கால வெள்ளம் அடித்துவந்த கரடுமுரடான கல், அழகாக உருமாறி கூழாங்கல்லானது
போல செழித்து நிற்கிறது அடையார் ஆனந்தபவன். ஒரு இடத்தில் ஒரு கடையைத் தரமாக
நடத்துகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். நிறைய கிளைகளைத் திறக்கிறபோது தரம்
குறைந்துவிடும். இந்தக் கருத்தை மாற்றி அமைத்ததுதான் வெங்கடேசராஜா,
ஸ்ரீனிவாசராஜா சகோதரர்களின் வெற்றி. வாழ்வில் உயரம் தொட்ட பிறகும் தொடர்கிற
கடுமையான உழைப்பு அவர்களைத் தொடர்ந்து முன்னேற்றிக் கொண்டிருக்கிறது.
அப்பாவின் முயற்சிகள் சந்தித்த தோல்விகளையும், அதிலிருந்து கற்ற பாடங்களால்
அடைந்த முன்னேற்றங்களையும் தொடர்கிறார் ஸ்ரீனிவாசராஜா.
‘‘பிள்ளைகளை
வச்சுக்கிட்டு மொழி தெரியாத மும்பையில் இருக்க வேண்டாம் என்கிற அம்மாவின்
கருத்துக்கு செவிசாய்த்தார் அப்பா. கும்பகோணத்திலிருந்து பாத்திரங்களை
வாங்கி விற்பனை செய்த தொழில் சூடு பிடிக்கிற நேரத்தில், அம்மாவுக்காக ஊர்
திரும்பினார். ஏதேனும் தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று
சிறுவனாக இருந்தபோதே சென்னைக்குக் கிளம்பி வந்தவரை, மீண்டும் சொந்த ஊருக்கே
வர வைத்தது விதி. விவசாயம் செய்ய மாட்டேன் என தாத்தாவிடம் சண்டை போட்டவர்,
விவசாயம் செய்ய வேண்டிய நிலை வந்தது. அனுபவசாலிகளே விவசாயத்தில் லாபம்
பார்க்கத் தடுமாறும்போது, எந்த அனுபவமும் இல்லாமல் கலப்பையைப் பிடித்த
அப்பாவுக்கு பெரிய நஷ்டம் வந்து சேர்ந்தது.
தெரியாத தொழிலை மட்டும்
நம்பி இருக்காமல், தெரிந்த தொழிலை ராஜபாளையத்திலேயே செய்யலாம் என்கிற
முடிவுக்கு வந்தார். இருக்கும் பணத்தை எல்லாம் போட்டு, ‘ஸ்ரீகுரு ஸ்வீட்ஸ்’
என்ற இனிப்பு பலகாரக் கடையைத் தொடங்கினார். விடிவு வரும் என்று தொடங்கிய
தொழிலில் தொடர்ந்து வில்லங்கம் வந்தது. ‘பிசினஸ் என்றால் ஏமாற்றிப்
பிழைப்பது’ என்ற தாத்தாவின் எண்ணத்தைப் பொய்யாக்குவதற்காக உண்மையாகத்
தொழில் செய்ய நினைத்தவருக்குப் பல சவால்கள் காத்திருந்தன. போட்ட முதலீடு
கைக்கு வந்து சேர்ந்தால் போதும் என்கிற நிலையில் நேரமும் உழைப்பும்
வீணாகிக்கொண்டே இருந்தது.
இன்னொரு பக்கம் விவசாயத்தில் லாபம் தரும்
பணப்பயிரான கரும்பை விதைத்துவிட்டு, பெரும் கஷ்டத்தை அறுவடை செய்தார்.
பெருமழையில் பயிர் மூழ்கி வாழ்வைத் தொலைத்தவர்களின் பட்டியலில் அப்பாவின்
பெயரும் சேர்ந்தது. தெரியாத உழவும் கைவிட, தெரிந்த ஸ்வீட் கடையும் லாபம்
தராமல் போக, இனி உள்ளூரில் பிழைக்க முடியாது என்கிற நிலை உருவானது.
பெங்களூரில் நிறைய தமிழர்கள் இருப்பதை அறிந்து, உறவினர்கள் உதவியோடு
முகவரியை அங்கு மாற்றினார். பெங்களூர் லட்சக்கணக்கான தமிழர்களின்
வாழ்விற்கு ஆதாரமாக இருந்தது. கட்டிட வேலை முதல் காய்கறி விற்பது வரை
வாழ்வளித்த ஊருக்கு தங்கள் உழைப்பால் வந்தனம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
தமிழர்கள்.
