பவர் கட்டால் பறிபோகும் பல லட்சம் வேலைகள்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                தமிழக மக்கள் இதுவரை இப்படி ஒரு துன்பத்தை எதிர்கொண்டதில்லை. தூங்க முடியவில்லை... சமைக்க முடியவில்லை... பிள்ளைகள் படிக்க முடியவில்லை. மாநிலமே இருண்டு கிடக்கிறது. தொழில்கள் முடங்கியதால் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையில்லை. பல கோடி நஷ்டத்தால் முதலாளிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். 

சென்னைக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு 2 மணி நேரம்தான். பிற மாவட்டங்களில் 8 முதல் 10 மணி நேரம் மின்சாரம் இல்லை. தமிழகமே இயல்பைத் தொலைத்துவிட்டுத் தவிக்கிறது. குறிப்பாக திருப்பூர், கோவை மாவட்டங்கள். ஏற்கனவே சாயப்பட்டறை விவகாரம், நூல் விலை உயர்வால் பின்னடைவைச் சந்தித்துள்ள இம்மாவட்டங்கள் மின்தடையால் அதிகபட்ச நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.    

தறியிலிருந்து பேக்கிங் வரை எல்லாத் தொழிலுக்கும் மின்சாரம்தான் அடிப்படை. இங்கு இரண்டரை லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. தினமும் 1 கோடியே 50 லட்சம் மீட்டர் துணி உற்பத்தியானது. மின்தடை இதைப் பாதியாக குறைத்து விட்டது. ஏறக்குறைய இதேநிலைதான் எல்லா தொழில்களுக்கும்.

‘‘திருப்பூர்ல சுமார் ஆயிரம் பிரின்டிங் நிறுவனங்கள் இருக்கு. ஒரு நாளைக்கு 5 கோடி பீஸ் பிரிண்டாகுது. 50 ஆயிரம் தொழிலாளர்கள் இதை நம்பி இருக்காங்க. கரன்ட் எப்போ போகும், எப்போ வரும்னே தெரியலை. காலையில 3 மணி நேரம், மதியம் 3 மணி நேரம், இரவு 4 மணி நேரம் கட்டாகுது. ஓடிக்கிட்டிருக்கும்போதே திடீர்னு கரன்ட் கட்டாகிறதால இயந்திரங்கள் கெட்டுப்போகுது. அதற்கான பாகங்கள் வெளிநாட்டிலதான் கிடைக்கும். வர 15 நாட்களாகும். அதுவரைக் கும் வேலை செய்யமுடியாது. ஜெனரேட்டர் வச்சு தொழில் செய்யறதும் சிரமம். சாதாரணமா ஒரு பீஸுக்கு 50 பைசா செலவானா, ஜெனரேட்டர் வச்சா 2 ரூபா செலவாகும். ஒப்பந்த விலையை மீறி வாடிக்கையாளர்கிட்ட கூடுதல் தொகையைக் கேட்கமுடியாது. அதனால பல நிறுவனங்களை மூடிட்டாங்க. தொழிலாளர்கள் வேலையில்லாம தவிக்கிறாங்க. வாரத்தில ஒருநாளை மின் விடுமுறை நாள்னு அறிவிச்சு, மற்ற நாட்கள்ல முழுமையா மின்சாரம் கொடுத்தா ஓரளவுக்கு வேலை செய்யமுடியும்’’ என்கிறார் திருப்பூர் ‘டேக்பா’ அமைப்பின் தலைவர் ஸ்ரீகாந்த்.

