வலுவாக இருக்கும்போதே ‘முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டது’ என்ற பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிவருகிறது கேரள அரசு. முல்லைப் பெரியாறில் தமிழகத்தின் உரிமைகளை மீட்கும் போராட்டம் உச்சம் பெற்றிருக்கும் இந்த நேரத்தில், தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிபுரம் கிராமத்தில் ‘நியூட்ரினோ ஆய்வுக்கூடம்’ அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் அமையவுள்ள இந்த ஆய்வுக்கூடம் அமெரிக்காவின் பேரழிவு ஆயுதங்களுக்கான சோதனைக்கூடமாக செயல்படக்கூடும் என்றும், முல்லைப் பெரியாறு, இடுக்கி அணைகளுக்கு முடிவுரை எழுதிவிடும் என்றும் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் விஞ்ஞானி வி.டி. பத்மநாபன்.
கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த பத்மநாபன், இந்தியாவில் அணுசக்தியின் மோசமான விளைவுகளை முதன்முதலில் ஆய்வுசெய்து வெளிப்படுத்தியவர். இந்திய அரிய மணல் ஆலைகள் மற்றும் கடலோர மணல் கதிரியக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை வெளிக்கொணர்ந்து சர்வதேச கவனம் பெறச்செய்தவர். ‘யூரோப்பியன் கமிட்டி ஆன் ரேடியேஷன் டெஸ்க்’ என்ற உலகளாவிய அமைப்பில் இயங்கும் பத்மநாபன், நியூட்ரினோ ஆய்வுச்சாலை பற்றி விரிவாகப் பேசினார்.
அதென்ன நியூட்ரினோ?‘‘எடையில்லாத, கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண்ணிய துகள். ஒளியைவிட அதிவேகத்தில் பாயக் கூடியது. எல்லா பொருட்களிலும் ஊடுருவும். சூரியனில் நிகழும் மாற்றங்கள் காரணமாக நியூட்ரினோ உற்பத்தியாகிறது. அளவைக் கேட்டால் மிரண்டு போவீர்கள். 1 நொடிக்கு 1 சதுர சென்டி மீட்டரில் 650 கோடி வோல்ட் நியூட்ரினோ பரவுகிறது. சூப்பர்நோவா எனப்படும் நட்சத்திர அழிவுகளிலிருந்தும் நியூட்ரினோ உருவாவதுண்டு. அணு உலைகளில் இருந்தும் நியூட்ரினோ வெளிப்படுகிறது. கல்பாக்கத்தில் வெளிவரும் நியூட்ரினோவின் அளவைத் தெரிந்து கொள்ள 2க்கு பக்கத்தில் 20 ஜீரோக்கள் போட்டுக் கொள்ளுங்கள். பூமியே நியூட்ரினோவில்தான் மிதக்கிறது. இதனால் என்ன பலன், என்ன தீமை என்பது பற்றி இதுவரை முழுமையாக ஆய்வுகள் நடைபெறவில்லை.’’
நியூட்ரினோ ஆக்க சக்தியா? அழிவு சக்தியா?‘‘நியூட்ரினோ மூலம் ஆற்றலை உருவாக்க முடியும். அதை விடவும் பல முக்கியத்துவங்கள் இருக்கின்றன. பிரபஞ்சத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று. சூரியனைப் பற்றி, பூமியைப் பற்றி ஆராய முடியும். 1930களில் இருந்தே இது தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இதில் ஆர்வம் காட்டுகின்றன. அண்மைக்கால ஆய்வுகள் யாவும் நியூட்ரினோவை ஆக்க சக்தியாக பயன்படுத்தும் விதத்தில் இல்லை. திரைமறைவில் ஆயுதங்களாக உருமாற்றும் வேலைகளும் நடக்கக்கூடும். அதுதான் விபரீதம்.
பூமிக்கு மேல் உள்ள எதிரிகளின் தளங்களை ‘கூகுள் எர்த்’தில் கண்டுபிடித்து தாக்கிவிடலாம். பூமிக்குக் கீழே 3 கி.மீ. ஆழத்தில் சுரங்கம் தோண்டி அதற்குள் ஒரு யுரேனியம் தொழிற்சாலை இயங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். இதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? அதற்குத்தான் நியூட்ரினோ ஆயுதங்கள். கெமிக்கல் வெப்பன், பயாலாஜிகல் வெப்பன் போல நியூட்ரினோ வெப்பன். நியூட்ரினோவை சேகரித்து ஒளிக்கற்றை வடிவில் மிகச்சிறிய ஆயுதமாக மாற்ற முடியும். அது நேர்க்கோட்டில் நிமிடத்துக்கு பல லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் ஊடுருவிப் பாயும். ஏவுகணை மீது எதிர்த் தாக்குதல் நடத்துவது போல இதைத் தடுக்க முடியாது. தற்காத்துக் கொள்ள அவகாசமே இருக்காது. கடல், மலை எல்லாவற்றையும் ஊடுருவிப் பாயும். பூமிக்குக் கீழே 3 கி.மீ. தூரத்துக்கு நுழைந்து துவம்சம் செய்துவிடும். ஆனால், ஆயுதத்தின் அடையாளமே இருக்காது. ஓரிடத்தில் எதிரி ஒளிந்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலே இதை ஏவி அந்தப் பகுதியையே அழித்து விடமுடியும். சுமார் 3 லட்சம் கி.மீ. தூரத்துக்கு இதை சர்வ சாதாரணமாக ஏவலாம். அமெரிக்காவில் இருந்து அனுப்பினால் அரை நிமிடத்தில் இந்தியாவுக்கு வந்துவிடும்!’’
