ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொன்றுதான் அழகழகாக பட்டுச் சேலைகள் உடுத்துகிறோம். பட்டுப்பூச்சி முழு வளர்ச்சி அடைந்து கூட்டிலிருந்து வெளியேறியதும், அது விட்டுச் செல்கிற கூட்டை வைத்து அகிம்சை முறையில் அழகழகான மாலைகளும் ஆபரணங்களும் செய்ய முடியும் தெரியுமா? சென்னையைச் சேர்ந்த வீணா இதில் நிபுணி.
‘‘பட்டுக்கூடுகளை வச்சுப் பண்ற மாலைகளும் பூக்களும் வித்தியாசமா இருந்ததால, இதுல ஆர்வம் அதிகமானது. இன்னிக்கு பட்டுக்கூட்டை வச்சு விதம் விதமான மாலைகள், பொக்கே, நகைகள்னு எவ்வளவோ செய்யறேன். கத்துக்கிறதும் சுலபம். கை நிறைய காசும் நிச்சயம்’’ என்கிறவர், ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?‘‘பட்டுக்கூடுதான் பிரதானம். ஈரோடு, காங்கேயம், கோவை, சேலம், பழனின்னு சில ஊர்கள்ல இது பிரபலம். அங்கருந்து வரவழைக்கலாம். முடியாதவங்க, கைவினைக் கலைகளுக்கான பொருள்கள் விற்கற கடைகள்ல கிலோ கணக்குல வாங்கலாம். ஒரு கிலோ பட்டுக்கூடு, அதோட தரத்தைப் பொறுத்து 500 முதல் 1,000 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். வெள்ளை நிறக் கூடுகள் விலை அதிகம்.
கொஞ்சம் பழுப்பான கூடுகள் மலிவா கிடைக்கும். இதுல வீட்லயே சாயம் ஏத்தி, கலர் கலரா மாத்தலாம். அதுக்கான கலர் பொடி, அலங் காரத்துக்குத் தேவையான மற்ற பொருட்கள்னு எல்லாத்துக்கும் சேர்த்து ஆயிரம் முதல் ஆயிரத்தைந்நூறு ரூபாய் முதலீடு போதும்.’’
என்ன ஸ்பெஷல்?‘‘பார்க்கிறதுக்கு சின்ன சைஸ் முட்டை மாதிரி இருக்கும் இந்தக் கூடுகள். மேல் பாகத்தை வெட்டி எடுத்துட்டு, நம்ம விருப்பத்துக்கேத்தபடி எந்த வடிவத்துலயும் டிசைன் பண்ணலாம். பட்டுக்கூடுல பண்ணின மாலைகள், சாமிப் படங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும். இந்தக் கூடுகளை வச்சு ரோஜாப் பூ பண்றது தனிக் கலை. அந்த ரோஜாக்களை வச்சு பொக்கே பண்ணலாம். கற்பனைக்கேத்தபடி எத்தனை மாடல்கள் வேணாலும் பண்ணலாம். பட்டுக்கூடு நகைகள் பார்வைக்கு ரொம்ப அழகு.’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?‘‘அடிப்படையைக் கத்துக்கிட்டா, மாலை கோர்க்கிறது ரொம்ப சுலபம். ஒருநாள் சாயமேத்தி காய வச்சிட்டா, அடுத்த நாள் கோர்த்துடலாம். ஒரு நாளைக்கு 25 30 மாலைகள் வரை கோர்க்கலாம். சாமிப் பொருட்கள் விற்கற கடைகள், ஃபேன்சி ஸ்டோர், கைவினைப் பொருள்கள் விற்கும் கடைகள்ல விற்பனைக்குக் கொடுக்கலாம். ஒரு முழம் அளவுள்ள சின்ன மாலையை 50 ரூபாய்க்கு விற்கலாம். 50 சதவீத லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?‘‘ஒரே நாள் பயிற்சியில் 2 மாடல் மாலைகள் கத்துக்க, தேவையான பொருள்களோட சேர்த்துப் பயிற்சிக் கட்டணம் 500 ரூபாய்.’’
ஆர்.வைதேகி
படங்கள்:ஆர்.சந்திரசேகர்