீதும் நடவடிக்கை இல்லை. எவரையும் கைது செய்யவில்லை. போதாக்குறைக்கு ‘தமிழக மீனவர்கள் மீதுதான் தவறு’ என்று இந்தியக் கடலோரக் காவல்படை ‘அபிடவிட்’ தாக்கல் செய்கிறது. கேரள மீனவருக்கு பாதிப்பென்றால் இத்தாலியையே எதிர்க்கத் துணிகிற மத்திய அரசு, தமிழக மீனவர்களை சாகடிக்கும் இலங்கையோடு கைகுலுக்கி நட்பு வளர்ப்பது ஏன்..?’’ 

இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் சுட்டதில் இறந்த அஜீஸ்பிங்கி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். ஆனால் கொல்லத்தில் தங்கி கேரள மீனவர்களோடு தொழில் செய்தவர். அவருக்கும் கேரள அரசு 5 லட்சம் வழங்கியுள்ளது. தமிழகம் கோரிக்கை விடுத்தால் அவரது மனைவிக்கும் வேலை வழங்குவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் உம்மன்சாண்டி. இதே சம்பவம் ஐம்பது கிலோ மீட்டர் இந்தப்பக்கம், குமரியில் நடந்திருந்தால்..?

‘‘கடந்த 10 வருடங்கள்ல நூத்துக்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள் காணாமப் போயிருக்காங்க. புயல், மழை நேரத்தில காணாமப் போனா இயற்கை பாதிப்புன்னு நம்பலாம். ஆனா, சாதாரணமா மீன்பிடிக்கப் போன பலரைக் காணல. கப்பல்கள் மோதியோ, இதுமாதிரி தாக்கப்பட்டோ தான் அவங்களும் இறந்திருக்கணும்னு சந்தேகப்படுறோம். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கிறது கடலோர காவல்படையோட வேலை. ஆனா இதுவரைக்கும் ஒரு மீனவரைக் கூட அவங்க கண்டுபிடிச்சது கிடையாது. கடல்ல காணாமப் போனவங்களை ஹெலிகாப்டர்ல தேடினாத்தான் கண்டுபிடிக்க முடியும்.

இங்கேயுள்ள கடலோரக் காவல்படைகிட்ட நவீன ரக ஹெலிகாப்டர் இருக்கு. ஆனா அதன்மூலம் தேடினா 9 லட்ச ரூபாய் செலவாகுமாம். காணாமப் போன மீனவனுக்கு நிவாரணம் கொடுத்தா 1 லட்சத்தோட முடிஞ்சிடுமேன்னு கணக்கு சொல்றாங்க...’’ என்று வருந்துகிறார் தென்னிந்திய மீனவர் சங்கத் தலைவர் கு.பாரதி.

‘‘பாகிஸ்தானுக்கும் நமக்கும் எவ்வளவோ பிரச்னை. ஆனா வழிதவறி அங்கே போயிட்டா மரியாதையா நடத்தி கோர்ட்ல ஒப்படைப்பாங்க. குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு விடுதலை பண்ணி அனுப்பிடுவாங்க. அதேமாதிரிதான் பங்களாதேஷ். இலங்கை மீனவர்களுக்கும் நமக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. சின்னச் சின்ன விவகாரங்களை நாங்களே பேசித் தீத்துக்குறோம்.. நம்ம மீனவர்கள் திசைமாறி இலங்கைக்குப் போயிட்டா அந்நாட்டு மீனவர்கள்தான் நமக்குத் தகவல் சொல்றாங்க. தூதரெல்லாம் அதுக்குப் பிறகுதான் வருவார். பிரச்னையை உருவாக்குறது இலங்கை கடற்படைதான். கடலை முழுமையா ஆக்கிரமிக்க இலங்கை முயற்சி செய்யுது. தமிழ்நாட்டு மீனவர்கள் வர்றது அவங்க ரகசிய செயல்பாடுகளுக்கு இடைஞ்சலா இருக்கு. அதனாலதான் வன்முறையில இறங்குறாங்க.

இலங்கையோட அடி மீனவர்கள் மேல மட்டுமே விழுகிறதில்லை... உண்மையில அது இந்தியாமேல விழுகிற அடி. கச்சத்தீவில சீனா ராணுவத்தினர் தங்கியிருக்கிறதா தகவல் இருக்கு. அப்பப்போ கடல்ல சீன மீனவர்கள் மீன் பிடிக்கிறதைப் பாக்க முடியுது. மெல்ல கடல்ல சீனாவோட ஆதிக்கம் பரவிக்கிட்டிருக்கு. இதைப் புரிஞ்சுக்காம பாம்புக்கு பால் வார்க்குது இந்தியா’’ என்கிறார் பாரதி.

இத்தாலி காவலர்கள் மேல் எடுத்ததுபோல் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க முடியாதா? ‘தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்’ என்று வழக்குப் போட்ட மதுரை வழக்கறிஞர் ஸ்டாலினிடம் கேட்டோம்.

‘‘நிச்சயம் முடியும். மத்திய அரசை மட்டுமே இதில் நான் குற்றம் சொல்லமாட்டேன். தமிழக அரசும் இந்த விவகாரத்தில தன்னோட பொறுப்பைத் தட்டிக் கழிக்குது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துறது யார் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இதில் எத்தனை சம்பவங்கள்ல கொலை வழக்கு பதிவு பண்ணி எப்.ஐ.ஆர் போட்டு கைது நடவடிக்கை எடுத்திருக்காங்க. எல்லா வழக்குகளும் அப்படியே தூங்குது. இலங்கை தூதரகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு ஒத்துழைப்புக் கேட்கலாம். தனிப்படை அமைத்து இலங்கை சென்று விசாரணை செய்யலாம். இலங்கைக்கும் நமக்கும் கைதி பரிமாற்ற உறவு இருக்கு. ஒவ்வொரு நாட்டுக்கும் 12 கடல் நாட்டிக்கல் மைல் கடல் எல்லை. அதுக்குப் பிறகு இருப்பது சர்வதேச எல்லை.

 இலங்கைக்கும், இந்தியாவுக்கும் உள்ள மொத்த தூரமே 13 நாட்டிக்கல் மைல் தான். இதை வச்சு எப்படி எல்லை பிரிக்கமுடியும். எல்லை தாண்டுறதா சொல்லி தாக்குதல் நடத்துறது அப்பட்டமான வன்முறை’’ என்கிறார் ஸ்டாலின்.

இத்தாலிக்கு ஒரு நீதி; இலங்கைக்கு ஒரு நீதி. கேரளாவுக்கு ஒரு நீதி; தமிழகத்துக்கு ஒரு நீதி.

இந்த விஷயத்தில் தமிழகம் கேரளாவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
வெ.நீலகண்டன்
படம்: ஆர்.சந்திரசேகர்