‘
‘நம்ம ஊர்ல பெருசு ஒண்ணு இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டுக் கெடந்துச்சே... என்னய்யா ஆச்சு?’’
‘‘அட, அவர நம்ம சாமி வீட்டுக்குக் கொண்டு போயிட்டாங்கப்பா. அந்த வீட்டுக்குள்ள தான் எந்த உசுரும் போகாதே. மூச்சு பேச்சில்லாம கிடந்தவரு, இப்ப தெம்பா பேசுறாராம்!’’
இப்படி ஒரு டயலாக்கை சினிமாவில் கேட்டால் கூட நம்ப மாட்டோம். ஆனால், நிஜமாகவே இப்படிப்பட்ட அமானுஷ்ய உரையாடல்களால் நிறைந்து கிடக்கிறது அப்பனூத்து கிராமம். இந்த ஊரில் ‘சாமி வீடு’ என்று
பயபக்தியோடு அழைக்கப்படும் ஒரு சாதாரண ஓட்டு வீடு, மரணத்தின் சுவடுகள் படியாத அதிசய இடமாக இருக்கிறது. உடல் நலமில்லா தவர்களை குணமாக்குகிறது. உயிர் பிரியும் தருணத்தில் இருப்பவர்களை, தூரத்து உறவுகள் வந்து பார்க்கும்வரை பத்திரமாக வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கிராமத்து பாரம்பரிய ஐ.சி.யூவாக விளங்கும் அந்த வீட்டைப் பற்றி ஒன்லைன் கேட்டதும், விவரங்கள் தேடி ஸ்பாட்டுக்கு விரைந்தோம்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியிலிருந்து 22 கி.மீ. தூரத்தில் உள்ளது அப்பனூத்து. ஆயிரத்து 500 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் எல்லா இடத்துக்குமே சாமி வீட்டிலிருந்துதான் வழி சொல்கிறார்கள். அந்த சாமி வீட்டுக்கே வழி கேட்ட நம்மை ஏற இறங்கப் பார்த்தார்கள்.
‘‘சாமி வீடுன்னா, சாமி குடியிருந்த வீடுங்க. 300 வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊரையே உலுக்கின ஒரு நோயை விரட்டின சாமி அவரு!’’ என்று ஆச்சர்ய இன்ட்ரோ கொடுத்தார் முத்துசாமி என்ற முதியவர். ‘‘இந்த ஊருக்கு அப்ப ஒரு சாமியாரு வந்தாரு. கையில ஒரு தடியும் சொம்பும் வச்சிருந்தாரு. நெத்தியில நாமமும் கழுத்துல மாலையும் போட்டிருந்தார்னு சொல்லுவாங்க. ‘எனக்கு தங்கறதுக்கு எடம் கொடுங்க’ன்னு கேட்டிருக்காரு. ஊர்க்காரங்க அவருக்கு இந்த வீட்டையும் ஒரு போர்வையையும், கட்டிலையும் தந்தாங்களாம்.
‘நீங்க யாரு?’னு கேட்டதுக்கு, அவரு ‘திருமலை பகவான்’னு சொன்னாராம். ஜனங்க அவர திருமலசாமி, பகவான் சாமின்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அந்த நேரத்துல நரம்புச் சிலந்தி நோய் எங்களையும் அக்கம் பக்கத்து ஊருகளையும் பாடா படுத்தியிருக்கு. (சுகாதாரமில்லாத தண்ணீர் மூலம் பரவிய கொடூரமான ஒரு நோய் இது!) அப்பனூத்து, கத்திரிக்காபாளையம், வேலூர், பழநினு எல்லா இடத்துலயும் ஜனங்க ரொம்ப அவதிப்பட்டிருக்காங்க. பகவான் சாமி ஒரு எடத்தைக் காட்டி, ‘இங்க கிணறு வெட்டுங்க’ன்னாராம். ஜனங்க வெட்டியிருக்காங்க. அங்க வத்தாம தண்ணி வந்துச்சாம். ‘இந்த தண்ணிய குடிங்க... சீக்கு வராது... சரியாயிரும்’னாராம். அதுக்கப்புறம் அந்த நோய் இந்த ஏரியாவை விட்டே ஓடிப் போயிருச்சாம். இப்பவும் அந்த சாமி கெணத்துல தண்ணி ரொம்பிக்கிட்டேதான் இருக்கு.
