வான்சரிந்து இறங்கும்
மேற்குத்தொடர்ச்சி மலையின் கரடுமுரடான அடிவாரத்தில், பசுமை சூழ விரிந்து
கிடக்கிறது தேனி. தென்மேற்குப் பருவக்காற்று தாலாட்டும் இந்த நகரின் மலையோர
எல்லைதான் அல்லி நகரத்து வீரப்ப அய்யனார் கோவில். அமானுஷ்யம் ததும்ப
உறைந்திருக்கும் அய்யனார், கோயிலைச் சுற்றிலும் சில்லிட வைக்கும் மலைநீரைச்
சுமந்தோடும் தம்பிரான் வாய்க்கால், வாய்க்கால் கரையில் வானுயர்ந்து
நிற்கும் பழ மரங்கள், இலைகளின் எண்ணிக்கைக்கும் மேலாக இவற்றில் தொங்கி
விளையாடும் பழந்தின்னி வௌவால்கள்...
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இப்பகுதியின் இன்னொரு முக்கியமான அடையாளம்
ஆறுமுகம். இந்த 65 வயதுக்காரரை ‘வௌவால் தாத்தா’ என்றுதான் அழைக்கிறார்கள்
அல்லி நகரத்து வாசிகள். 20 ஆண்டுகளாக வீரப்ப அய்யனார் கோயிலின் நிழலிலேயே
ஜீவிக்கும் இந்த மனிதர், வௌவால்களின் மொழியறிந்த உற்ற நண்பர்!
பார்ப்பதற்கு சித்தர் மாதிரி இருக்கிறார் ஆறுமுகம். அழுக்கு அப்பிய உடைகள்,
வீங்கிய கால்கள். வௌவால்கள் அடையும் மரத்துக்குக் கீழே, செடி கொடிகளுக்கு
மத்தியில் சிறு கூடாரம் அமைத்துத் தங்கி யிருக்கிறார். அய்யனாருக்கு
சிறப்புக் கொடுக்க வருபவர்கள் தரும் பழங்கள், உணவுகளை வௌவால்களுக்கு வாரித்
தந்துவிட்டு மிஞ்சியிருந்தால் சாப்பிடுகிறார். வயோதிகத்தால் வார்த்தைகளில்
நடுக்க மெடுக்கிறது. யோசித்து யோசித்துப் பேசுகிறார்...
‘‘அல்லி நகரத்துல நமக்கு குடும்பம் இருக்கு. ரெண்டு புள்ளைகளும்
இருக்காங்க. வேலை, குடும்பம்னு நகரத்துலதான் இருந்தேன். 20 வருஷத்துக்கு
முன்னாடி நமக்கும் குடும்பத்தில உள்ளவுகளுக்கும் ஒத்துப் போகல. மனசு
வருத்தத்தில கிளம்பி அய்யனார்கிட்ட வந்துட்டேன். பெரிசா ஆள் நடமாட்டம்
இருக்காத இடம். ராத்திரிப் பொழுதுல இங்கே யாரும் வந்துபோக மாட்டாங்க.
தனியாளா தங்கியிருப்பேன். அப்பல்லாம் அய்யனாரும் வௌவாக்களும்தான் துணை.
பாம்பு, பல்லின்னு எது வந்தாலும் நாலு தள்ளிப்போயிரும். மனசுல இருந்த
அழுக்கெல்லாம் அகன்று போச்சு. நிம்மதியா கெடக்கேன்.
‘பழந்தின்னி வௌவால் தின்னா உடம்புக்கு நல்லது’ன்னு யாரோ
சொல்லிப் புட்டாங்கே. அப் போவெல்லாம் ராத்திரி நேரத்துல வெளியூர் ஆளுக தோக்கு
எடுத்துக்கிட்டு சுட வருவாங்க. பொடிப்பயலுக வந்து கல்லெடுத்து
அடிப்பானுங்க. இந்த மாதிரி ஆட்கள் வர்றபோது சலபுலன்னு வௌவாக்கள் சத்தம்
போடுங்க. எழுந்திருச்சு அந்த ஆளுகளை அடிச்சுத் தொரத்துவேன். இப்போ நான்
இருப்பேங்கிற பயத்துல யாரும் வர்றதில்லை...’’ என்கிறார் ஆறுமுகம்.
