‘‘அப்போ எனக்கு 14 வயசு. நேரா அம்மாகிட்ட போய், ‘நீங்க நினைக்கிற மாதிரி நான் ஆம்பளை இல்லை... பெண்ணாத் தான் வாழ்ந்துட்டிருக்கேன். முழுமையா ஆபரேஷன் பண்ணிக்கிட்டு பொண்ணாவே மாறப்போறேன்’னு சொன்னேன். அம்மா மயங்கி விழுந்துட்டாங்க. பக்கத்தில நின்ன அக்கா திகைச்சுப்போய் என்னைப் பாத்தாங்க...’’
கல்கியின் வார்த்தைகளில் மென்மையும், பெண்மையும் ஊடாடுகிறது.
‘‘எவ்வளவு காலத்துக்கு அவஸ்தையை உள்ளுக்குள்ளேயே அடக்கி வைக்க முடியும்? அதான் போட்டு உடைச்சுட்டேன். ஆனா அதன் எதிர்விளைவுகள் ரொம்ப மோசமானவை’’ என்கிற கல்கி, திருநங்கை சமூகத்தின் சுடரொளி. சமூக, சட்ட உரிமைகளுக்காகவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும் உழைக்கும் போராளி. இவரது ‘விடுதலை கலைக்குழு’ உலகெங்கும் பயணித்து திருநங்கைகளின் பிரச்னைகளைப் பேசுகிறது. திருநங்கைகளை திருமண பந்தத்தில் இணைக்கும்விதமாக ‘திருநங்கை.நெட்’ இணையதளத்தையும் நடத்துகிறார். ‘நர்த்தகி’ படத்தின் வாயிலாக திரையுலகிலும் கால் பதித்துள்ள கல்கி, இந்த சிகரங்களை சுலபமாக எட்டிவிடவில்லை.
‘‘என்னை வேலூர்ல மனநல காப்பகத்தில கொண்டுபோய் விட்டுட்டாங்க.. ஒரு மாதம் அங்கே அடைஞ்சு கிடந்தேன். ‘உங்க பிள்ளைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இயற்கையாவே அவன் உடம்பளவில் ஆணாவும், மனதளவில் பெண்ணாவும் இருக்கான். அவன் போக்குல விட்டுடுங்க’ன்னு அதுக்குப்பிறகு சொல்லி அனுப்பிட்டாங்க. ஆசை ஆசையா வளர்த்த பிள்ளை இப்படி ஆகிட்டானேன்னு கவலை ஒரு பக்கம் இருந்தாலும், என்னை மனம் தளரவிடாம அம்மா அரவணைச்சுக்கிட்டாங்க. கூட்டுக்குள்ள இருக்கிற குருவிக்குஞ்சு மாதிரி பாதுகாப்பு கிடைச்சுச்சு...’’ குரலில் மென்மை கூடுகிறது.
கல்கிக்கு சொந்த ஊர் பொள்ளாச்சி. அப்பா சுப்பிரமணியன் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தினார். அம்மா, ராஜாமணி. 2 பெண்களுக்கு மத்தியில் பிறந்த ஆண் பிள்ளை. மற்றவர்களை உள்ளூரில் படிக்கவைத்த அப்பா, கல்கியை கொடைக்கானல் சர்வதேசப் பள்ளியில் சேர்த்தார். 5ம் வகுப்பு வரை சராசரியான நகர்வுகள். கல்கியின் நாவில் சரஸ்வதி நின்றாடினாள். திடீரென தொழில் நொடித்துப் போக, எல்லாம் மாறிவிட்டது. உள்ளூர் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பில் சேர நேர்ந்தது. அது ஆண்களுக்கான பள்ளி. பிரச்னை அங்கிருந்துதான் தொடங்கியது.