ஸ்வீட்
கடை ஆரம்பிக்கும் முயற்சிக்கு கையில் முதலீடு இல்லை. கடையைப் பிடித்து,
அட்வான்ஸ் கொடுத்து, பலவிதமான இனிப்புகளைச் செய்து வைக்க வேண்டும். கடைக்கு
ஈக்கள் மிகப்பெரிய எதிரிகள். ஈக்கள் மொய்த்தால் பொருள் வாங்கிச் செல்லும்
வாடிக்கையாளர்கள் தொற்று நோய்களுக்கு ஆளாவார்கள். அதனால் கடையின் பெயர்
கெட்டுப்போகும். உயிர் பிழைப்பதற்குக் கடைசி வாய்ப்பாக வேறொரு ஊருக்கு
வரும்போது, நல்ல பெயருடன் தொழில் செய்வது அவசியம். பண்டங்களை ஈக்கள்
மொய்க்காமல் இருக்க, கண்ணாடி ஷோகேஸ்கள் செய்ய வேண்டும். பணியாளர்களை
அமர்த்த வேண்டும். பெங்களூர் போன்ற மாநகரத்தில் நாங்கள் குடும்பம் நடத்த
ஆகும் செலவைவிட அதிகமான சம்பளம் தந்தால்தான் வேலையாட்கள் கிடைப்பார்கள்.
அம்மாவின்
26 சவரன் நகை முதலீடாக மாறியது. ‘உன் புருஷனால படுற கஷ்டமெல்லாம் போதாதா?
உள்ளூர்ல நாலு காசு சம்பாதிக்க முடியலை. பெங்களூர்ல போய் என்ன சாதிச்சிட
முடியும்? உள்ளதும் போயிடும்’ என அம்மாவுக்கு பலர் அறிவுரை தந்தார்கள்.
அப்பாவின் காதுபட பழித்துப் பேசியவர்களும் உண்டு. கண்கலங்காமல் காப்பாற்ற
வேண்டிய மனைவியின் நகைகளை வாங்கி தொழில் தொடங்க அப்பாவுக்கு
தர்மசங்கடமாகவும் இருந்தது. ஆனால் அம்மா தானாக முன்வந்து அத்தனை நகைகளையும்
கழற்றித் தந்தார். முதல் தலைமுறையில் தொழில் தொடங்கி யாரேனும் ஜெயித்து
முன்னுக்கு வந்தால், அதில் அம்மா, மனைவி, சகோதரி என ஏதோ ஒரு பெண்ணின் நகையை
விற்றோ, அடகு வைத்தோ வாங்கிய பணத்தின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கும்.
பெங்களூரில்
ஜோராக புதிய ஸ்வீட் ஸ்டால் தொடங்கப்பட்டது. புது நம்பிக்கையோடு உழைக்க
ஆரம்பித்தார் அப்பா. அவருக்கு உறு துணையா அண்ணன் வெங்கடேசராஜாவும் தோள்
கொடுத்தார். தரமான, ருசியான இனிப்புகளை வாங்க மக்கள் தயாராக இருந்தாங்க.
‘கடவுள் கண்ணைத் திறந்துட்டார்’ என உற்சாகப்பட்ட எங்களின் முதலுக்கே மோசம்
வந்தது. பெங்களூர் நகரம் அடிக்கடி கலவர பூமியானது. தமிழர்கள் உயிர்
பிழைப்பதற்கே போராட வேண்டிய நிலையில், தொழில் செய்து நல்ல நிலைக்கு
உயர்வதெல்லாம் கனவாகிற நிலை உருவானது. நினைத்த நேரத்தில் ஒரு கும்பல்
வந்து, கடையை மூடச்சொல்லி உத்தரவு போடும். எப்போது கடை திறப்போம்; எப்போது
மூடுவோம் என்பதே தெரியாத நிலை. சாப்பிடும் பொருட்களுக்கு நாளாக நாளாக ஆயுள்
குறைவு. ‘சூடா பக்கோடா குடுங்க’ எனக் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு
ஒரு வாரத்து பக்கோடாவைத் தந்தால் வாங்குவார்களா?
அத்தனை
தோல்வி களையும் நஷ்டங்களையும் தாங்கிக்கொண்ட அப்பாவால், மனைவியின் நகைகள்
ஏலத்திற்கு வந்தபிறகு நம்பிக்கையோடு இருக்க முடியவில்லை. அவமானத்தில்
கூனிக்குறுகி, தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார்.
ராஜபாளையத்திலிருந்து பெங்களூர் போன நான், கம்பீரமான அப்பாவின் கண்ணீரை
முதன்முதலாகப் பார்த்தேன். சின்னப்பையன் தேற்ற வேண்டிய நிலையில் இருந்த ஒரு
தகப்பனின் மனநிலையை நினைத்தால், இப்போதும் எனக்குள் நடுக்கம் வந்துவிடும்.
