‘பொற்கோயில்’
என்றால் அமிர்தசரஸில் இருக்கும் சீக்கியர்களின் புனிதத் தலம் தான்
ஞாபகத்துக்கு வரும். ஆனால் கடந்த ஆண்டு பாதாள அறையில் கிடைத்த
பொக்கிஷங்கள், உண்மையிலேயே ‘பொற்கோயிலாக’ திருவனந்தபுரம் அனந்த
பத்மநாபசுவாமி கோயிலை மாற்றிவிட்டது. அதற்கு முன்புவரை இந்தக் கோயிலை
அதிகமாக யாரும் கண்டுகொண்டதில்லை. இப்போது உலகின் மிகப் பணக்கார கோயில்கள்
பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இந்தக் கோயிலை தரிசிக்க
வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் குவிகின்றனர். சர்ச்சைகள், வழக்குகளைத்
தாண்டி இந்தக் கோயில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி ஆரம்பமாகிவிட்டது.
இந்தக்
கோயிலுக்கு பல தனித்துவங்கள் உண்டு. சுமார் 9 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ள இக்கோயில் எந்த வருடத்தில் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை.
17ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ‘அனிழம் திருநாள்’
மார்த்தாண்ட வர்மா இக்கோயிலை விரிவுபடுத்திக் கட்டினார். இந்தியாவில்
மன்னராட்சி முடிந்த பின்னரும் கோயில் முழுக்க முழுக்க திருவிதாங்கூர்
மன்னர் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கோயிலில் பணிபுரியும்
நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மன்னர் குடும்பத்தினர்தான் சம்பளம் கொடுத்து
வருகின்றனர். கேரளாவுக்கே உரித்தான தொழிற்சங்கம் இங்கும் உண்டு. சம்பள
உயர்வு கேட்டு போராட்டம் நடைபெறுவதும் உண்டு.
10 ஆண்டுகளுக்கு
முன்புதான் இங்கு சின்னச் சின்ன பிரச்னைகள் தலை தூக்கத் தொடங்கின. கோயிலின்
ரகசிய அறைகளிலிருந்து சிலர் நகைகளை திருடிச் செல்வதாக தகவல்கள் வெளி
உலகத்திற்கு கசியத் தொடங்கின. இதை அறிந்த அப்போதைய கோயில் நிர்வாக அதிகாரி
ஊழியர்களைக் கண்காணிக்கத் தொடங்கினார்.
கோயில் இடத்தில் கடைகளும்
வீடுகளும் கட்டியிருக்கும் பலரும் முறையாக வாடகை கொடுப்பதில்லை. வாடகை
பாக்கியை வசூலிக்க நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்தது. இப்படித்தான்
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியும் வக்கீலுமான சுந்தரராஜனுக்கும் கோயில்
நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இவர் கோயில் இடத்தில் பல வருடங்களாக
வக்கீல் அலுவலகம் வைத்திருந்தார். தனக்கும் நோட்டீஸ் அனுப்பியதால்
ஆத்திரமடைந்த அவர், ‘கோயில் ரகசிய அறைகளிலிருந்து நகைகள் மாயமாவதால்,
அந்தப் பொக்கிஷங்களை மதிப்பிட வேண்டும்’ என்று திருவனந்தபுரம்
நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுதான் பத்மநாப சுவாமி
கோயில் பொக்கிஷங்களை சர்வதேச அளவில் பிரசித்தியடைய வைத்தது.
திருவனந்தபுரம்
நீதி மன்றத்தில் தொடங்கிய இந்த வழக்கு, கேரள உயர் நீதிமன்றம் சென்று,
இப்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ளது. மொத்தமுள்ள ‘ஏ’ முதல் ‘எஃப்’
வரையிலான 6 ரகசிய அறைகளில் ‘பி’ அறையைத் தவிர ஏனைய 5 அறைகளும்
திறக்கப்பட்டு விட்டன.