‘‘ஒரு பெண் தன் பெண்மையை உணர்ற மாதிரிதான் நாங்களும். 12 வயதுக்கு மேல அந்த உணர்வு பீறிட்டுக் கிளம்பும். ஆனா அது குற்ற உணர்வையோ, தாழ்வு மனப்பான்மையையோ ஏற்படுத்தாது. உள்ளூர ரசித்து அனுபவிப்போம். எங்க ஊர்ல பெண்களே லிப்ஸ்டிக் போட மாட்டாங்க. ஆனா நான் போட்டுக்குவேன்; பொட்டு வச்சுக்குவேன்; யாரும் இல்லாதபோது அக்கா உடைகளை அணிஞ்சுக்குவேன். நளினத்தோட நடனமாடுவேன். இதெல்லாம் ஆரம்பத்தில் பெரிசா தெரியலே.
வயது ஆக ஆக பெண்மை அதிகரிக்குமே... ஆண்கள் பள்ளியில படிக்கிறது மிகப்பெரிய நெருக்கடி. மனதளவில பெண்ணா இருக்கதால ஆண்கள் கழிவறைக்குப் போக வெட்கம். ஆணுருவில இருக்கதால பெண்கள் கழிவறைக்குப் போக பயம். என் நளினத்தையும் வெட்கத்தையும் பார்த்து மாணவர்கள் மட்டுமில்லாம, ஆசிரியர்களும் கிண்டல் செஞ்சாங்க. இன்னைக்கு நினைச்சாலும் கோபம் வருது. ஸ்கூலுக்குப் போகவே பிடிக்காது. படிக்கிற ஆர்வம் குறைஞ்சிடுச்சு.
இப்படி மனதளவில நொந்துபோயிருந்த நேரத்திலதான் அப்சராவைச் சந்திச்சேன். அவங்களும் திருநங்கைதான். என்னைப் பொறுத்தவரை, அவங்க என்னை மீட்க வந்த தேவதை. ஒரு நாள் மார்க்கெட்ல ஒரு பையன் கிண்டல் பண்ணிட்டான். அவன்கூட சண்டை போடுறேன். அப்போ அங்கே வந்த அப்சரா அந்தப் பையனை அடிச்சுத் துரத்திட்டு, விசாரிச்சாங்க. ‘நல்ல குடும்பத்தில பொறந்திருக்கே. வீட்டைவிட்டு ஓடிவந்திடாதே. எங்களை மாதிரி கஷ்டப்படணும். எங்க அருகாமை தேவைப்பட்டா மட்டும் வா’ன்னு சொல்லி அனுப்பி வச்சாங்க. அப்சரா அம்மாவோட தொடர்பு கிடைத்தபிறகு பெரிய விடுதலை உணர்வு கிடைச்சுச்சு.
நிறைய அவமானங்கள், தொந்தரவுகளைத் தாண்டி கல்லூரி வந்தேன். ஆண்கள் ஹாஸ்டல்லதான் இடம் கிடைச்சுச்சு. அங்கே இன்னும் தொந்தரவு. மூணு வருஷம் நரகம் மாதிரிப் போச்சு. ‘கிண்டல் செய்யறவங்க மத்தியில மதிப்போட வாழ்ந்து காட்டணும். பிரமிக்கும்படியா ஏதாவது செய்யணும்’ங்கிற லட்சியம் அப்பவே வந்திருச்சு. அதுக்கு அடிப்படை படிப்புதானே... அதனால எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டேன்!
அப்சரா அம்மா திரு நங்கைகளின் உலகத்தை அறிமுகப்படுத்தினாங்க. ஆனா அங்கே யாரும் பாதுகாப்பு உணர்வோட இல்லை. பாலியலும் பிச்சையெடுக்கிறதும்தான் ஜீவனம். ஆண்கள் அவங்களை வெறும் காமக்கழிப்பிடமா பயன்படுத்தினாங்க. சமூகம் வெறுத்து ஒதுக்குச்சு. குடும்பத்தோட அர வணைப்பில இருந்த எனக்கு அந்தக் கொடுமைகளைப் பார்த்து கோபமும், ஆவேசமும் வந்துச்சு.
