விஜயா டீச்சர்



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

                 ‘‘என்ன முடிவு செய்திருக்கீங்க..?’’ என்றபடி வந்து உட்கார்ந்தார் ரத்னவேல். வழக்கமாக டிபனை எடுத்துச் செல்லும் மங்கையிடம், ‘‘நாம இன்னிக்கு அங்கே போய் சாப்பிட்டுக்கலாம்...’’ என்று சொல்லிவிட்டு காலங்காத்தாலேயே கிளம்பி வந்துவிட்டார். மங்கையும் அவரை எப்படித் தடுப்பது என்று தெரியாமல், பின்னாலேயே வந்து நின்று கொண்டிருந்தாள்.

ஈஸிசேரில் சாய்ந்திருந்த அப்பா பதிலேதும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தார்.

‘‘நான் அன்னிக்குச் சொன்னதுதான் மாமா... நல்ல இடம் வரும்போது தக்க வெச்சுக்கணும். விட்டுட்டு முழிக்கக் கூடாது. நீதாண்டா மாப்பிள்ளைன்னு பேசி வச்சுக்குவோம்... சீதா படிப்பு முடியட்டும்... அதுக்கு நடுவுல விஜயாவுக்கு மாப்பிள்ளையைப் பார்த்துடுவோம்... நம்ம ராதாவுக்கு செட் ஆகிடுச்சு... அடுத்தடுத்து கல்யாணத்தை முடிச்சுடலாம்... என்ன சொல்றீங்க..?’’ என்றார்.

கடைசியாகக் கேட்ட ‘என்ன சொல்றீங்க’ என்பதைத் தவிர மற்ற எல்லாமே தீர்மானங்களாக இருந்தன. அதில் மற்ற யாருடைய கருத்துக்கும் இடமே இல்லாமல் முடிவாக அறிவித்திருந்தார். கடைசியாகக் கேட்ட ‘என்ன சொல்றீங்க’ என்பதில்கூட, ‘சம்மதம்தானே’ என்ற பதில் ஒளிந்திருந்தது.

அப்பா அம்மாவைப் பார்த்தார். பிறகு, ‘‘நான் கடைக்குப் போயிட்டு வந்துடுறேன் மாப்ளே... முடிவு பண்ணிடுவோம்... அதுக்கு முன்னே அவங்க வீட்டையும் ஒரு தடவை பார்த்துடுவோம்...’’ என்று சொல்லிவிட்டு குளிக்கப் போனார்.

‘‘தட்டை எடுத்துப் போடு... மனுஷனுக்கு ஆயிரம் வேலை கிடக்கு... கல்யாண வேலைன்னா சும்மா இல்லை...’’ என்று தானே தலையில் போட்டுக் கொண்டு பேசத் தொடங்கிவிட்டார் ரத்னவேல். மங்கைக்கு மட்டும் மனதுக்குள் ஏதோ செய்தது. ஆனால், ரத்னவேலை மிஞ்சி அவளால் எதுவும் பேசமுடியாது.

தன் வீட்டில் உட்கார்ந்து தட்டைப் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ரத்னவேலைப் பார்த்ததும் ராதாவுக்கு ஆச்சரியம். ‘‘என்ன மாமா... எங்க வீட்டுல கைநனைக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போனீங்களே. திடும்னு விட்டுட்டீங்க...’’ என்று கிண்டலாகக் கேட்ட ராதாவை முறைத்துப் பார்த்த ரத்னவேல், ‘‘உனக்கு மாப்பிள்ளை தானா அமைஞ்சுட்டான்னு சந்தோஷப்படாதே... நான் நினைச்சேன்னா அந்த மாப்பிள்ளை துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிப் போயிடுவான். சகலை சப்போர்ட் வேணாமா அவனுக்கு?’’ என்றார்.