உச்ச நீதிமன்றம் முதலில் நியமித்த நிபுணர்
குழுவினர் இந்த அறைகளைத் திறந்து பரிசோதித்தனர். என்னென்ன நகைகள் இருந்தன
என்று இக்குழுவில் இருந்த சிலர் வெளியில் கூறியதால் உச்ச நீதிமன்றம்
உடனடியாக அவர்களை மாற்றியது. நிபுணர்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது, 5
ரகசிய அறைகளிலும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள்
இருக்கக்கூடும். எல்லாமே பழமையான நகைகள்!
வெறுமனே இன்றைய
மார்க்கெட் ரேட்டில் இவற்றை மதிப்பிட முடியாது. இதனால்தான் இவற்றின்
உண்மையான மதிப்பைக் கண்டுபிடிக்க தேசிய அருங்காட்சியக தொல்பொருள்
பாதுகாப்புத் துறைத் தலைவர் எம்.வேலாயுதன் நாயர் தலைமையில் ஒரு
மதிப்பீட்டுக் குழுவையும், இந்தப் பணிகளைக் கண்காணிக்க ஒரு மேற்பார்வைக்
குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இந்தக் குழு
திங்கள்கிழமையிலிருந்து பணிகளைத் தொடங்கியுள்ளது. முதலில் பொக்கிஷங்கள்
அனைத்தையும் கணக்கிட்டு முடித்த பிறகே மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கப்படும்.
கணக்கிடும் பணிகளை கேரள அரசின் எலக்ட்ரானிக் நிறுவனமான கெல்ட்ரானும்,
மத்திய அரசு நிறுவனமான இஸ்ரோவும் சேர்ந்து செய்கிறது. இதற்காக பல கோடி
ரூபாய் மதிப்பிலான பியூரிட்டி அனலைசர், லேசர் கருவிகள், 3டி கேமரா உட்பட
அதிநவீன உபகரணங்கள் ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து
வரவழைக்கப்பட்டுள்ளன.
பணிகள் அனைத்தும் படு ரகசியமாக நடக்கும்.
ரகசிய அறைகளின் அருகே உள்ள ஒரு காலியிடம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு நிபுணர் குழுவைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. ரகசிய
அறைகளிலிருந்து பொக்கிஷங்களை எடுத்துக் கொடுப்பது மட்டும்தான் நிபுணர்
குழுவின் வேலை. இதற்குப் பிறகு கெல்ட்ரான் நிபுணர்கள் நகைகளைக்
கணக்கிடுவார்கள். கண்காணிப்பதற்காக 13 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்தும்
மிகப் பழமையான நகைகள் என்பதால் அதிக கவனத்துடன் இவற்றை மதிப்பிட
வேண்டியுள்ளது. இதனால் ஒரு நகையை மதிப்பிட குறைந்தது 20 நிமிடங்களாவது
ஆகும் என்கிறார்கள். மதிப்பிட்ட பின்னர் ஒவ்வொரு நகையிலும் லேசர்
குறியீடுகள் இடப்படும். ஒவ்வொரு நகையையும் தனித்தனியாக எடுத்து, அதிலுள்ள
தங்கத்தின் மதிப்பைக் கணக்கிட்டுவிட்டு, ரத்தினங்கள், வைரங்கள், மாணிக்கம்
உட்பட கற்களையும் கணக்கிட்டு அதற்குப் பிறகு மொத்தமாக மதிப்பிட வேண்டும்.
இதனால் 5 அறைகளிலுள்ள நகைகளை மதிப்பிட பல மாதங்களோ, வருடங்களோ கூட ஆகலாம்.
எல்லாம் முடிந்ததும் பொக்கிஷங்களின் நிஜ மதிப்பு தெரியும்போது பத்மநாப
சுவாமி உலகின் மிகப் பணக்காரக் கடவுள் ஆகியிருப்பார்!
- திருவனந்தபுரத்திலிருந்து ஏ.கே.அஜித்குமார்