‘‘சாரி... இப்பல்லாம் யாராவது ஹலோ சொன்னாலே, ‘வணக்கம்... நீங்க யாரைக் காதலிக்கிறீங்க’ன்னோ, ‘யாருக்கு வாழ்த்து சொல்ல விரும்பறீங்க’ன்னோ கேட்டுடறேன்... எல்லாம் சன் மியூசிக் புண்ணியம்!’’
நமது ஹலோவுக்கும் இதே பதிலைச் சொன்னதற்கான விளக்கத்துடன் பேச ஆரம்பிக்கிறார் கௌரிலட்சுமி.
சன் மியூசிக் சேனலில் ‘அன்பே அன்பே’ மற்றும் ‘வாழ்த்தலாம் வாங்க’ நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி. சன் டி.வியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் ‘ஆண் பாவம்’ மூலம் நடிகை பிரமோஷன் கௌரிக்கு...
‘‘சொந்த ஊர் திருப்பூர். அங்க இருந்தவரை ஒரே பொழுதுபோக்கு சன் மியூசிக் பார்க்கறதுதான். என்னிக்காவது ஒருநாள், நானும் சன் மியூசிக்ல காம்பியரிங் பண்ணியே தீருவேன்னு எனக்குள்ளயே சபதம் எடுத்துக்கிட்டேன். பியூட்டிஷியன் கோர்ஸ் படிக்கிறதுக்காக சென்னை வந்தேன். முடிச்சிட்டு பொட்டியைத் தூக்கிட்டு ஊருக்குக் கிளம்ப ரெடியாகிட்டு இருந்தப்ப, சன் மியூசிக்ல இன்டர்வியூன்னு கேள்விப்பட்டு ஓடினேன். என் கனவு பலிச்சிடுச்சு... நான் செலக்ட் ஆயிட்டேன். ஆச்சு... நாலு வருஷம் ஓடிருச்சு... நான் சாப்பிடற சாப்பாடு, போட்டுக்கிற டிரஸ், என்னோட பியூட்டி பார்லர் பிசினஸ்னு எல்லாம் சன் மியூசிக் தந்தது’’ கௌரியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!
‘‘சன் டி.வில முகம் வந்தா, ஓவர்நைட்ல உலகம் முழுக்க பிரபலமாயிடுவோம்ல... அப்படித்தான் நான் காம்பியரிங் பண்ண ஆரம்பிச்சதும், என்னைப் பார்த்துட்டு, நிறைய படங்கள்ல நடிக்க வாய்ப்பு வந்தது. வீட்ல ஏத்துக்கலை. ஒவ்வொரு வாட்டி வாய்ப்பு வரும்போதும், வீட்ல பேசறதும், அவங்க வேணாம்னு சொல்றதுமா காலம் ஓடிட்டிருந்தது.
‘ஆண் பாவம்’ வாய்ப்பு வந்தப்பவும், வழக்கமான பதிலை எதிர்பார்த்துதான் வீட்ல சொன்னேன். ‘குடும்பக் கதைதானே... நடி...’னு சொன்னதும் என்னால நம்பவே முடியலை. நடிக்க வந்தப்புறம்தான் அது எவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சது. காம்பியரிங்னா கையை காலை ஆட்டி, சிரிச்சு, பேசிப் பேசியே சமாளிச்சிருவேன். நடிப்புனு வந்தப்புறம், ஒரு சிச்சுவேஷனை சொல்லி, முகத்துல எக்ஸ்பிரஷன் காட்டச் சொல்றாங்க. திடீர்னு அழணும், திடீர்னு சிரிக்கணும். முன்னல்லாம் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு, விதம் விதமா மேக்கப் போட்டு அழகு பார்த்துக்குவேன். இப்பல்லாம் கண்ணாடி பார்த்தாலே, விதம் விதமா அழுது, சிரிச்சு பிராக்டீஸ் பண்றதுதான் வேலையே... எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் பார்த்தீங்களா...’’ காம்பியரிங் பண்ணுகிற மாதிரியே நான்ஸ்டாப்பாக பேசுகிறார் கௌரி.
கௌரி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, பியூட்டி பார்லர் ஆரம்பித்த பிப்ரவரி 14ம் தேதி என எல்லாம் காதலோடு சம்பந்தப்பட்டவை!
என்னம்மா மேட்டர்?
‘‘சத்தியமா அப்படி ஒண்ணுமே இல்லை. எல்லாமே அப்படி அமைஞ்சிருச்சு. வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எதையாவது முடிச்சுப் போட்டு, வம்புல மாட்டி விட்றாதீங்க... கல்யாண இன்விடேஷனோட மறுபடி மீட் பண்றேன். நன்றி வணக்கம்!’’
சேனல் ஸ்டைலிலேயே விடைபெறுகிறார் கௌரி.
ஒய் திஸ் கொல வெறி? ‘தென்றல்’ தொடரில் கேஷவ் கேரக்டரில் நடிக்கிற ஹாரிஸை பார்க்கிற எல்லோரும் இப்படித்தான் கேட்கிறார்களாம்.
‘‘உண்மையில நான் ரொம்ப சாதுங்க...’’ அதிராமல் பேசுகிற ஹாரிஸ், சீரியலுக்கு வரும் முன்பே சினிமாவில் முகம் காட்டியவர்.
‘‘‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘யாரடி நீ மோகினி’, ‘மாப்பிள்ளை’ன்னு வரிசையா தனுஷ் கூட மூணு படங்கள் பண்ணியிருக்கேன். அடுத்து ‘மல்லுக்கட்டு’, ‘பத்திரமா பார்த்துக்கோங்க’, ‘தீர்வு’னு மூணு படங்கள் கைல இருக்கு. ‘தென்றல்’ வாய்ப்பு வந்தப்ப, அந்த கேரக்டர் ரொம்பப் பிடிச்சுப் போனதால ஓ.கே சொல்லிட்டேன்.
இத்தனை படங்கள்ல என்னைக் கவனிக்காத மக்களை, இந்த ஒரே சீரியல் ‘பையன் யாரு’னு கேட்க வச்சிருக்கு. ‘ஏம்ப்பா... பார்க்க நல்லவரா இருக்கீங்க... சாருவோட சேர்ந்து ஏன் இப்படி துளசியை பாடா படுத்தறீங்க’னு கேட்கறாங்க. தேங்க்ஸ் டூ தென்றல் டீம்’’ என்கிறவர், சோனியா அகர்வால், சிம்ரன், அபிநயா, நட்சத்திரா, ஸ்வாதி... இப்படிப் பல நடிகைகளுக்கு பர்சனல் மேனேஜரும்கூட!
ஆர்.வைதேகி
படங்கள்: புதூர் சரவணன்