அப்போதுதான் குளித்துவிட்டு வந்தாள் விஜயா. ‘‘மாமா... அவளே என்ன சாக்குன்னு திரியுறா... நீங்க வேற!’’ என்று அலுப்போடு சொன்னவள், ரத்னவேலை பார்வையால் ஊடுருவியபடி கேட்டாள்... ‘‘மாமா! மத்தவங்க யோசிக்கறதை எல்லாம் விடுங்க... உங்க சொந்தம்னு சொல்லிக்கிட்டு வந்தவங்க நல்லவங்களான்னு நீங்களே சொல்லுங்க. அக்கா வேண்டாம்னு சொல்லிட்டு தங்கையைக் கேட்கறது நல்லாவா இருக்கு..?’’

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazineமங்கை விஜயாவைப் பார்த்தாள். ரத்னவேலைப் பார்த்தாள். அவள் ஏதோ சொல்ல வருகிறாள் என்பது ரத்னவேலுக்கு புரிந்தது. ‘‘தோசையை வச்சுட்டுப் போ...’’ என்று அவளைத் துரத்தியவர் பிறகு விஜயா பக்கம் திரும்பி, ‘‘நீ இதை வேற கண்ணோட்டத்தோட பார்க்கணும். வெறுமே அக்கா பிடிக்கலை... தங்கையைக் கொடுங்கனு அவன் கேட்கலை. அவனுடைய விருப்பத்தைச் சொல்லியிருக்கான். நீ இப்படி யோசிச்சுப் பாரு... ஒருவேளை என் வார்த்தையைத் தட்ட முடியாம உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிக் கல்யாணம் பண்ணிட்டு, அப்புறம் கண்டும் காணாம இருந்தான்னாலோ வேற ஏதாவது பழக்க வழக்கம்னு போனான்னாலோ யாருக்கு கஷ்டம்?

உன்னை மாதிரி என்னை மாதிரி கள்ளம் கபடம் இல்லாம இருக்கறான் அவன்... பொதுவா குண்டா இருக்கறவங்களுக்கு மனசுல எதுவும் இருக்காது, நம்மளை மாதிரியே..! அவனை நல்லவன்னு நான் சொல்றேன்... அப்புறம் அதுக்கு மேல யார் சர்டிபிகேட் தரணும்னு நினைக்கிறீங்க..?’’ என்றவர், விஜயாவுக்கு தோசை எடுத்துக் கொண்டு வந்த அம்மாவை நோக்கி தன் கடைசி அஸ்திரத்தையும் வீசினார்.

‘‘இதோ பாருங்க அத்தை... அந்தப் பையன் இந்த வீட்டுக்குள்ளே காலெடுத்து வெச்ச நேரம் ‘டக்’குனு ராதாவுக்கு நல்லபடியா முடிஞ்சிருச்சு. ஆனா, அவன் தலையிலே விஜயா பேரை எழுதாம அந்த பிரம்மன் நம்ம சீதா பேரை எழுதியிருக்கான். அதனால்தான் அவன் வாயில் அப்படி ஒரு பேச்சு வந்திருக்கு. நம்ம கையிலே என்ன இருக்கு சொல்லுங்க? இதே யோகத்துல விஜயாவுக்கும் ஒரு மாப்பிள்ளை வந்திடுவான்னு நம்புவோமே... என்ன சொல்றீங்க?’’ என்றார்.

அம்மா மொத்தத்தையும் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். இருந்தாலும் ‘பிரம்மன்... தலையெழுத்து... நல்லநேரம்... ராதாவுக்கு மாப்பிள்ளை அமைந்தது...’ என்று அடுக்கடுக்காக ரத்னவேல் நம்மை மீறிய செயல் என்று சொன்ன விஷயங்களைப் போல விஜயாவுக்கும் மாப்பிள்ளை அமைந்துவிடாதா என்று அவளும் ஏங்கினாள். தட்டை எடுத்து கழுவப் போட்டுவிட்டு, கைகழுவிய விஜயாவின் முகத்தையே பார்த்தாள். விஜயா பதில் ஏதும் சொல்லாமல் மடமடவென்று புறப்பட்டுப் படியிறங்கி விட்டாள்.

