அழகுப்பெண்ணை விட அற்புத வியாபார தந்திரம் வேறெதுவும் இல்லை இன்றைய உலகில்! சிகரெட்டில் தொடங்கி, உள்ளாடை வரை ஆண்களுக்கான அத்தனை பொருட்களின் விளம்பரங்களிலும், பெண்களே பிரதானமாக இருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாவிட்டாலும், அந்த விளம்பரத்தில் ஒரு அழகுப் பெண் வந்து சிரிக்கவோ, சிணுங்கவோ வேண்டும். விளம்பரங்கள் இப்படியென்றால், திரைப்படங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். அயிட்டம் டான்ஸ் இல்லாத படத்துக்கோ, அரைகுறை அழகு காட்டாத ஹீரோயினுக்கோ இன்று மவுசு கிடையாது. கோபமும் வருத்தமும் இருந்தாலும், பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் பலருக்கும் பிரச்னையே...
இந்த விஷயத்தில் ஆத்திரத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்த நினைப்போருக்கான ஒரு இயக்கம் ‘மாசஸ்’ (M.A.S.E.S - Movment Against Sexual Exploitation and Sexism). ஒற்றை நபராகத் தொடங்கி, இன்று இதை மிகப்பெரிய இயக்கமாக வளர்த்து வருகிறார் நிர்மலா. இவர் ‘கொற்றவை’ என்கிற புனைப் பெயரில் எழுத்தாளராக பரிச்சயமானவர்.
‘‘ஊடகங்கள்ல பெண்களைப் பத்தின சித்தரிப்பு எனக்குக் கவலையைக் கொடுக்கவே, அது தொடர்பா நிறைய கட்டுரைகள் எழுதிட்டிருக்கேன். பெண் சுதந்திரம் என்பதே இங்கே தவறா புரிஞ்சுகொள்ளப்பட்டிருக்கு. ‘பெண் உடலை வெளிப்படுத்துதல்தான் பெண் சுதந்திரம்’னு ஒரு தவறான கருத்தாக்கம் இருக்கு. சைஸ் ஜீரோ, திரண்ட மார்பு, வளைந்த இடுப்பு இதெல்லாம்தான் பெண்களுக்கான அடையாளங்கள்னு திணிக்கப்படுது. ஒரு பக்கம் பண்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடுன்னு பேசிக்கிட்டே, இன்னொரு பக்கம் இப்படியும் நடந்துட்டிருக்கு.
பெண் உடலை எப்படி இந்த வக்கிரங்கள்லேருந்து மீட்கறதுங்கிற தீவிர யோசனைல இருந்தப்ப, ஆண்களுக்கான சிவப்பழகு கிரீம் பத்தின அந்த விளம்பரம் என் கண்கள்ல பட்டது. சமூக அக்கறை உள்ள ஒரு நடிகரா அறியப்படற சூர்யா மாதிரியான ஹீரோ, இப்படியொரு மோசமான விளம்பரத்துல நடிச்சது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. விளம்பரங்களில் பெண்களோட சித்தரிப்பு ரொம்ப இழிவா இருக்கிறது எனக்கு உறுத்தலைத் தந்தது. பெரும்பாலான விளம்பரங்களும் எதிர்பால் ஈர்ப்பைப் பத்திப் பேசறதாகவே தோணினது. இதைப் பத்தின என் கவலையை ஃபேஸ்புக்ல பகிர்ந்துக்கிட்டபோது, நிறையப் பேர் என்கூட சேர்ந்து கருத்துகளைச் சொன்னாங்க.
அட்வர்டைஸ்மென்ட் கவுன்சிலுக்கு என் புகாரைக் கொண்டு போனேன். பதில் இல்லை. அப்பதான் இதுக்கான ஒரு இயக்கத்தையே தொடங்கினா என்னங்கிற எண்ணம் வந்தது.
