(இதுவரை...முப்பதுக்கும் மேலான பெண் பார்க்கும் வைபவங்களை சந்தித்தும் இன்னும் திருமணம் ஆகாத முப்பது வயது ஆசிரியைதான் நம் ஹீரோயின் விஜயா. அப்பா கோபாலகிருஷ்ணன் காரைக்குடியில் ஸ்வீட் ஸ்டால் வைத்திருக்கிறார். திருமணமான அண்ணன் சோமசுந்தரம், அக்கா மங்கை, அவள் கணவர் ரத்னவேல், இரட்டைத் தங்கைகள் ராதா - சீதா, தம்பி ஆனந்த் என பெரிய குடும்பம். பெண் பார்க்க வருபவர்கள், ‘பொண்ணைக் காட்டச் சொன்னா பொம்பளையைக் காட்டறீங்க’ என நிராகரிக்க, தன் ஆதங்கங்களை விஜயா பகிர்ந்துகொள்வது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கலைச்செல்வனிடம் மட்டுமே! வசதியாக வாழ ஆசைப்படும் ராதாவை விரும்பி வந்து பெண் கேட்கிறான் மெடிக்கல் ரெப் சுகுமார். ராதாவுக்கு விருப்பமில்லை என்றாலும் குடும்பமே சம்மதிக்கிறது. விஜயாவுக்காக மாமா ரத்னவேல் பார்த்த பைனான்ஸியர் மாப்பிள்ளை வடிவேல், ‘தங்கை சீதாவைப் பிடிச்சிருக்கு’ என்கிறான். இனி...)
கையில் தினகரனோடு வாசலில் உட்கார்ந்திருந்த சுந்தரம் நிமிர்ந்து பார்க்க... கையில் பையுடன் கோபாலகிருஷ்ணன் நடந்து வருவது தெரிந்தது. ஆச்சரியத்தில் மூழ்கியவர், சட்டென்று எழுந்து பேப்பரை மடித்துவிட்டு எதிர்கொண்டு அழைத்தார்.
‘‘அடடே... உங்களை நான் இந்த நேரத்தில் இங்கே எதிர்பார்க்கலை. வாங்க வாங்க..!’’ என்றார். பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்த சுகுமார் வெளியில் தலையை நீட்டி, அப்பா யாரை இப்படி உபசரிக்கிறார் என்று பார்த்தான். ராதாவின் அப்பா என்பதை உணர்ந்ததும் சட்டென்று எழுந்தான். ‘‘வாங்க மாமா...’’ என்றபடி அருகில் போய் நின்றான். கோபால கிருஷ்ணன் சின்ன அவஸ்தையோடு காம்பவுண்டுக்குள் நுழைந்தார்.
‘‘இந்தப் பக்கமா ஒரு வேலை இருந்தது. அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போயிடலாம்னு வந்தேன். இந்தாங்க மைசூர்பா!’’ என்று சுந்தரம் கையில் பொட்டலத்தைக் கொடுத்தார். உள்ளேயிருந்து எட்டிப் பார்த்த விசாலம், சம்பந்தியைப் பார்த்ததும் சட்டென்று வெளியில் வந்து கும்பிடு போட்டாள்.
‘‘வாங்க... வாங்க... வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா? உங்களுக்குக் காபியிலே சீனி போடலாம்ல!’’ என்றாள்.
‘‘நல்லாச் சேர்த்துக்குவேன்... ஆனா, இப்போ வேண்டாம். சாப்பாட்டு நேரம்! இந்தப் பக்கமா வந்தேன்... அதான் எட்டிப் பார்க்கலாமேன்னு வந்தேன்...’’ - கோபாலகிருஷ்ணனின் வாய் பேசிக் கொண்டிருந்தாலும், கண்கள் மொத்த வீட்டையும் அளவெடுத்துக் கொண்டிருந்தன.
