ஒரு குடும்பம் போலவே ஆகிவிட்டது சீயான், அனுஷ்கா, இயக்குநர் விஜய், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட டீம். ‘தெய்வத்திருமகள்’ தந்த தெம்பில் இப்போது ‘தாண்டவத்’துக்குத் தயாராகி, மூச்சு விடுவதற்குள் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இந்தமுறையும் இந்த டீமுக்கு உந்துசக்தியாகி இருப்பவர்கள் யு டி.வி. மோஷன் பிக்சர்ஸ். எனவே கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து படத்தின் பெரும்பகுதியை அமெரிக்காவில் முடிக்கத் திட்டம் வைத்து, அதற்கான முன்னேற்பாடுகளை முடித்துத் திரும்பியிருக்கிறார் இயக்குநர் விஜய்.
படத்துக்குப் படம் ‘இதுவரை பார்க்காத வேடத்தில்...’ என்று ஹீரோவைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். ஆனால், ‘‘இந்தப் படத்துல விக்ரம் ஏற்கிற இப்படியொரு கேரக்டரை இதுவரை நான் பார்த்த எந்த மொழிப்படத்திலும் பார்த்ததில்லை...’’ என்று உறுதிபடக் கூறுகிறார் யு டி.வி.யின் தென்னகப் பிரிவின் தலைவர் ஜி.தனஞ்செயன். ‘‘இந்தப் படத்தோட லைனை முதல்ல என்கிட்ட விஜய் சொன்னப்பவே இது வேற தளத்துல பயணிக்கிற படம்னு புரிஞ்சு போச்சு. இருந்தும் யு டி.வி. நேரடியா தயாரிக்கிற படம்ங்கிறதால, இதன் தயாரிப்பாளரான ரோனி ஸ்குரூவாலாகிட்ட நேரடியா விஜய்யை கூட்டிக்கிட்டுப் போய் கதையைச் சொல்ல வச்சேன். அவருக்கும் திருப்தியானதுல படம் டேக் ஆஃப் ஆகிடுச்சு...’’ என்பவர், இப்படியொரு கேரக்டருக்காக விக்ரம் இந்த முறையும் தன் உடலை இன்னொரு ரசவாதத்துக்கு உட்படுத்திக் கொண்டது பற்றியும் சிலாகித்தார்.
‘‘முந்தைய ‘தெய்வத்திருமகள்’ படத்துல விக்ரம் எப்படி கிருஷ்ணாவா அந்தக் கேரக்டரைக் கண் முன்னால கொண்டு வந்தாரோ... அதுக்குப் பிறகு ‘ராஜபாட்டை’யில எப்படி கட்டுமஸ்தா வந்து நின்னாரோ... அப்படியே இந்தப் படக் கேரக்டருக்காக மெலிந்தும் இல்லாம, எடை கூட்டியும் இல்லாம கரெக்ட் ஃபிட்டா தன்னை மாத்திக்கிட்டிருக்கார். படத்துல ரெண்டு விதமான கெட்டப்புகள் அவருக்கு இருக்கு. ஒண்ணுல அரசாங்க அதிகாரியாவும், பிறகு இன்னொரு நிலையிலுமா மாறித் தெரிவார். இப்படியெல்லாம் தோற்றத்திலும், நடிப்பிலும் வித்தியாசம் காட்டறது விக்ரமுக்கு சாத்தியமான விஷயம்தான்.
அதே போலத்தான் டைரக்டர் விஜய்யோட ஈடுபாடும். புரட்யூசரோட டைரக்டர்னு அவரைப் புகழ்ந்தே சொல்லலாம். அந்த அளவுக்கு ப்ளானிங், பட்ஜெட் கமிட்மென்ட் எல்லாத்துலயும் அசர வைக்கிறார். தமிழ்ப் படங்கள்லயே இது வேற ஒரு முயற்சியா இருக்கும்...’’ என்கிறார் தனஞ்செயன்.
ஃபிளாஷ்பேக் மட்டும் இந்தியாவில் என்கிற அளவில், முழுக்க அமெரிக்காவில் தயாராகும் படமென்பதால் அங்கே கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க்கில் லொகேஷன்களை நிர்ணயித்திருக்கிறார்கள். இதுவரை பல தமிழ்ப்படங்கள் அமெரிக்காவில் எடுக்கப்பட்டிருந்தாலும், அங்கே சுற்றுலா தலங்களாகத் தெரியும் முக்கிய இடங்களைத் தாண்டி நிஜ வாழ்க்கைச் சூழலில் எடுக்கப்பட இருக்கும் படமென்பதால் புது நிறம் கூடித் தெரியவிருக்கிறது ‘தாண்டவம்’. இதற்காகவே நவீன ‘ரெட் எபிக்’ கேமராவின் மூலம் இந்தப் படத்தைச் சுட இருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.
அதிலும் இரண்டு கேமராக்களில் படமாக்கும் உத்தியையும் கையாளப் போவதால் முழு படப்பிடிப்புக்கும் இரண்டு ‘ரெட் எபிக்’குகள் யு.எஸ்ஸுக்கு ட்ரிப் அடிக்க இருக்கின்றன.
‘தெய்வத்திருமகள்’ போலில்லாமல் விக்ரமுக்கும் அனுஷ்காவுக்கும் இதில் அட்டகாசமான காதலும், கைபிடித்தலும் இருக்கிறதாம். ‘‘இருவருக்குமான உறவின் நெருக்கமும் தமிழ்ப்படங்களில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் இருக்கும்...’’ என்கிறார் தனஞ்செயன். இந்தியாவுக்கு அனுஷ்கா என்றால், யு.எஸ்ஸுக்கு எமி ஜாக்ஸன் இருக்கிறார். கண்டத்துக்கு ஒரு ஜோடி என இருவரின் கேரக்டர்களுமே கதையில் முக்கிய இடம் பிடித்திருக்குமாம்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகும் ஆறு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, ஒரு பாடல் மும்பையில் படம்பிடிக்கப்பட்டு விட்டது. அடுத்த மாதம் அமெரிக்கா கிளம்பி ஏப்ரலில் மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கும் திட்டத்தில் இருக்கிறது விஜய் டீம்.
டைட்டிலுக்கு ஏற்ற வகையில் ஆக்ஷன் காட்சிகளும் அமளிதுமளியாக இருக்கப்போகின்றன. அதற்காகவே ஸ்டன்ட் இயக்குநர் மனோஜ் வர்மாவுடன் அமெரிக்க ஸ்டன்ட் கோரியோகிராபர்களும் களத்தில் குதிக்கவிருக்கிறார்கள். அவர்களுடன் சீயானின் ஆக்ஷனும் உக்கிர தாண்டவமாக இருக்கப் போகிறது..!
- வேணுஜி