‘‘மரம், செடி, கொடிகள் பற்றிப் படிக்கிற மனசு லேசாகி விடும்’’ என்கிறார் தாவரவியல் ஆசிரியை சாரதா பாய். ஆனால் 2011 பொதுத்தேர்வு ரிசல்ட் என்னவோ, ஒட்டுமொத்த தாவரவியல் ஆசிரியர்களுக்கும் மனசுக்கு சங்கடத்தைத்தான் தந்துவிட்டுப் போனது. ஆறே பாடங்கள் கொண்ட தாவரவியலில் வெறும் நான்கு பேர் மட்டுமே அந்தத் தேர்வில் சென்டம். இந்த ஆண்டாவது அதிகரிக்குமா எண்ணிக்கை?
‘‘ஒரு மார்க் கேள்விகளுக்கு ‘புக் பேக்’ படிச்சா முக்கால்வாசி மார்க்கை அள்ளிடலாம். மீதி கால்வாசிக்கு பழைய கேள்வித்தாள்களைப் புரட்டினா போதும். இதையும் தாண்டி ஒவ்வொரு பாடத்தையும் வரி விடாம வாசிச்சிட்டுப் போயிருந்தோம்னா தைரியமா முப்பதுக்கு முப்பதை எதிர்பார்க்கலாம். மூன்று மார்க் கேள்விகளுக்கும் புக் பேக் மாதிரிகளே போதுமானது. ஐந்து மதிப்பெண் கேள்விகளைப் பொறுத்தவரைக்கும் எல்லாப் பாடங்கள்ல இருந்தும் பரவலா கேக்கலாம். பத்து மார்க் கேள்விகளுக்கு முதல்
இரு பாடங்களுடன் 4, 5வது பாடங்களைப் படித்தாலே சென்டம் ஸ்கோர் பண்ணிட முடியும். இன்னொரு டிப்ஸ் தரணும்னா, ‘தாவர செயலியல்’ங்கிற பாடத்துல மட்டுமே 60 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேக்கறாங்க. அதனால அந்தப் பாடத்தை முழுசாப் படிச்சிட்டுப் போனா அந்த மதிப்பெண்களை அள்ளிடலாம்’’ என்கிறார் சாரதா பாய்.
கடந்த ஆண்டு சென்டம் வாங்கியவர்களில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரகமத் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த அய்னுல் மர்லியாவும் ஒருவர். மர்லியா தன் ஜூனியர்களுக்குத் தருகிறார் சாதனை டிப்ஸ்...
* ஆசிரியர்கள் சொல்ற செலக்ட்டிவ் பாடங்களுக்கு முதல் முக்கியத்துவம் தரணும். அதை முடிச்சுட்டு நமக்கு லேசா தெரியற பாடங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
படங்கள் நிறைய வரைய வேண்டி இருக்கும். படங்களைத் திரும்பத் திரும்ப வரைஞ்சு பார்த்துட்டுப் போகணும். தெளிவில்லாத படங்கள் மார்க்கை குறைச்சிடும்.
கடைசிப் பாடத்தை பொதுவா எல்லாரும் விட்டுடுறாங்க. ஒரு மார்க் கேள்விகளுக்காகவாவது அந்தப் பாடத்தை கண்டிப்பா படிச்சுட்டுப் போகணும்.
கேள்வித்தாள் ஆர்டரை மாத்தாதீங்க. அதே வரிசையில் பதில்களை எழுதுங்க.
விடைகளை வெளிப்படுத்தற விதம் நல்லபடியா இருக்க வேண்டியது அவசியம்.
‘‘எங்க பள்ளியில புளூப்ரின்ட்படியே சொல்லித் தந்துட்டு வர்றோம். பாடங்கள் குறைவுங்கிறதால ரிவிஷனுக்கு அதிக நேரம் கிடைக்குது. தொடர்ந்து எங்க பள்ளி தாவரவியல்ல சென்டம் வாங்கிட்டு வர்றதுக்குக் காரணம், இந்த ரிவிஷன் தேர்வுகள்தான்’’ என்கிற மர்லியாவின் ஆசிரியை மணிமாலா தருகிற ஆலோசனைகள் இவை:
தாவரவியலைப் பொறுத்தவரைக்கும் பாயின்ட்டுகளாக எழுதறதை விட பத்தியாக எழுதறதுதான் சிறந்தது. பாயின்ட்டுகளா எழுதறப்ப திருத்தறவங்ககிட்ட இருக்கிற ‘கீ வார்த்தைகள்’ மிஸ் ஆக சான்ஸ் இருக்கு. அப்படி ஆகற பட்சத்துல மார்க் குறையலாம்.
கையெழுத்து திருத்தமா இருக்க வேண்டியது அவசியம்.
சாய்ஸ் தேர்ந்தெடுக்கும்போது அதிகப்படியான கவனம் அவசியம். அவசரப்பட்டு தேர்ந்தெடுத்துட்டு, பிறகு அடிச்சுத் திருத்தறது மார்க்கைக் குறைச்சிடும்.
அய்யனார் ராஜன்
படங்கள்: காளிதாஸ்,ராதா கிருஷ்ணன்