ஒரு வராண்டா, பெரிய முற்றம், உள்ளே ஒரு அறை, அதைத் தாண்டி அடுக்களை என்று சிம்பிளான வீடுதான். உள் ரூமுக்கு சைடில் ஒரு படுக்கையறை இருப்பதற்கான சாத்தியங்கள் தெரிந்தன. ‘இவர்கள் மூன்று பேருக்கு இந்த வீடு போதும்... ஆனால், ராதா எப்படி இதில் இருக்கப் போகிறாள் என்று தெரியவில்லையே!’ என்கிறரீதியில் அவருக்குள் யோசனை ஓடியது.
‘‘வந்த கையோடு கல்யாண விஷயமும் சொல்லிடறேன்... நீங்க ஒரு மூணு மாச காலம் தள்ளி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க... நல்லதா ஒரு நாள் பார்த்துச் சொன்னா, மத்த வேலைகளை ஆரம்பிச்சுடலாம்... அதைச் சொல்லிடலாம்னுதான் வந்தேன்...’’ என்று சொல்லும்போது கோபாலகிருஷ்ணனின் வார்த்தைகளில் முழு உற்சாகம் இல்லை. தன் கண்களைப் பார்த்து பேசுவதை அவர் தவிர்ப்பதை சுந்தரம் கவனித்துவிட்டார்.
‘‘அப்போ அந்த முதல்ல பார்த்த இடம் விஜயா அண்ணிக்கு முடிஞ்சுடுத்தா. .?’’ என்றான் சுகுமார். அவன் கவலை அவனு க்கு.அந்தக் கேள்வி யைத் தவிர்க்கும் விதமாக , ‘‘இங்க கரண்டு எத்தனை மணிக்கு போகுது..?’’ என்றார் கோபாலகிருஷ்ணன்.
விசாலம் காபி டம்ளரோடு வர, ‘‘அடடா... வேண்டாம்னு சொன்னேனே! சரி, ஒரு டம்ளர் கொண்டாங்க... நானும் சம்பந்தியும் பாதி பாதி எடுத்துக்கறோம்...’’ என்றார்.
காபியைக் குடித்து விட்டு கோபாலகிருஷ்ணன் புறப்பட, ‘‘நான் வேணா உங்களை டிராப் பண்ணட்டுமா வீட்டுல...’’ என்றான் சுகுமார்.
‘‘டேய்... மருமக இன்னேரம் காலேஜுக்குப் போயிருப்பா... நீ உன் வேலையைப் பாரு. நானும் கடைப்பக்கம் போகவேண்டியிருக்கு... வாங்க நாம பேசிக்கிட்டே போகலாம்!’’ என்றார் சுந்தரம்.
இருவரும் நடந்து தெருமுனையைத் தாண்டி திரும்பியதும் சுந்தரம் கேட்டார்.
‘‘என்ன சம்பந்தி? மூத்த பொண்ணு கல்யாணம் எந்த அளவிலே இருக்கு... ஏன், அந்தப் பொண்ணை ஒதுக்கிட்டு அடுத்து போறீங்க..?’’ என்றார்.
கோபாலகிருஷ்ணன் சுந்தரத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டார். மொத்த கதையையும் சொன்னார்.
‘‘நான் மூணு மாசம்னு டைம் சொன்னதே, அதுக்குள்ளே ஒரு இடம் பார்த்து மூணு கல்யாணத்தையும் ஒரே மேடையில் முடிக்கலாம்னுதான்... ஆனா, உள்ளுக்குள் ஒரு பதட்டம் ஓடிக்கிட்டே இருக்கு...’’ என்றபோது கோபாலகிருஷ்ணனின் கண்கள் கலங்கிவிட்டன.
‘‘அடடா... என்ன இது? கண்ணெல்லாம் கலங்கிட்டு... இனிமே இது என் பிரச்னையும்கூட! நானும் நல்ல இடமாப் பார்க்கறேன். நீங்க ஒண்ணு செய்யுங்க... நம்ம விஜயா ஜாதகம் ஒரு காப்பியை என்கிட்டே கொடுங்க... எங்க குடும்ப ஜோசியர் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்டே கேப்போம்... என்ன ஏதுன்னு பார்த்து செய்ய வேண்டியதைச் செய்து சீக்கிரம் அந்த நல்ல காரியத்தையும் நடத்திடுவோம்... கலங்காம இருங்க!’’ என்று சுந்தரம் பேசியது கோபாலகிருஷ்ணனுக்கு ஆறுதலாக இருந்தது.