மலையடிவாரத்தில் பல ஆயிரம் ஏக்கரில் கொய்யா, வாழை, மா, பலா மரங்கள்
பயிரிட்டுள்ளார்கள். போதிய உணவும், தங்குவதற்கு தோதான அமைதியான
அடர்மரங்களும், ஆழ்ந்த அமைதியும் இருப்பதால் இப்பகுதியை தேர்வு செய்து
வசிக்கின்றன வௌவால்கள். ஆறுமுகம் இந்த வௌவால்களை ‘வீரப்ப அய்யனாரின்
குழந்தைகள்’ என்கிறார்.
பறவைகளின் குரலை வைத்து இனம் பிரித்து அறியும் ஆறுமுகம், அந்த சத்தத்தை வைத்தே அவற்றின் தேவைகளையும் கண்டுபிடிக்கிறார்.
‘‘கோவிச்சுக்கிட்டு வந்த பிறகு புள்ளைக வந்து கூப்புட்டுச்சுக. இந்த
வௌவாக்களையும், வனாந்திரத்தையும் விட்டுட்டுப் போய் எதைச் சாதிக்கப்
போறேன்? போற உசுரு இங்கேயே இதுகளோடவே போகட்டும்னு தங்கிட்டேன்’’ என்கிற
ஆறுமுகம், அதிகாலை எழுந்ததும் கடும் முதுமைக்கு மத்தியிலும் கோயிலை
முழுதுமாகக் கூட்டி சுத்தமாக்குகிறார். மெல்ல மடை கடந்து சென்று வௌவால்களை
பார்த்துப் பேசுகிறார்!
‘‘அய்யனாரையே அண்டிக் கிடக்கிறதால எனக்கு காசு, பணமெல்லாம் எதுவும் தேவைப்
படலை. ஆனா, அய்யனாருக்கு சிறப்புக் கொடுக்க வர்றவங்க கையில கிடைக்கிறதைக்
குடுத்துட்டுப் போவாங்க. கோயிலைச் சுத்தம் பண்ண உதவிக்கு வர்ற
புள்ளைகளுக்கு கொடுக்க, வௌவாக்களுக்கு பழம் வாங்கிப் போட அதை
வச்சுக்குவேன். கொஞ்ச நாளைக்கி முன்னாடி எங்கூரு புள்ளை பாரதிராஜா பெரிய
பெரிய நடிகர்களை எல்லாம் அழைச்சுக்கிட்டு வந்து பூஜை போட்டு அய்யனாருக்கு
சிறப்புக் குடுத்துச்சு. அவுக கட்டுன காகிதம், போட்ட குப்பையெல்லாம் பெரிசா
குவிஞ்சு போச்சு. ‘இந்தாய்யா பத்து ரூவா’ன்னு கையில குடுத்துட்டுப்
போயிருந்தா ரெண்டு புள்ளைகளை வச்சு சுத்தம் பண்ணி அள்ளிப் போட்டுருப்பேன்.
ஒண்ணும் குடுக்காம கிளம்பிட்டாக. ஒத்தை ஆளா தட்டுத் தடுமாறி குப்பைகளை
கூட்டித் தள்ள நாலு நாளு புடிச்சுருச்சு’’ என்றபடி கம்பைத் தாங்கி வௌவால்
மரங்களின் திசையில் நடக்கிறார் ஆறுமுகம்.
வெ.நீலகண்டன்
படங்கள்: ராதாகிருஷ்ணன்