இந்தியாவில் வேறெங்கெல்லாம் நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள் உள்ளன?‘‘இதற்கு முன் கோலார் தங்கச் சுரங்கத்தில் 2 கி.மீ. ஆழத்தில் ஒரு ஆய்வுக்கூடம் நிறுவப்பட்டது. அது சாதித்தது ஒன்றுமில்லை. ‘பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிவதற்கான அடிப்படை அறிவியல் ஆய்வு’ என்ற பெயரில்தான் இது தொடங்கப்படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆய்வுகளோ உச்சத்தை தொட்டுவிட்டன. இந்நாடுகள் தங்கள் மண்ணில் இந்த ஆயுதங்களை சோதித்துப் பார்க்க முடியாது. வளரும் நாடுகள்தான் சோதனைக்களம். அதற்காகத்தான் பிற நாடுகளை ஊக்கப்படுத்துகின்றன. இந்தியா அதற்கு உடன்பட்டதுதான் வேதனை. முதலில் நீலகிரி மாவட்டத்தின் மசினக்குடியை தேர்வு செய்தார்கள். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவிக்கவே, இப்போது தேனியை தேர்வு செய்திருக்கிறார்கள்.’’
இந்த ஆய்வுக்கூடத்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?‘‘தேனி, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் மூன்றுவித பாதிப்புகள் ஏற்படும். நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை பூமிக்கு மேலே அமைக்க முடியாது. சார்னோகைட் எனப்படும் வலிமையான, கதிரியக்கம் பாயாத பாறைகளுக்கு நடுவில்தான் அமைக்க முடியும். 2 கி.மீ. ஆழத்துக்கு பாறைகளைத் தகர்த்து சுரங்கம் தோண்டி அதன் உள்ளேதான் ‘நியூட்ரினோ அப்சர்வேட்டரி’யை உருவாக்குவார்கள். இதற்கு 10 லட்சம் டன் பாறைகளை உடைத்து வெளியே கொண்டு வரவேண்டும். 1000 டன் வெடிமருந்துகள் பயன்படுத்துவார்கள். கற்பனை செய்யுங்கள். 10 லட்சம் டன் பாறைகளை வெடிவைத்துத் தகர்த்தால் நிலத்தின் தன்மை என்னவாகும்..?
1000 டன் வெடிமருந்து வெடித்து தூசிகள் காற்றில் பறந்து மூச்சுக்காற்றில் கலந்தால் என்னவாகும்? எத்தனை லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்? உடைக்கப்பட்ட பாறைகளை வெளியில் கொண்டுவர சுமார் 1 லட்சம் டிரக் தேவைப்படும். தேசிய நெடுஞ்சாலைகளே தகர்ந்துவிடும். நியூட்ரினோ ஆலைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்ளிட்ட 12 அணைகள் இருக்கின்றன. 1000 டன் வெடிமருந்தை வெடிக்க வைத்து சுரங்கம் தோண்டுவதால் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இந்த அணைகள் பாதிப்புக்கு உள்ளாகலாம். மேலும், இது அணுசக்தித் துறையின் கீழ் இயங்குவதால் செயல்பாடுகள் ரகசியமாகவே இருக்கும்.’’
இது தமிழகத்துக்கு வர என்ன காரணம்?‘‘இங்குள்ள அரசியல் சூழல். குஜராத்துக்குப் போகவேண்டிய ஸ்டெர்லைட் தூத்துக்குடிக்கு வருகிறது. கேரளாவுக்குப் போகவேண்டிய அணுமின் நிலையம் கூடங் குளத்துக்கு வருகிறது. சேலத்தில் யுரேனியம் தொழிற்சாலை தொடங்கப்போகிறார்கள். இப்போது பல மாநிலங்கள் புறக்கணித்த நியூட்ரினோ இங்கே தேனிக்கு வந்திருக்கிறது. மக்களை சோதனை எலிகளாகக் கருதும் மனோபாவம்தான் இதில் வெளிப்படுகிறது.’’
வெ.நீலகண்டன்