வீட்டு வாசலில் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய ரத்னவேலைப் பார்த்துவிட்டு எழுந்து வந்தார் சந்திரன். விஜயாவைப் பெண் பார்க்க வந்துவிட்டு, ‘சீதாவைப் பிடித்திருக்கிறது’ என்று சொன்ன மாப்பிள்ளை வடிவேலுவின் அப்பா.
‘‘என்ன சித்தப்பா... காலங்காத்தால இவ்வளவு டல்லா உக்கார்ந்து இருக்கீங்க?’’ என்றார் ரத்னவேல்.
‘‘தெரியாத மாதிரி கேக்கிறியே ரத்னம்... நம்ம வீட்டுல வடிவேலு கிளம்பி வெளிய போன பிறகுதானே நமக்கு மரியாதை. அவன் சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்... நீயும் ரெண்டு இட்லி சாப்பிடேன்...’’ என்று உபசரித்தார்.
‘‘இருக்கட்டும்... வீட்டுல சாப்பிட்டுட்டுதான் புறப்பட்டேன்...’’என்றவர், ‘‘என்ன சித்தப்பா... இன்னும் கல்யாண களை கட்டாம இருக்கே வீடு? மளமளன்னு வேலையைப் பார்க்க ஆரம்பிங்க...’’ என்று தோளில் தட்டி விட்டு உள்ளே சென்றார்.
‘‘வாங்கண்ணே...’’ என்று அழைத்த வடிவேலு உள்பக்கம் திரும்பி, ‘‘அம்மா... அண்ணனுக்கு ஒரு தட்டு போடு...’’ என்றான். கையில் பிரேஸ்லெட், கழுத்தில் சங்கிலி, இரண்டு மூன்று மோதிரங்கள் என்று பூரண அலங்காரனாக இருந்தான்.
‘‘இருக்கட்டும்பா... சித்தி அரைச் சீனி போட்டு ஒரு காபி மட்டும் குடுங்க...’’ என்று அடுக்களையைப் பார்த்துச் சொல்லிவிட்டு, ‘‘வீட்டுல பேசி ஒரு மாதிரி கரெக்ட் பண்ணிட்டேம்பா... மாமாதான் ‘சொல்றேன்’னு கொஞ்சம் பிடி கொடுக்காம சொல்லிட்டுக் கடைக்குப் போயிருக்காரு... நல்ல முடிவாத்தான் சொல்லுவாரு. நானுமே உனக்கு எந்தப் பொண்ணு புடிக்குதோ முடிச்சுக்கலாம்னுதான் பொண்ணு போட்டோவை முன்கூட்டி காட்டலை. ஒருவேளை உனக்கு விஜயாவைப் புடிக்கலைன்னா நீ போட்டோவைப் பார்த்துட்டே வேண்டாம்னு சொல்லிடுவே... நான் மாப்பிள்ளையா இருக்கற வீட்டுக்கு உன்னையும் கொண்டு போயிடணும்னு ஆசைப்பட்டேன்... அது நடந்திருச்சு. சந்தோஷம்...’’ என்றார்.
சாப்பாட்டை முடித்துவிட்டு கை கழுவிய வடிவேல், ‘‘சரிண்ணே... அப்போ ஆகவேண்டியதைப் பார்த்துடலாம். நான் அரியக்குடி பக்கம் கலெக்ஷனுக்குப் போறேன்... உங்க பிளான் என்ன..?’’ என்றான்.
‘‘நான் இன்னிக்கு லோக்கல்தான்... அப்போ வி.ஆர். பைனான்ஸ் ஆரம்பிக்க இடம் பார்த்தி டட்டுமா... நம்ம மார்க்கெட்டுக்கு பின்னால மாடியிலே ஒரு கடை வருது... புடிச்சுடுவோமா..?’’ என்றார்.