அந்தக் காலத்துல உசுருக்கு போராடுறவுங்களைக் கூட பகவான் சாமி இந்த வீட்டுல வச்சு குணமாக்குவாராம். பார்க்க வர்றவங்களுக்கும் மருந்து கொடுப்பாராம். ‘இந்த வீட்ல எந்த உசுரும் போகாது’னு அவரு அடிக்கடி சொல்லுவாராம். நோய் நொடி இல்லாம இந்த கிராமம் நல்லானதும், ஒரு நாளு பகவான் சாமி கிளம்பி எங்கியோ போய்ட்டாராம். அவரு வச்சிருந்த தடி, சொம்பு, மாலையையெல்லாம் அவரு விரும்பின மாதிரியே திருப்பதி கோயிலுக்குக் கொடுத்துட்டாங்க. அவரு போனாலும் அவரு வாழ்ந்த வீடு எங்களுக்கு இன்னும் சாமி வீடாத்தான் இருக்கு. தலமுறை தலமுறையா எங்க நோய்நொடியை எல்லாம் சொகமாக்கிட்டுத்தான் வருது...’’ என்று அவர் பெருமூச்சோடு முடித்தார்.
கிட்டத்தட்ட போதிதர்மன் கதை போலவே இருக்கும் இந்த சரித்திரம் நம்மை மேலும் ஆர்வப்படுத்த, ‘சாமி வீட்டை’ பராமரித்து வரும் ஜெகதீசன் நம்மை அந்த வீட்டுக்குள் அழைத்துப் போனார். ‘‘சாகா வீடுன்னும் இதைச் சொல்லுவாங்க. நோயில கஷ்டப்படறவங்களை இங்கே தூக்கிவந்து வச்சா உருசு போகாம காப்பாத்தும். இந்த வீட்டுல இருக்கிற வரைக்கும் தங்கற உசுரு, வெளிய கொண்டு வந்தா பிரிஞ்சிடும்.
சமீபத்துல கூட முத்துவேல் அய்யன்ங்கறவர் ரொம்ப முடியாம சாகற மாதிரி இருந்தார். ஆனா அவரு சொந்த பந்தமெல்லாம் வர நாலஞ்சு நாள் ஆகும்னு இருந்துச்சு. இந்த வீட்டுல தூக்கிவந்து வச்சாங்க. ஒன்பது நாள் அவரு உசரு நின்னுச்சு. எல்லாரும் வந்து பார்த்த பின்னாடி வெளில கொண்டு வந்தோம். ஜீவன் போயிருச்சு. இப்படி எத்தனையோ பேருக்கு நடந்திருக்கு. எவ்வளவு சீரியஸான கேஸா இருந்தாலும் சரி... இந்த வீட்டுக்குள்ள இதுவரைக்கும் யாருக்கும் ஜீவன் பிரிஞ்சதே இல்ல’’ என்கிறார் ஜெகதீசன்.
உள்ளே எந்தப் பொருளும் இல்லாமல், கற்பூரம், விளக்கு என்று வழிபாட்டு அடையாளங்களும் இல்லாமல் அமைதியாக, சுத்தமாக தியான மண்டபம் போலிருக்கிறது வீடு. சாமி வீட்டை மாற்றி அமைக்கக் கூடாது என்ற சென்டிமென்ட்டால் மின்சார இணைப்பு கூட கொடுக்கவில்லை. ஆனாலும், வியர்க்காதபடி உள்ளே குளுமை குடிகொண்டிருக்கிறது. ‘‘இந்த வீடு மட்டுமில்லங்க. பகவான் சாமி வெட்டி வச்ச கிணத்துல யாராச்சும் தவறி விழுந்துட்டாலோ, தற்கொலை பண்ணிக்க குதிச்சாலோ கூட உசுரு போகாது. காப்பாத்தி விட்டுரும். அப்படி எவ்வளவோ நடந்திருக்கு’’ என்கிற அந்த ஊர் மக்களின் கண்களில் அறியாமையைப் பார்க்க முடியவில்லை.
அவர்கள் நம்மிடம் பார்க்கிறார்கள் அந்த அறியாமையை!
பா.கணேசன்