இதுக்கு சினிமாவும் ஊடகமும் முக்கிய காரணம். மிருகங்களை வதைச்சா தடை செய்ற சென்சார் அதிகாரிகள், திருநங்கைகளை செக்ஸ் பொம்மை மாதிரி பயன்படுத்துறதை ரசிக்கிறாங்க. அதனால திருநங்கைகளின் குரலை எதிரொலிக்கிற ஒரு ஊடகத்தை உருவாக்க வேண்டிய தேவையை உணர்ந்தேன்...’’ என்கிறார் கல்கி.
மாஸ் கம்யூனிகேஷன் படித்த கல்கி, ‘சகோதரி’ பத்திரிகையைத் தொடங்கினார். திருநங்கைகளின் உரிமைகளை முன்னிறுத்தி நிறைய எழுதினார். படிப்பு முடிந்ததும் கோவையில் மல்டிநேஷனல் கம்பெனியில் வேலை கிடைத்தது.
‘‘என்னை ஒரு திருநங்கையா அடையாளப் படுத்தியே வேலைக்குச் சேந்தேன். மனதளவில பெண்ணாவே இருந்தாலும், உடம்பில இருந்த என் ஆண் அடையாளம் உறுத் தலாவே இருந்துச்சு. வீட்டுக்குத் தெரியாம தனியாளா போய் ஆபரேஷன் செஞ்சுக்கிட்டேன். எனக்குள்ள ஏற்பட்ட வெறித்தனமான சந்தோஷம், எல்லா வலியையும் போக்கி அசுர பலத்தைக் கொடுத்துச்சு. திரும்பவும் வேலைக்குப் போகப் பிடிக்கலே. கலை, இலக்கியம் சார்ந்து வேலைசெய்ய ஆசைப்பட்டேன்.
ஆரோவில் போய் அங்குள்ள ‘தியேட்டர் குரூப்’ல நடிப்புப் பயிற்சி, இசைப் பயிற்சி எடுத்தேன். சென்னையில திருநங்கைகளுக்கு எதிரா நடந்த கொடுமைகளைப் பாத்து கிளம்பி வந்துட்டேன். ‘சகோதரி’ அமைப்பைத் தொடங்கி, திருநங்கைகளை ஒருங்கிணைச்சேன். சுயமரியாதை கேட்டு போராடத் தொடங்குனோம். வேலைவாய்ப்பு, மனநல, உடல்நல ஆலோசனைகள், கவுன்சலிங்னு பல தளங்கள்ல வேலை செஞ்சோம்.
sahodari.org இணையதளம் மூலமா பல திருநங்கைகளுக்கு நல்ல துணைகள் கிடைச்சுச்சு. திக்குத் தெரியாம தவிக்கிறவங்களுக்கு 9677187144ங்கிற எண் மூலமா கவுன்சலிங் கொடுக்கிறோம்...’’ தாம் செய்யும் பணிகளை அடுக்குகிறார் கல்கி.
திருநங்கைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி நீதிபதிகள் மாநாட்டில் ஆணித்தரமாகப் பேசிவிட்டு வந்திருக்கிறார் கல்கி. மனித உரிமை சார்ந்த இவரது பணிகளைப் பாராட்டி, அமெரிக்க அரசு தங்கள் நாட்டுக்கு அழைத்து கௌரவித்திருக்கிறது. அண்மையில் ‘நர்த்தகி’ பட விழாவில் பங்கேற்ற கல்கியின் அம்மா ராஜாமணி, ‘‘கல்கியைப் பெற்றதற்காக பெருமைப்படுகிறேன். தயவுசெய்து திருநங்கைகளாகப் பிறக்கும் பிள்ளைகளை கொடுமைப்படுத்தாமல் அவர்கள் போக்கில் வளர விடுங்கள். அந்தப் பிள்ளைகளுக்கு உள்ளேயும் ஒரு கல்கி இருக்கலாம்..’’ என்று கண்ணீர் மல்கப் பேசி கல்கியை கட்டியணைத்துக் கொண்டார்.
கல்கியின் வெற்றிக்கு அந்தத் தருணங்கள்தான் சாட்சி.
வெ.நீலகண்டன்
படங்கள்: லோகநாதன்