துலாம் ராசிக்காரர்களான நீங்கள் மனசாட்சிக்குப் பயந்தவர்கள். வம்புச் சண்டைக்குப் போக மாட்டீர்கள்; வந்த சண்டையை விட மாட்டீர்கள். தன்மானத்தை விட்டுக் கொடுக்காத நீங்கள், தலைகுனிவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பீர்கள். உங்களுக்கு ஐந்தாம் இடம் என்கிற புத்திர ஸ்தானாதிபதியாக கும்பச் சனி வருவதால் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்து ரசிப்பதுடன், கேட்பதற்கு முன்பாகவே பொறுப்போடு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சூட்சும புத்தி மிகுந்திருக்கும். குழந்தைகளை அதிகம் விரட்டாது படிக்க வைப்பீர்கள்.
‘‘என் மகன் அம்பானியா ஆகுறானோ இல்லையோ, அரிச்சந்திரனா வாழ்ந்தா போதும். ஐன்ஸ்டீன் மாதிரி ஆராய்ச்சியில இறங்காட்டியும், சொல்புத்தி கேட்காம சுயமா யோசித்து முடிவெடுக்கும் திராணி இருந்தா போதும்’’ என்று சொல்வீர்கள். ‘‘உங்க தாத்தா இப்படி இருந்தாரு... உங்க மாமாகூட ரொம்ப நல்லவர்தான்’’ என்று தரமாக வாழ்ந்த முன்னோர்களைப் பற்றி அடிக்கடி பிள்ளைகளிடம் சொல்லி வளர்ப்பீர்கள். புத்திரகாரகன் குரு உங்களுக்குப் பகையாளியாக வருவதால், ‘ஆண் பிள்ளைகள் இருந்தால் கொஞ்சம் அலைக்கழிக்கும். பெண் பிள்ளைகள் பிறந்தால் பெருக வைக்கும்’ என்று ஜோதிட நூல்கள் இனம் காட்டுகின்றன.
சனிதான் உங்களின் குழந்தையைத் தீர்மானிக்கிறார். எனவே உங்கள் சொந்த ஜாதகத்தில் அவர் எங்கிருந்தால் என்ன பலன் என்று பார்ப்போமா?
சனி உங்கள் ஜாதகத்தில் மறையாமல் ஆட்சிபெற்று இருந்தாலும், உச்சம் பெற்று இருந்தாலும், சுக்கிரன் மற்றும் புதனின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலும், எல்லோரும் வியக்கும் அளவிற்கு உங்கள் வாரிசுகள் முன்னோடியாக இருப்பார்கள். உங்களுக்கு பெண் குழந்தை முதலில் பிறந்தால் வீடு, மனை, வாகனம் எல்லாம் விரைவாக அமையும். வசதி வாய்ப்புகளும் பெருகும். சமூகத்திலும் அந்தஸ்து பெருகும்.
உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் சுக்கிரனோடு புதன் சேர்ந்திருந்தால், பிள்ளைகள் சங்கீதம், சினிமா என சாதிப்பார்கள். தொழிலதிபராகவும் மிளிர்வார்கள். ஐந்தாம் வீட்டில் செவ்வாய், சூரியன் அமர்ந்திருந்தால் சிலருக்கு குறை பிரசவத்தில் பிள்ளைகள் பிறப்பதுண்டு. முன்கோபியாகவும், பாதை தவறிச் செல்பவர்களாகவும், அடிக்கடி விபத்துகளைச் சந்திப்பவர்களாகவும் இருப்பார்கள். ஐந்தில் குரு நின்றால் தாமதமாக குழந்தை பாக்கியம் கிட்டும்.
ஜாதகத்தில் சனி எப்படி இருந்தாலும் பரவாயில்லை... கவலைப்படாதீர்கள். உங்கள் பூர்வபுண்யாதிபதியான சனியை வலுப்படுத்துவதற்கு நிறைய பரிகாரங்கள் உள்ளன. கொழுப்பு நீக்கிய எள் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தலாம். எள்ளுடன் வெல்லம் சேர்த்து மாதம் ஒரு சனிக்கிழமை சாப்பிடலாம். சனீஸ்வரருக்கு எள் விளக்கு போடலாம். திருநங்கைகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்யலாம். ஆங்கில மொழிக்கு அதிபதியாக சனி வருவதால், தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச உதவுங்கள். வாத நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு உதவுங்கள். அனாதை சடலத்தை அடக்கம் செய்ய உதவுங்கள். வன்னி மரக்கன்றை நட்டுப் பராமரியுங்கள். கருங்குவளை அல்லது சங்குப் பூவால் இறைவனை அர்ச்சித்து வழிபடுங்கள்.
துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரம் 3 மற்றும் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 37 வயது வரை குரு தசை நடை முறையில் இருப்பதால் திருமணம் தாமதித்து முடியும். குரு தசையின் முற்பகுதி 29 வயதில் முடிவடைவதால், 30 வயதிலிருந்து குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனியின் நட்சத்திரத்தில் குரு அமர்ந்திருந்தால் திருமணமும் விரைந்து முடிவடையும்; குழந்தையும் உடனே பிறக்கும்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வீர்யமான பிள்ளைகள் பிறக்கும். கலை, இலக்கியம், ஓவியம் என அனைத்திலும் பிள்ளைகளை வல்லவராக்க முயல்வீர்கள். 24 முதல் 27 வயதிலேயே பிள்ளை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு ஹார்மோன் கோளாறு மற்றும் அதிகக் கொழுப்பால் பிள்ளை பெறுவதில் சிக்கல்கள் வந்து போகும்.
விசாக நட்சத்திரக் காரர்களுக்கு திருமணம் தாமதமாக நடந்தால் குழந்தைகள் அறிவாளி யாகவும், அதிர்ஷ்டசாலி யாகவும் பிறப்பார்கள். பலருக்கு 30 வயது முதல் 37க்குள்தான் குழந்தை கிடைக்கிறது.
பொதுவாக துலாம் ராசிக்காரர்கள் மீனம், ரிஷபம் ராசியில் பிறந்தவர்களைத் திருமணம் முடிப்பது நல்லதல்ல. திருமணத்தின்போது வாழ்க்கைத் துணையின் ஜாதகத்தை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது நல்லது.
துலாம் ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் தருவது கும்பச் சனி. எனவே குன்றின் மீதுள்ள இறைவனை தரிசிக்க வேண்டும். ஏனெனில் சனி குன்றுகளுக்கு உரியவன். திருக்கழுகுன்றத்தில் மலையில் அருளும் வேதகிரீஸ்வரரை வணங்குங்கள். மலை அடிவாரத்தில் பக்தவச்சலர் எனும் திருப்பெயரோடு அருளும் ஈசனையும், அம்பாள் திரிபுரசுந்தரியையும் வணங்கி வாருங்கள். மனம் போல மழலை வாய்க்கும். இத்தலம் செங்கல்பட்டிற்கு அருகே உள்ளது.
விருச்சிக ராசிக்காரர்களான நீங்கள் சாதத்துடன் வீரத்தையும், விவேகத்தையும் ஊட்டி வளர்ப்பீர்கள். கறார் பேர்வழிகளான நீங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பீர்கள். கண் பார்த்துப் பேசும் நீங்கள், பிள்ளைகள் ஏதேனும் மறைத்துப் பேசத் தொடங்கும்போதே கண்டுபிடித்துவிடுவீர்கள். ‘நாட்டு சுதந்திரத்துக்காக நான் வாள் எடுத்து சண்டை போடலை. உண்ணாவிரதம் இருக்கலை. ஊர்வலமும் போகலை. ஆனா பிள்ளைகளை நாட்டுப்பற்று, மொழிப்பற்று உள்ளவர்களா உருவாக்கணும்ங்கறது தான் ஆசை’ என்று மனதிற்குள் சபதம் எடுத்துக் கொள்வீர்கள்.
உங்களின் பூர்வபுண்யாதிபதி எனும் குழந்தை ஸ்தானத்திற்கு அதிபதியாக மீன குரு வருவதால், மிகுந்த அறிவுள்ள பிள்ளைகள் பிறப்பார்கள்.
அவர்களை நீதிக் கதைகள் சொல்லி வளர்ப்பீர்கள். தர்ம சிந்தனையையும் அதிகம் புகட்டுவீர்கள். சார்ந்திருக்கும் இனம், மதக் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதில் கடுமையாக இருப்பீர்கள். தவறு செய்து விட்டால் தயங்காமல் தண்டிப்பீர்கள். மீனம் கடல் வீடாக ஆழமாக இருப்பதால், உங்கள் பிள்ளைகள் உங்களைவிட ஆழ்ந்துபோய் யோசிப்பார்கள். சமயங்களில் பிள்ளைகளிடமே ஐடியா கேட்பீர்கள். மேலும், கடல் வீடாவதால் பிள்ளைகள் கடல் கடந்து சென்று படிப்பார்கள். தலைநகரங்களில் வாழ விரும்புவார்கள்.
