2011 பொதுத்தேர்வு விலங்கியல் ஆசிரியர்களை
அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டுப் போனது. காரணம், 100, 50, 20, 10, 5 என
முந்தைய ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்த சென்டம் எண்ணிக்கை
கடைசியில் ‘ஒன்றுமில்லை’ என்ற நிலையில் வந்து நின்றது கடந்த ஆண்டுதான். ஏழே
முக்கால் லட்சம் பேர் எழுதிய தேர்வில் ஒருத்தர்கூட விலங்கியலில் சென்டம்
வாங்கவில்லை. ‘விடைத்தாள் திருத்தப்பட்ட முறை ஸ்ட்ரிக்ட்’ என்றும் ‘சிலபஸே
கடினமானது’ என்றும் இருவிதக் காரணங்கள் சொல்லப்பட்டன. ஒரேயொரு
மதிப்பெண்ணில் சென்டம் நழுவவிட்ட வீரவநல்லூர் சிவகாமிகூட, ‘‘முழு
நம்பிக்கையில இருந்தேன். ஒரு மார்க் கேள்விகள் எல்லாத்துக்குமே சரியான விடை
எழுதியிருந்தேன். வேற எந்தப் பகுதியிலோதான் குறைஞ்சிருக்கு’’ என்றே
சொல்கிறார்.
இயற்பியல், வேதியியல் போல பாடங்களின் எண்ணிக்கை இதில்
அதிகமில்லை. எட்டே எட்டு பாடங்களே. ஆனால், ‘இயற்பியலில் 3 பாடங்கள்
அளவுக்கு இதன் ஒரு பாடம் இருக்கிறது’ என்று மாணவர்கள் மலைக்கிறார்கள்.
கடந்த
ஆண்டு சோகம் மறக்கப்பட வேண்டுமெனில், கடைசிகட்டத் தயாரிப்பின் வேகத்தைக்
கூட்ட வேண்டியது அவசியம். சிவகாமிக்கு விலங்கியல் பாடம் எடுத்த வீரவநல்லூர்
செயின்ட் ஜான் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர் கண்ணன் அதற்கான டிப்ஸ்
தருகிறார்...
பாடங்களோட அளவு பெரிசா இருக்கிறதால பாடங்களுக்குள்ள
எங்காச்சும் இருந்து ஒரு மார்க் கேள்விகள் நிறையக் கேட்கறாங்க. ‘புக்
பேக்’ல மாதிரிக்காக 10 கேள்விகள்தான் இருக்கும். அதனால புத்தகத்தை முழுசா
வாசிக்கத் தவறுகிற மாணவர்கள் ஒரு மார்க் பகுதியிலயே மதிப்பெண் இழக்கற நிலை
வந்திடுது. பாடம் நடத்தி முடிக்கறப்ப ஆசிரியர்களே அந்தப் பாடத்துல இருந்து
கேக்க வாய்ப்பிருக்கற கேள்விகளைத் தனியாத் தொகுத்துத் தந்தா இதுல இருந்து
தப்பிக்கலாம். கடைசி நேரமான இப்ப நினைச்சாக்கூட அந்த வேலையை சுலபமா
செய்யலாம்.
‘உடற்
செயலியல்’ங்கிற முதல் பாடத்தை முழுசா படிக்க வேண்டியது கட்டாயம். வரிக்கு
வரி வாசிச்சா நல்லது. 1, 3 மார்க் கேள்விகள் தலா பத்து, 5 மார்க் கேள்விகள்
நான்கு, 10 மார்க் கேள்விகள் மூன்று என இந்தப் பாடத்துல இருந்தே நூறு
மதிப்பெண்கள் வரை கேள்விகள் கேட்கப்படுது. மொத்த மார்க்ல மூணுல ரெண்டு
பங்கு. மனித உடலுறுப்பு களோட செயல் பாடு பத்தின பாடம்ங்கிறதால படிக்கிறதும்
ரொம்ப எளிதுதான். இந்தப் பாடத்துல வைட்டமின்கள், உணவுச் செரிமானம்
பகுதியில இருந்து பெரிய கேள்விகள் வருஷம் தவறாமக் கேட்கப்படுது.
‘நோய்த்தடை காப்பியல்’ மற்றும் ‘பரிணாமக் கோட் பாடுகள்’ பாடங்கள்ல பெரும்பாலும் 5 மதிப்பெண் கேள்விகளுக்குத்தான் வாய்ப்பிருக்கு.
‘சுற்றுச்சூழல்
அறிவியல்’ங்கிற பாடம் கட்டாய வினாவுக்கான பாடமாக சமீபகாலமா
பார்க்கப்படுது. தொடர்ந்து நாலு வருஷமா இந்தப்பாடத்துல இருந்துதான் அந்தக்
கேள்விகள் எடுக்கப்படுகின்றன.
தற்கால மரபியல், பயன்பாட்டு
உயிரியல், நீர் உயிரி வளர்ப்பு பாடங்கள்ல இருந்து தலா ஒரு 10 மார்க் கேள்வி
வரலாம். எந்தக் கேள்விக்கு வாய்ப்பு இருக்குங்கிறதையும் சுலபமா
தீர்மானிச்சிடலாம். ஏன்னா, ரெண்டு அல்லது மூணு பெரிய கேள்விகளே இந்தப்
பாடங்கள்ல இருக்கும்.
5 மற்றும் 3 மதிப்பெண் கேள்விகளை எழுதறப்ப
பாயின்ட்களா பிரிச்சு எழுதறப்பத்தான் முழு மார்க் கிடைக்குது. பாராவா
எழுதாமல் இப்படி எழுதறதைத்தான் திருத்தறவங்க எதிர்பார்க்குறாங்க. அப்படி
எழுதறப்ப மதிப்பெண்களோட எண்ணிக்கைக்கு ஏற்ப பாயின்ட்டுகள் இருக்க வேண்டியது
அவசியம்.
இப்போது ஆழ்வார் குறிச்சி பரம கல்யாணி கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் படிக்கும் சிவகாமியின் ஆலோசனைகள் இவை...
ஒரு
மார்க் கேள்விகள் தவிர்த்த மத்த விடைகளைப் பாராவாகத்தான் நான்
எழுதியிருந்தேன். அதனாலதான் ஒரு மதிப்பெண் குறைஞ்சிருக்கு. அதனால
பாயின்ட்டுகளாப் பிரிச்சு எழுதுங்க.
10 மதிப்பெண் கேள்விகள்ல சில
திரும்பத் திரும்ப வருது. பழைய கேள்வித்தாள்களைப் புரட்டிப் பார்த்தா சரியா
அந்தக் கேள்விகளை அடையாளம் காணலாம்.
படம் வரைய வேண்டி இருந்தா
முதல்ல படத்தோட பாகங்களைச் சரியாக் குறிக்க முடியுதான்னு பார்த்துக்கணும்.
ஏதாச்சும் ஒரு பாகத்தைக் குறிப்பிட மறந்தாக்கூட மார்க் குறையும். பாகங்கள்
சரியாத் தெரியாட்டி அந்தக் கேள்விகளை சாய்ஸில் விட்டுடலாம்.
அட்டவணைகள்,
அளவுகள் பத்திக் கேள்விகள் இருக்கும். எண்ணிக்கையைக் குறிப்பிடறப்ப கவனம்
தேவை. விடையை எழுதி முடிச்சதுமே ஒருமுறை செக் பண்ணிக்கணும்.
அய்யனார் ராஜன்
படங்கள்: எஸ்.ராஜசேகர்