இம்மாட்டங்கள் மூலம் 6000 கோடி ரூபாய் உள்நாட்டு வருமானமும், 15000 கோடி ரூபாய் ஏற்றுமதி வருமானமும் கிடைக்கின்றன. சர்வதேச பின்னலாடை மார்க்கெட்டில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை என போட்டிகள் இருந்தாலும் தரத்தில் திருப்பூர், கோவை துணிகள்தான் நம்பர் 1. அதனால் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு. தற்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி சீனாவும், பங்களாதேஷும் நம் கஸ்டமர்களை வளைப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் சரக்குகள் இந்தியா முழுதும் செல்கின்றன. சரியான நேரத்துக்கு சரக்கைக் கொடுக்க முடியாததால் அந்த கஸ்டமர்களும் மேற்கு வங்கம், கர்நாடகா, குஜராத் மாநிலங்களுக்குச் செல்கிறார்கள்.

‘‘கடந்த 1 மாதமா ஆர்டர்படி சரக்கை அனுப்பமுடியலே. 30 நாள்ல பாத்த வேலைக்கு 50 நாள் தேவைப்படுது. கோர்ட் ஆர்டர் இருக்கறதால டையிங் வேலைகள் இங்கே நடக்கிறதில்லை. வெளிமாநிலங்கள்ல டையிங் பண்ணித்தான் துணிகள் இங்கே வருது. இந்த லட்சணத்துல இப்போ கரன்ட் கட் வேற. வெளிமாநிலங்கள்ல இருந்து பிழைப்புதேடி இங்கே வந்த நிலைமாறி, இங்கே யிருந்து வெளிமாநிலங்களுக்குப் போற நிலை வந்திருச்சு...’’ என்று வருந்துகிறார் ‘சிஸ்மா’ அமைப்பின் தலைவர் பாபுஜி. கடந்த 2 மாதங்களில் திருப்பூரிலிருந்து 32 சதவீத சிறு, குறு தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்குச் சென்றுள்ளதாக சொல்கிறார் பாபுஜி.
Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
‘‘குஜராத் போன்ற மாநிலங்களில் 24 மணி நேர தடையற்ற மின்சாரம் கிடைக்கிறது. அதனால் பல நிறுவனங்கள் அம்மாநிலத்தை நோக்கி நகர்கின்றன’’ என்கிறார் கோவை ‘கொடிசியா’ அமைப்பின் தலைவர் கந்தசாமி. ‘‘நோக்கியா, ஹூண்டாய், ஃபோர்டுன்னு வெளிநாட்டுக் கம்பெனிகளை எல்லாம் வரவேற்று தடையற்ற மின்சாரம் கொடுக்கிறாங்க. ஆனால் வேலைவாய்ப்புகளையும், வருமானத்தையும் ஈட்டித் தர்ற உள்நாட்டு நிறுவனங்களுக்கு மின்தடை செய்றாங்க. பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசே கேள்விக்குறியா மாத்திருச்சு. நஷ்டத்தை தாக்குப்பிடிக்க முடியாததால நிறையப் பேர் இங்கிருந்து குஜராத், கர்நாடக மாநிலங்களுக்கு தொழிற் சாலைகளை மாத்திக்கிட்டிருக்காங்க. அரசு நடவடிக்கை எடுக்காட்டி கோவையின் பொருளாதாரம் குலைந்து விடும்...’’ என்கிறார் கந்தசாமி.

பல்வேறு தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைவில் ‘திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு’வை உருவாக்கி போராட்டங்களை முன்னெடுத்து வரும் செந்தில்குமார், ‘‘வேலைவாய்ப்பும், வருமானமும் தரும் இம்மாவட்டங்களை பாராமுகமாக நிர்வகிக்கிறது அரசு’’ என்று கொதிக்கிறார்.

‘‘பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் 1800 மெகாவாட் மின்சாரத்தை தடையில்லாமல் கொடுக்கிறாங்க. அந்த நிறுவனங்கள்ல 3600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யிற அளவுக்கு ஜெனரேட்டர் வசதி இருக்கு. அவங்க வருமானத்தை ஒப்பிடும்போது இந்த மின்சார உற்பத்திக்கான செலவு பெரிய விஷயமில்லை. அவங்களுக்கும் இதுபோல 10 மணி நேர மின்தடையை அமல்படுத்தினால் 1000 மெகாவாட் உபரியாக கிடைக்கும். அதை இம்மாவட்டங்களுக்குக் கொடுக்கலாம். தொழிலாளிகள் வயித்துல அடிக்கக்கூடாது...’’ என்று கோபப்படுகிறார் காமராஜ்.