‘‘நிச்சயதார்த்தம் முடியட்டும்...’’ என்று சொல்லிவிட்டு வண்டியை உதைத்துக் கிளப்பினான் வடிவேல்.
விஜயாவின் நடையில் வேகம் கூடியிருந்தது. தன் மனதுக்குள் எழும் உணர்ச்சிகளை நடையில் வென்று விடலாம் என்ற முனைப்போடு வியர்க்க விறுவிறுக்க நடந்து கொண்டிருந்தாள், கையில் இருந்த கடலைப் பொட்டலம் முதன்முறையாக பிரிக்கப் படாமல் இருந்தது.
‘‘என்ன மேடம்... இன்னிக்கு கடலை சாப்பிடலையா..?’’ என்று கலைச்செல்வன் கேட்கும்போதுதான் விஜயாவுக்கு பள்ளிக்கூடம் வந்துவிட்டதே உறைத்தது.
‘‘கொஞ்சம் லேட்டா கிளம்பினேன். அதான், வேகமா நடந்து வந்ததால் இதைக் கவனிக்கலை... நீங்க வேணா எடுத்துக்கோங்க...’’ என்று கடலையை நீட்டினாள்.
சம்பிரதாயமாக ஒரு கை அள்ளிக் கொண்ட கலைச்செல்வன், ‘‘முகம் டல்லாயிருக்கே... வழியில் ஏதாவது பிரச்னையா..?’’ என்றார்.
‘‘தினம் தினம் மெகா சீரியல் கதை மாதிரி நானும் எங்க வீட்டு விஷயங்களைச் சொல்லிக்கிட்டேதான் இருக்கேன்... நீங்களும் சீரியல் பார்க்கிற மாதிரி கேட்டுக்கிட்டேதான் இருக்கீங்க... இன்னிக்கு லீவு விட்டுருங்க சார்...’’ என்று சிரித்தாள் விஜயா.
‘‘மேடம்... என்கிட்டே சொல்றதால் உங்க மன பாரம் குறையும்னு நினைச்சுத்தான் நீங்க சொல்றதைக் கேட்கிறேன். ஆனா, கதை கேக்கிறேன்னு சொல்லிட்டீங்களே...’’ என்றார். விஜயாவின் சிரிப்பில் விரக்தி தெரிவதை முதன்முறையாகப் பார்த்தார். விஷயம் தீவிரம் என்பது புரிந்தது.
‘‘மேடம்... என்ன ஏதுன்னு நான் உங்ககிட்டே தோண்டித் துருவி கேக்கப் போறதில்லை. ஆனா ஒண்ணு மட்டும் நினைவிலே வெச்சுக்கோங்க... நமக்கு நடக்கிற எந்த விஷயமுமே நல்லதுக்குத்தான்னு நம்புங்க. உங்க முகத்துல தெரியற சிரிப்புதான் உங்களுக்கு அழகு. அதை மிஸ் பண்ணிடாதீங்க... இப்போ ஒரு விஷயம் தவறிப் போனால் பின்னால் நல்லதா ஒண்ணு கிடைக்கப் போகுதுன்னு அர்த்தம்...’’ என்று நிதானமாகச் சொன்ன கலைச்செல்வன், ‘‘உங்க சுமையை நானும் கொஞ்சம் ஷேர் பண்ணிக்கறேன்... கடலையைச் சொன்னேன்...’’ என்று சிரித்தபடி விஜயாவின் கையில் இருந்து இன்னும் கொஞ்சம் கடலையை அள்ளிக் கொண்டு போனார்.
‘என்னுடைய எல்லா சுமைகளையும் ஷேர் பண்ணிக்குவீங்களா கலைச்செல்வன், காலம் முழுக்க!’ என்று கேட்கவேண்டும் போல இருந்தது விஜயாவுக்கு!
(தொடரும்)
படங்கள்: புதூர் சரவணன்