சென்னை, பாரிமுனை செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியை உமா மகேஸ்வரி, ஒன்பதாம் வகுப்பு மாணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே பல விவாதங்களை உண்டு பண்ணியிருக்கிறது.
ஆசிரியர்கள் மாணவர்களைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.
வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகளைக் கவனிப்பதே இல்லை.
திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் மாணவர்கள்
மனதில் வன்முறைக் காட்சிகளால் குரூரத்தை விதைக்கின்றன.
ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்கள். இவை எல்லாவற்றுக்குமான அடிப்படைக் காரணத்தை யாருமே விவாதிக்கவில்லை. நமது கல்வித்திட்டமும் பாடச்சுமையும்தான் மாணவர்களிடையே மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மன அழுத்தத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்; அல்லது பிறர் மீது வன்முறையை பிரயோகம் செய்கிறார்கள். இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு
பக்கங்கள்தான்.
‘‘எனக்கு இந்திப்பாடம் சரியாக வராது. ஆசிரியர் உமாமகேஸ்வரி மூன்று முறை என்னைக் கண்டித்து, ரிப்போர்ட் கார்டில் நான் சரியாகப் படிப்பதில்லை என்று எழுதிவிட்டார். இதனால் அப்பாவின் வெறுப்புக்கும் ஆளாகிவிட்டேன். என்னை ஃபெயிலாக்கிவிடுவார் என்கிற பயத்திலேயே அவரைக் கத்தியால் குத்தினேன்’’ என்று அந்த மாணவன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.
தனக்கு வராத இந்தியை அவன் எதற்காகக் கற்க வேண்டும்? அதற்கு அவனை ஏன் நிர்ப்பந்திக்க வேண்டும்? அவன் என்னவாக வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது? அவனுக்குள் என்ன இருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
‘‘யாரும் யாருக்கும் கற்பிக்க முடியாது. கற்பிப்பதாகக் கருதி ஆசிரியர் எல்லாவற்றையும் கெடுத்துவிடுகிறார். வேதாந்தத்தின்படி மனிதனின் உள்ளேயே எல்லாம் உள்ளது. ஒரு சிறுவனிடம் கூட எல்லாம் உள்ளது. அதனை விழிப்புணர்த்த வேண்டும் - இதுவே ஆசிரியரின் வேலை’’ என்றார் விவேகானந்தர்.
இங்கே வாழ்வின் பல்வேறு சூழல்களிலிருந்து குழந்தைகள் படிக்க வருகிறார்கள். அம்மா இல்லாத குழந்தைகள், அப்பா இல்லாத குழந்தைகள், வறுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் - அவர்கள் எல்லோரையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி, ஒரே மாதிரியான கல்வியை எல்லோருக்கும் திணித்தால் எப்படி ஜீரணிக்க முடியும்?
தங்கள் பிள்ளை டாக்டராக வேண்டும், எஞ்சினியராக வேண்டும் என்று நினைக்கிறார்கள் பலரும். அதற்கு அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ‘தேர்ச்சி சதவீதம்’ அதிகமுள்ள பள்ளியைத் தேடித்தேடிக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். வணிகமயமாகிவிட்ட கல்வி நிறுவனங்கள் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, ஆசிரியர்களை அதிக பணிச்சுமைக்கும் மனச்சுமைக்கும் உள்ளாக்குகின்றன. ஆசிரியர்கள் ‘மார்க் எடு... மா£க் எடு...’ என்று மாணவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அதை வெளிப்படுத்தவிடுவதில்லை. அவர்களின் ஆளுமைக்கு உதவாத புத்தகச் சுமைகளை தலையில் ஏற்றி, எறும்புகளைப் போல் ஒழுங்கு குலையாமல் அவர்கள் வரிசையாகச் செல்ல வேண்டும் என நினைக்கிறோம். எறும்புகளில் நடனக் கலைஞர்கள் இல்லை, இசைக் கலைஞர் கள் இல்லை, கவிஞர் கள் இல்லை, ஓவியர்கள் இல்லை, விஞ்ஞானிகள் இல்லை.