அம்மாவின் முகத்தைப் பார்த்த ரத்னவேலுக்கு சூழல் கொஞ்சம் இளகியிருப்பது புரிந்தது. மெதுவாக போனைக் கையில் எடுத்து, ‘‘சொல்லு தம்பி! இல்லப்பா... உன்னைப் பிடிக்கலைனு யாரு சொல்ல முடியும்? எங்களுக்கு என்ன யோசனைன்னா, மூத்தவ இருக்கும்போது இளையவளுக்கு எப்படிங்கறதுதான்... அதோட, நீ இப்படி ‘இளையவளைத் தாங்க’ன்னு பளிச்சுனு கேட்டிருக்க வேண்டாம். என்ன இருந்தாலும் மனசு சங்கடப்படுமா, இல்லையா? சேச்சே... அதையெல்லாம் நான் பேசிக்கறேன்! நல்ல பதிலோட நான் வர்றேன்... அப்பாகிட்டே சொல்லிடு’’ என்று சொல்லிவிட்டு, ‘‘மங்கை... அப்போ நான் வரட்டுமா..?’’ என்றார்.

‘‘இந்தாங்க சார்ஜர்... போனுக்கு ராத்திரியே சார்ஜ் போடலைன்னு சொல்லிக்கிட்டிருந்தீங்களே! ராத்திரியே பேட்டரி போயிருக்கும். இதை எடுத்துட்டுப் போங்க...’’ என்று எடுத்துக் கொடுத்தாள் மங்கை. ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..!’ என்பது போல அதைக் கண்டுகொள்ளாமல் கிளம்பிப் போனார் ரத்னவேல்.

வழக்கம்போல படியிறங்கிய விஜயா கிடுகிடுவென்று நடந்தாள். கால்கள் தாமாகவே ஸ்வீட் ஸ்டால் நோக்கி நடந்தன. அனிச்சையாக கை ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுக்க, ‘‘இன்னிக்கு நீ சீக்கிரம் ஸ்கூலுக்குப் போகணுமா? உன்கிட்டே கொஞ்சம் பேசணும்...’’ என்றார் அப்பா.

‘‘பத்து நிமிஷம் லேட்டா போனாகூட ஸ்கூல் டைமுக்கு போயிருவேன்... அதுக்கும் மேலே ஆகும்னா ஒரு போன் பண்ணிச் சொல்லணும்! என்ன விஷயம்பா..?’’ என்றாள் விஜயா.

‘‘பத்து நிமிஷம் போதும்... உள்ளே வா!’’ என்றார் அப்பா.

அந்த ஸ்வீட் ஸ்டாலின் முன்புறம் ஸ்வீட்களை வைக்கும் அலமாரியும் கார அயிட்டங்கள், பிஸ்கெட்டுகள் என்று அடுக்கி வைத்து தோரணையாக இருந்தாலும், பின்னால் இருக்கும் இடம் ஒரு வீடு போலவே இருந்தது. கார அயிட்டங்கள் போட்டு எடுக்கும் பெரிய பெரிய எண்ணெய் சட்டிகள், விறகு அடுப்பு என எப்போதும் பரபரப்பாக இருக்கும். மூலையில் ஒரு ஸ்டூல் போட்டு வைத்திருக்கும். வீட்டில் இருந்து சாப்பாடு வந்தால் அங்கு வைத்துத்தான் அப்பா சாப்பிடுவார். மத்தியான நேரத்தில் அப்படியே ஸ்டூலில் உட்கார்ந்து, கதவில் சாய்ந்து கொஞ்சம் கண் அயர்வார். மற்றபடி அந்த ஸ்டூலை வெளியில் போட்டு கடைப்பையன் உட்கார்ந்திருப்பான்.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazineகடலைப் பொட்டலத்தை கடைப் பையனிடம் கொடுத்து, ‘‘போகும்போது வாங்கிக்கறேன்’’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் விஜயா. அப்பா அதை வாங்கி கல்லாவில் வைத்துவிட்டு, ‘‘கடையைப் பார்த்துக்கோ’’ என்று பையனிடம் சொல்லிவிட்டு விஜயாவைப் பின்தொடர்ந்தார்.