எதேச்சையா ‘விற்பனை இணையதளமான’ ebay ல ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். முகப்புப் பக்கத்துலயே ‘ஆண்களுக்கு’ங்கிற அறிவிப்பின் கீழே லேப்டாப், டேப்லெட், மொபைல் மாதிரியான பொருள்களும், ‘பெண்களுக்கு’ங்கிற அறிவிப்பின் கீழே உடைகள், அழகு சாதனங்கள், நகைகளும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது இன்னும் பெரிய அதிர்ச்சியா இருந்தது. பாலின அடையாளத்தை உபயோகிச்சா விற்பனை பெருகும் என்பது அவங்களோட நம்பிக்கையாகவும் இருந்தது.
அப்படின்னா தொழில்நுட்பப் பொருள்களை உபயோகிக்கத் தகுதியில்லாதவங்களா பெண்கள்? அது மட்டுமில்லாம மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவங்களுக்குத் தகுதியில்லையா? இதையெல்லாம் தட்டிக்கேட்ட போது, ‘புரட்சி பண்றீங்களா’ன்னு கேட்டாங்க. ஃபேஸ்புக் கம்யூனிட்டி மூலமா எங்க ‘மாசஸ்’ இயக்கத்துல இணைஞ்ச பலரும், சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்துக்கு தொடர்ச்சியா தங்களோட கருத்துகளை இமெயில் பண்ணவே, இப்ப அந்த விளம்பரம் நீக்கப்பட்டிருக்கு. கையெழுத்து இயக்கமா ஆரம்பிச்ச எங்க போராட்டத்துக்கு தஸ்லிமா நஸ்ரீன், மாலதி மைத்ரி, சுகுமாரன்னு நிறைய பேரோட ஆதரவும் கிடைச்சது.
விளம்பரங்களுக்கு அடுத்த படியா இன்றைய திரைப்படங்கள் பெண்களை சித்தரிக்கிற விதத்தைப் பத்தியும் நாங்க குரலெழுப்ப ஆரம்பிச்சிருக்கோம். இன்னைக்கு திரைப்படங்கள்ல பன்னாட்டு நிறுவனங்களோட முதலீடு பெருகிப் போச்சு. பெண்களை வியாபாரப் பொருளா பயன்படுத்தற தந்திரம் திரைப்படங்கள்ல வெட்டவெளிச்சமா நடக்குது. கதாநாயகியை மென்மையானவளா, அமைதியானவளா சித்தரிக்கிற அதே படத்துலதான் அவளை கனவுப்பாட்டுல கவர்ச்சியாகவும் ஆட விடறாங்க. நாட்டுக்காகவும் சமுதாயத்துக்காகவும் போராடற அதே கதாநாயகன்தான், கதாநாயகியோட டான்ஸ் ஆடறான். பெண் உடலைப் பார்க்கிறது மட்டும்தான் பொழுதுபோக்குங்கிற நிலை.
நடிகர்களுக்கும் சமுதாயப் பொறுப்பு இருக்கு. ஐம்புலன் களையும் தாக்கம் செய்யக்கூடிய ஊடகத்துல தாங்கள் இருக்கிறதை அவங்க உணரணும். அவங்க குடும்பத்துப் பெண்களை நடத்தற மாதிரியே சக நடிகைகளையும் நடத்தணும்.
விளம்பரங்களும் திரைப்படங்களும் பாலியல் பாகுபாட்டின் அடிப்படையில உருவாகிற போக்கை மாத்தணும். பாலியலைப் பற்றின புரிதலை ஏற்படுத்தி, பெண்ணுடல் பற்றிய பார்வையை மாற்றி, பாலியல்வாதம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கிறது தான் எங்க நோக்கம்.’’
ஆவேசமாகவும் அழுத்தமாகவும் சொல்கிற நிர்மலா, இந்த விழிப்புணர்வு இயக்கத்துக்காக www.masessatnotsexism.com என்ற வலைத்தளத்தையும் உருவாக்கியிருக்கிறார்.
ஆர்.வைதேகி
படங்கள்:ஆர்.சி.எஸ்.