அந்த இரவு நான் அவரைப் பார்க்காமல் போயிருந்தால், அடையார் ஆனந்தபவன்
என்கிற நிறுவனம் இன்று இல்லாமல் போயிருந்திருக்கும். உச்சபட்ச சோதனைக்
காலம் அது. ‘எவ்வளவு கஷ்டம் தந்தாலும் கடவுள் கைவிடமாட்டார்’ என்கிற
நம்பிக்கை பொய்யாகவில்லை. என்னை அனுப்பி அப்பாவின் மனநிலையை மாற்றிய
கடவுளின் கருணையை எண்ணி எப்போதும் வணங்குகிறேன்.
‘நகை போனால்
போகட்டும்; அதுபோல பத்துமடங்கு நீங்க எனக்கு சம்பாதிச்சுப் போடமுடியும்’ என
நம்பிக்கை தந்தார் அம்மா. பெங்களூரில் ஊதுவத்தி விற்பனை செய்த நண்பர்
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். ‘இதேபோல கலவரம் நடந்திட்டிருந்தா
பொழப்பு நடக்காது. சென்னைக்குப் போறேன். நீயும் வந்துடு திருப்பதி’ என
அப்பாவையும் அழைத்தார். நான் பெங்களூர் கடைக்குப் பொறுப்பெடுத்தேன்.
அப்பாவும் அண்ணனும் சென்னை வண்ணாரப்பேட்டையில் கடை போட்டனர். இரண்டு
கடையிலும் நல்ல வியாபாரம். இருள் விலகி வெளிச்சம் வருவது போல, கஷ்டங்கள்
நீங்கி லாபம் கிடைக்க ஆரம்பித்தது. கண்ணாடி ஷோகேசில் பொருள்களை வைத்து
விற்பனை செய்வதால், நம்பிக்கையோடு மக்கள் தேடி வந்தார்கள். வண்ணாரப்பேட்டை
கடையை அண்ணன் வெங்கடேசராஜா பொறுப்பெடுக்க, அப்பா சென்னை அடையாறு பகுதியில்
இன்னொரு கிளை திறந்தார். சினிமாவில் வருவது போல ஒரே பாட்டில்
பணக்காரராகவில்லை என்றாலும், ஒவ்வொரு படியிலும் நல்ல வளர்ச்சி இருந்தது.
தரமும்
ருசியும் எங்களின் அடையாளமானது. பொதுவாக நம் பகுதியில் வட இந்திய
இனிப்புகள் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் வட இந்திய, தென் இந்திய
இனிப்புகள் ஒரே கடையில் கிடைக்காது. வாடிக்கையாளர்கள் தனித்தனியாகப்
பிரிந்து இருந்தனர். சென்னையில் பாத்திரம் கழுவும்போது அச்சுதன் நாயரிடம்
கற்ற தென்னிந்திய ரெசிபிகளும், கஷ்ட காலத்திலும் மும்பையில் கற்ற வட இந்திய
ரெசிபிகளும் கொண்டு புதிய புதிய ஸ்வீட் வகைகளை அப்பா உருவாக்கினார்.
அடையார் ஆனந்தபவன் போனால் வட இந்திய, தென்னிந்திய இனிப்புகளை ஒரே இடத்தில்
வாங்கமுடியும் என்கிற வசதி எங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை
உயர்த்தியது. ‘எங்க ஊரில் வந்து கடை போடுங்க’ என்று வாடிக்கையாளர்கள்தான்
அழைப்பு விடுத்து கிளைகள் பரவக் காரணமாக இருந்தார்கள்.
இன்று
வெளிநாடுகளில்கூட அடையார் ஆனந்தபவனின் கிளைகள் உள்ளன. 26 சவரன் நகையை
மீட்கமுடியாமல் ஏலத்தில் பறிகொடுத்த நாங்கள், இப்போது 350 கோடி ரூபாய்க்கு
வர்த்தகம் செய்கிறோம். 67 கிளைகள், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் என
வளர்ந்திருக்கிறோம். உணவுத்துறையில் இருக்கிற அத்தனை ஹைடெக்
இயந்திரங்களையும் தொழில்நுட்பங்களையும் கொண்டு உணவு தயாரிக்கிறோம்.
கடவுளின் கருணையும் அப்பாவின் உழைப்பும், வாடிக்கையாளர்களின் ஆதரவும்
எங்களைத் தொடர்ந்து ஏணியில் ஏற்றுகிறது...’’
நன்றியுணர்வோடு
பேசுகிறார் ஸ்ரீனிவாசராஜா. பிள்ளைகளின் வளர்ச்சியைப் பார்த்து, சிலைகளிலும்
பெருமிதமாக புன்னகைக்கிறார்கள் பெற்றோர். கரடுமுரடான பாதைகளில் நடந்து
நடந்து திருப்பதி ராஜாவின் பாதங்கள் தேய்ந்தாலும், பிள்ளைகளுக்கு நல்ல பாதை
அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
(திருப்பங்கள் தொடரும்...)
த.செ.ஞானவேல்
படங்கள்:புதூர் சரவணன்