கோவை டேக்ட் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ், ‘‘இங்கே 5000 சிறுதொழில் நிறுவனங்கள் கடந்த 1 மாதமாக மூடிக்கிடக்கின்றன’’ என்கிறார். அவற்றில் வேலை செய்த 50 ஆயிரம் தொழிலாளிகளின் நிலை பற்றியும் கவலைப்படுகிறார்.

பின்னலாடைத் தொழில் மட்டுமின்றி பாத்திர உற்பத்தி, நகைக்கூடங்கள், மின்மோட்டார், பம்ப் உற்பத்தி, உதிரிப் பாகங்கள் தயாரிப்பு என பல தொழில்கள் முடங்கிக்கிடக்கின்றன. ‘‘பாத்திர உற்பத்தி குறைந்ததால் கடந்த 20 நாட்களில் 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ எனும் பாத்திரத் தொழிலாளர் சங்க செயலாளர் ரங்கராஜ், ‘‘எனது 30 வருட தொழில் அனுபவத்தில் இப்படியொரு நெருக்கடி ஏற்பட்டதில்லை’’ என்கிறார்.

சரி... மின்தடை எப்போது சரியாகும்..?

‘‘தற்போதைக்கு வாய்ப்பே இல்லை’’ என்கிறார் ‘பவர் எஞ்சினியர் சொசைட்டி ஆப் தமிழ்நாடு’ அமைப்பின் தலைவரும், ஓய்வுபெற்ற மின்வாரியப் பொறியாளருமான எஸ்.காந்தி.

‘‘இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் அடிப்படை, தனியாரிடம் மின்சார உற்பத்தியை வழங்கியது தான். தமிழகத்தில் 7 தனியார் நிறுவனங்கள் 1170 மெகாவாட் மின்சாரத்தை தயாரித்து மின்வாரியத்துக்கு வழங்குகின்றன. 7 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகிறது மின்வாரியம். இந்நிறுவனங்களுக்கு பெருந்தொகையை வாரியம் பாக்கி வைத்திருக்கிறது. ஜனவரி 31ம் தேதி 5900 கோடி ரூபாயை மின்வாரியத்துக்கு ஒதுக்கியது அரசு. இந்த சூழலை எதிர்பார்த்த 4 தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள், ‘எங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை தரும்வரை மின்சாரம் தர மாட்டோம்’ என்று கூறி பிப்ரவரி 1ம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இதனால் 737 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை. இப்போதைய மின்தடைக்கு அதுதான் காரணம்.

தமிழகத்தில் 6300 நிறுவனங்கள் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. அவர்களிடம் பெரிய அளவில் மின்சார உற்பத்தி மையங்கள் இருக்கின்றன. எனவே அந்நிறுவனங்களின் மின்சாரத்தை வெட்டி பிற பகுதிகளுக்கு வழங்கி ஓரளவுக்கு நிலையை சமாளிக்கலாம். ஆனால் இது தற்காலிகத் தீர்வுதான். அரசே பெரிய அளவில் மின் திட்டங்களைத் தொடங்குவதுதான் நிரந்தரத் தீர்வு’’ என்கிறார் காந்தி.

பல லட்சம் தொழிலாளர்கள், பல்லாயிரம் முதலீட்டாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக தொக்கி நிற்கும் இந்தச் சூழலில் அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தொழில் நகரங்கள் நரகங்களாகி விடும்.
 வெ.நீலகண்டன்
படங்கள்: செந்தில்குமார், ரஞ்சித்