‘‘ரெண்டு விஷயம்மா... அன்னிக்கு வந்த மாப்பிள்ளைப் பையன் கேட்ட விஷயத்தைத் தவிர்த்துப் பார்த்தா அந்த இடம் நல்ல இடம்தான். நான் மங்கையையும் மனசுல வெச்சுக்கிட்டுத்தான் சொல்றேன். நம்ம மாப்பிள்ளை அந்த இடத்தில் கூடுதல் அக்கறை காட்டுறதுனால நான் மங்கையைப் பற்றிச் சொல்றேன். அந்த மாப்பிள்ளைப் பையனுக்கு ஃபைனான்ஸ்தான் தொழில்னாலும் நிலபுலம், வீடு வாசல்னு நல்ல வசதியாதான் இருக்காங்க. அதனால, ‘பெரிய பொண்ணுகளுக்கு முடிச்சுட்டுத்தான் சீதாவுக்கு பண்ணப் போறோம். நீங்க காத்திருக்கறதானா மேற்கொண்டு பேசலாம்’னு சொல்லலாம். என் நெனைப்பு இது... நீ என்ன சொல்றே..?’’ என்றார் விஜயாவின் முகத்தைப் பார்க்காமல்!

‘‘ரெண்டாவது விஷயம் என்னப்பா..?’’ என்றாள் விஜயா.

‘‘இல்லைம்மா... முதல் விஷயத்துக்கு உன் பதில் என்னன்னு கேட்டேன்!’’ என்றார். அனலான சூழலில் நின்றிருந்தாலும், அப்பாவின் குரலில் தெரிந்த கனிவு விஜயாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. பிள்ளைகளின் வாழ்க்கை பற்றிய அவருடைய கவலை ஆறுதலாகவும் இருந்தது.

‘‘நீங்க ரெண்டாவது விஷயத்தைச் சொல்லுங்க... நான் மொத்தமா பதில் சொல்றேன்’’ என்றாள்.

‘‘உன் ஜாதகத்தை சிதம்பரத்துல நாடி ஜோதிடர்கிட்டே காட்டலாம்னு பார்க்கிறேன்... என்ன தடை இருக்குன்னு சொல்லிடுவாங்க இல்ல! அதுதான் ரெண்டாவது விஷயம்’’ என்றார்.

அப்பா இந்த விஷயத்தை முதலில் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது.

‘‘என் ஜாதகத்தை விடுங்கப்பா... அதை எப்போ வேணா பார்த்துக்கலாம். இப்போ என் பதிலைச் சொல்றேன்! ராதாவைப் பெண் பார்த்திட்டுப் போன சுகுமார் அப்பாகிட்டே பேசி நாள் பார்க்கச் சொல்லுங்க... அடுத்து அந்த ஃபைனான்ஸ் மாப்பிள்ளை வீடு எப்படி, ஆட்கள் எப்படின்னு மாமாவுக்குத் தெரியாம அண்ணனை விட்டு விசாரிக்கச் சொல்லுங்க. அது எல்லாம் சரியா இருந்தா சீதாவுக்கும் முடிச்சுடுங்க... இந்த கல்யாண களேபரங்கள் எல்லாம் முடிஞ்ச பிறகு நாம ஜாதகம் பார்க்கப் போலாம்’’ என்றவளிடம், ‘‘இல்ல... சீதா இதுக்கு...’’ என்று இழுத்தார் அப்பா.

‘‘அவகிட்டே நான் பேசிக்கிறேன்பா... நான் ஸ்கூலுக்குக் கிளம்பறேன்’’ என்று சொல்லிவிட்டு, விருட்டென்று கடையை விட்டு இறங்கி நடந்தாள் விஜயா.

அப்பா கண்கலங்கியவாறு வெளியில் வந்து கல்லாவைப் பார்த்தார். அவர் வைத்திருந்த கடலைப் பொட்டலம் இருந்த இடத்தில் விஜயா வைத்த ஐந்து ரூபாய் நாணயம் இருந்தது.
(தொடரும்)
படங்கள்: புதூர் சரவணன்