‘‘உங்கள் பெற்றோர், ஆசிரியர், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், மதம், பிரசாரகர்கள், அண்டை அயலார் எல்லோரும் உன்னை வேறு யாரோவாக மாற்ற முயல்கிறார்கள். அப்படி நீ ஆகவும் முடியாது. ஒன்று நீ நீயாக மட்டுமே இருக்க முடியும்; அல்லது உன்னை நீ தவற விட்டுவிட்டு ஒரு மடையனாக மாற முடியும். வேறு வழியில்லை’’ என்றார் ஓஷோ.
விருப்பம் இல்லாத பாடங்களில் தங்களைத் திணித்துக்கொண்டு, மன அழுத்தத்தினால் வாழ்வில் என்ன செய்வதென்றே தெரியாமல் திசைமாறியவர்கள் இங்கே நிறைய இருக்கிறார்கள்.
ஒரு பிரபலமான பெண்மணியின் மகன் ஐ.ஐ.டியில் இயற்பியல் படித்து, பதக்கம் பெற்று, நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றார். பிறகு இந்திய அறிவியல் நிறுவனத்தில் அரசாங்கத்தின் கல்வி உதவித்தொகையோடு பிஎச்.டி முடித்தார். அதன்பின் அமெரிக்கப் பயணம். அங்கே ஒரு பெண்ணை மணந்துகொண்டார். பின்னர் இருவரும் எம்.பி.ஏ. படித்து அமெரிக்காவிலேயே கணக்கு அதிகாரிகளாகப் பணியாற்றுகிறார்கள். தன் மகனை விஞ்ஞானியாக்க நினைத்து, இரவும் பகலும் உறக்கம் துறந்து உழைத்துப் படிக்க வைத்த அம்மாவுக்கு வருத்தம். கேட்டபோது மகன் சொன்ன பதில் நமது கல்வித் திட்டத்தையே புரட்டிப் போடுகிறது.
‘‘இந்தியாவில் படிப்பு விஷயத்தில் பாடத் திட்டத்தில் நிறைய பிரஷர் கொடுக்கிறார்கள் அம்மா. படித்துவிட்டேனே தவிர, விஞ்ஞானத்தின் மேல் எனக்கு பெரிய அலுப்பு வந்துவிட்டது. அந்த மனநெருக்கடியை நினைத்தாலே கசப்பாக இருக்கிறது. அதனால்தான் வாழ்வதற்காக கணக்கெழுதத் தொடங்கிவிட்டேன்’’ என்றார்.
இந்தியாவுக்கு ஒரு விஞ்ஞானி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, அதற்காக அரசாங்கம் அவருக்கு உதவித்தொகையாக அளித்த பெருந்தொகையும் வீணாகிவிட்டது. அவருக்கு ஏற்படுத்தப்பட்ட மன அழுத்தம், விஞ்ஞானத்தைவிட்டே அவரை விரட்டிவிட்டது.
இப்படி நிறைய கதைகள் சொல்கிறார்கள். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். பலர் போதைக்கு அடிமையாகி விடுகிறார்களாம். சிலர் மனம் பிறழ்ந்து நோயாளியாகிறார்களாம். சிலர் சம்பந்தமே இல்லாமல் சாமியார்களாகி விடுகிறார்களாம். நுற்றுக்கும் மேற்பட்ட ஐஐடி மாணவர்கள் ராக்கிங் உட்பட்ட பல காரணங்களால் தற்கொலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பரீட்சை பயத்தாலும் பாடச்சுமையாலும் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு வேதனைச் செய்தியாகியிருக்கிறார்கள்.
தனியார் பொறியியல் கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரிகளும் கல்வியின் பேரால் வேட்டை நடத்தும் இன்றைய சூழலில், தனியார் உதவியோடு புதிதாக ஐஐடி நிறுவனங்களும் வரப்போகின்றன என்று செய்திகள் வருகின்றன. பண்படுத்தும் கல்வி பயப்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது.