உங்களின் சொந்த ஜாதகத்தில் கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் ஒன்றில் குரு அமர்ந்திருந்தாலோ, குரு சூரியனுடன் சேர்ந்திருந்தாலோ ஒரு குறையும் வாராத நிறைவான வாழ்க்கையை பிள்ளைகள் வாழ்வார்கள். உற்றார், உறவினர்களெல்லாம் வியந்து பாராட்டும் உத்தம புத்திரனைப் பெறுவீர்கள். அமைச்சராக, காவல்துறை அதிகாரியாக, பேராசிரியராக, வங்கி மேலாளராக உங்கள்
பிள்ளைகள் தகுதி பெறுவார்கள். குரு செவ்வாயுடன் சேர்ந்து, மேஷம், தனுசு வீடுகளில் இருந்தால் ராணுவம் அல்லது விமானப் படையில் முதன்மை பதவி வகிப்பவராக இருப்பார். மற்ற வீடுகளில் சேர்ந்திருந்தால் தந்தை சொல் தட்டுபவராகத் தான் இருப்பார்.
உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் நீசச் சனி, புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களில் ஒன்று இடம் பெற்றிருந்தால் குழந்தை பாக்கியத்தில் பிரச்னைகள் வரும். சிலருக்கு மனவளம் குன்றிய குழந்தைகள் பிறக்கக் கூடும். மருத்துவ உதவியை நாடுவது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிற்குரிய கிரகம் வலுவாக இருக்கிறதா என்று பார்த்து திருமணம் முடித்தால் அற்புதமான குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குருவின் பலத்தை அதிகப் படுத்த நடைமுறைப் பரிகாரங்களாக சிலவற்றைச் சொல்கிறேன். நூலகத்திற்கு புத்தகம் வாங்கிக் கொடுங்கள். பாடசாலைக்கு மின்விசிறி, மின்விளக்கு வாங்கிக் கொடுங்கள். கல்விக் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் செலுத்துங்கள். நோய் வாய்ப்பட்டு, அடிபட்டுக் கிடக்கும் பசுவைக் காப்பாற்றுங்கள். தென்னை, பனை மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். குழந்தை பாக்கியம் தவறாமல் கிடைக்கும்.
விருச்சிக ராசியில் விசாக நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் குழந்தைகளின் சுதந்திரத்தில் தலையிட மாட்டீர்கள். ‘இதைப் படி... அதைப் படி...’ என்று கசக்கிப் பிழிய மாட்டீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பீர்கள். ஏறக்குறைய 37 வயது வரை புதன் தசை உங்களுக்கு இருப்பதால் உங்களில் பலருக்கு 33 வயதிலிருந்து குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள்.
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக் குறைய 34 வயது வரை கேது தசை இருப்பதால் 23 முதல் 28 வயதுக்குள் திருமணம் முடிப்பது நல்லது. முதலில் கருச்சிதைவு ஏற்பட்டு பின்னர் குழந்தை தங்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கர்ப்ப காலத்தில் கோபப்படாமலும், தீவிரமாக யோசிக்காமலும் இருப்பது நல்லது. குழந்தைகள் மீது உங்கள் அபிலாஷைகள் அத்தனையையும் திணிக்காதீர்கள். பெரிய எதிர்பார்ப்புகள், கனவுகளுடன் குழந்தைகளை வளர்க்காமல் இயல்பாக வளருங்கள்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 28 வயதிற்குள்ளேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை துறுதுறுவென்று இருக்கும். ‘‘நாத்தனார் பொண்ணு எம்.பி.பி.எஸ் படிக்குது. என் பொண்ணும் மருத்துவம் படிச்சாதான் மதிப்பு’’ என்று சொந்த பந்தங்களின் வாரிசுகளுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டுத் தொந்தரவு தராதீர்கள். காதல் திருமணம் செய்து கொண்டாலும் வருத்தப்படாதீர்கள்.
பொதுவாக விருச்சிக ராசிக்காரர்கள் மிதுன ராசி வாழ்க்கைத்துணையைத் தவிர்ப்பது நல்லது. உங்களில் சிலருக்கு இரட்டைக் குழந்தை பிறப்பதும் உண்டு.
உங்கள் குழந்தை பாக்கியத்தை மீன குரு தீர்மானிப்பதால், குருபரனான முருகனை வணங்குதல் நன்மையைக் கொடுக்கும். சித்தரோடு தொடர்புடைய தலமாக இருப்பின் இன்னும் சிறப்பாக இருக்கும். அப்படிப்பட்ட தலமே எட்டுக்குடி ஆகும். இத்தலத்தில் முருகப் பெருமான் மூலவராகக் காட்சியளிக்கிறார். மேலும், வான்மீகநாதர் எனும் சித்தர் இத்தலத்தில் ஜீவசமாதி கொண்டருள்கிறார். இத்தலத்தை தரிசித்து வாருங்கள். மழலை வரம் வாய்க்கும். நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் 20 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)
முனைவர் கே.பி.வித்யாதரன்