ஆங்கிலேயர் போய் விட்டார்கள். ஆனால் அவர்கள் திட்டமிட்டுக் கொடுத்த கல்வித் திட்டத்தை விட முடியாமல் மார்க், மனப் பாடம் என மாணவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறோம். அடிமை சேவகம் செய்பவராக இன்றைய கல்வித்திட்டம் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறது. அவர்களது நாடு குளிர்நாடு. ஷூ, சாக்ஸ், டை, கோட் எல்லாம் அவர்களுக்குத் தேவை. பல்வேறு தட்பவெப்பங்கள் கொண்ட நம் நாட்டில் இவையெல்லாம் தேவையில்லை. ஆனாலும், கோடைக் காலத்தில் கூட பள்ளிப் பிள்ளைகள் ஷூ மாட்டித்தான் போக வேண்டும். இல்லையென்றால் அது ஒழுக்கம் கெட்ட செயலாகக் கண்டிக்கப்படுகிறது. பிள்ளைகள் கால்களில் வெப்பக் கொப்பளங்கள் உண்டானால் அதைப்பற்றி ஆசிரியர்களுக்குக் கவலையில்லை.
குழந்தை உரிமைக்கான பண்பாட்டை வளர்த்தெடுக்கும் ‘தோழமை’ என்ற ஓர் அமைப்பை நடத்திவரும் நண்பர் தேவநேயனிடம் இன்றைய கல்வியின் சூழல் குறித்து உரையாடினேன்.
‘‘குழந்தைகள் ஏழு வயது வரை பெற்றோர் அரவணைப்பில் இருக்கவேண்டும் என்று மனநல நிபுணர்கள் சொல்கிறார்கள். இங்கே பால்பாட்டிலோடு சேர்த்து குழந்தைகளுக்குப் புத்தகத்தையும் திணித்துவிடுகிறோம். வகுப்பறைகளில் ஜனநாயகம் இல்லை. கலந்துபேசி உரையாட முடியாமல் மாணவர்கள் ஆசிரியருக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள் தலைமையாசிரியருக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். தலைமையாசிரியர்கள் கல்வியதிகாரிகளுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். கல்வியதிகாரிகளும் அமைச்சர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். அடிமைகளின் சமூகம் எப்படி சுதந்திரமான கல்வியைச் சொல்லித்தர முடியும்?
பாடத்திட்டங்கள் குழந்தைகளுக்கு முழுமையாக உகந்ததாகவோ உரியதாகவோ உதவக் கூடியதாகவோ இல்லை. உலகத்திலேயே நீளமானது எது? அகலமானது எது? எந்த மன்னன் மரம் நட்டான் - இது போன்ற கேள்விகளும் பதில்களும் எந்தக் குழந்தையின் ஆளுமையையும் வளர்க்காது. இன்று ஆசிரியர்களை விட மாணவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள் அன்று பாடத்தில் படித்ததோடு தேங்கி நிற்கிறார்கள். அதனால் மாணவர்களின் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. வகுப்பறைகள் அவர்களின் அறிவுபூர்வமான கட்டுப்பாட்டில் இல்லை; அதிகாரபூர்வமான கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. பாடத்திட்டத்தைத் தாண்டி அவர்களால் ஒன்றுமே கற்க முடியவில்லை. இன்றைய கல்வித்திட்டத்தின் மன அழுத்தத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியது மிக முக்கியம்’’ என்றார்.
இந்தியாவைப் பொறுத்தவரை படிக்கும் குழந்தைகளின் மனநலத்தை கவனிக்க அரசு எந்திரங்கள் எதுவும் தனித்து செயல்படவில்லை. அதற்கான திட்டங்களும் இல்லை. கல்வியின் பயன் என்ன? ஒரு மனிதனுக்கு என்ன தேவை என்பதை ஒரு வளர்ந்த சமூகம் தெரிந்து கொண்டால்தான் தனது அடுத்த தலைமுறைக்குத் தெளிவான கதவுகளைத் திறந்து வைக்க முடியும்.
‘பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்றான் பாரதி. பள்ளிகள் பலிவாங்கும் இடங்களாக மாறிக் கொண்டிருப்பதை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது.
(சலசலக்கும்)
பழநிபாரதி