‘‘காதலனுக்கும் காதலிக்கும் முதல் பார்வையிலேயே பிடிச்சுப் போயிடுச்சுன்னா அதுல எந்த சுவாரஸ்யமும் இல்லை. பிடிக்காத காதல்தான் ஆர்ப்பாட்டமா இருக்கும். அப்படி நான் சொல்லப்போறதும் காதல் கடந்த காதலா போகுது...’’ என்கிறார் ஆர் பிலிம்ஸின் ‘லீலை’ இயக்குநர் ஆன்ட்ரூ லூயிஸ்.
‘‘காதல் எல்லா காலத்திலும் ஒரே மாதிரியானதுதான். ஆனா அதைச் சொல்ற விதம் காலத்துக்குக் காலம் மாறுபட்டுத் தெரியும்....’’ என்கிற ஆன்ட்ரூ, தன் படத்தில் காலத்துக்கேற்ற காதலின் களமாக ஐடி துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ‘‘லீலைன்னா அது கவர்ச்சிக்கான விஷயம் போலத் தோற்றம் தரும். ஆனா ஆபாசம் இல்லாமல் காதலைச் சொல்ல வர்ற படம் இது...’’ என்றவர் லயோலாவில் விஸ்காம் முடித்து எஸ்.ஜே.சூர்யாவிடம் சினிமா பயிற்சி பெற்றவர். விஷ்ணுவர்தன், புஷ்கர்- காயத்ரி இவரது வகுப்புத் தோழர்கள். படம் பற்றித் தொடர்ந்தார் ஆன்ட்ரூ.
‘‘புதுசான களமா இருக்கிறதால புதிய முகங்களாவே போடலாம்ங்கிற என் எண்ணத்துக்கு தயாரிப்பாளர் ஒத்துக்கிட்டதால மும்பையிலிருந்து ஷிவ், பெங்களூருவிலிருந்து மான்ஸியைக் கண்டுபிடிச்சேன். மான்ஸியை நீங்க சில விளம்பரங்களில் பார்த்து, ‘அட இந்தப் பெண்ணா..?’ன்னு அதிசயிக்க முடியும். ரெண்டு பேருக்கும் உருவப்பொருத்தமும், கேரக்டர் பொருத்தமும் இயல்பா அமைஞ்சுட, அவங்களுக்குக் கைகொடுக்க படத்துக்குள்ள சுஹாசினியும், சந்தானமும் இருக்காங்க.
படம் பிடிச்சது முழுக்க சென்னை ன்னாலும், பாடல்களுக்காக கோவா, மகேஷ்வர் போனோம். அங்கே ‘தேவி அகல்யா ஃபோர்ட்’ங்கிற 400 வருஷ பழமை மிக்க சிவன் கோயில்ல படம் பிடிச்சது ரம்மியமா இருந்தது. சென்னைல ஐடி கம்பெனிகள் வேண்டி அத்தனை கம்பெனிகளும் சுத்தி கடைசியில பெருங்குடி ‘ஹெச்சிஎல்’ல படமெடுக்க சாத்தியங்களும், அனுமதியும் கிடைக்க... அங்கேயே செட்டில் ஆனோம். வேல்ராஜ் கேமராவில இன்னொரு புது உலகத்தைப் பார்க்க முடியும். இசையமைச்சிருக்க சதீஷ் சக்ரவர்த்தி ஏ.ஆர்.ரஹ்மான்கிட்ட ரெண்டு வருஷமா இசைப்பணியில இருந்தவர்.
இந்தப் படத்துல இரண்டுவிதமான திரைக்கதை அமைப்பை ஒரே படத்துல முயற்சி செய்திருக்கேன். அதுல ‘ரசிகர்களுக்கு எல்லாமே தெரியும், அது கேரக்டர்களுக்குத் தெரியாது’ன்னு வர்ற பிளே, ரசிகர்களையும் படத்தோட கேரக்டர்களா நினைக்க வைச்சுடும். இன்றைய காதலை என் பார்வையில புரிஞ்சுக்கிட்டது இதுதான் ‘காதல்னா பையனுக்குக் கண்ல வலி, பொண்ணுக்குக் காது வலி.’ பிடிச்ச பொண்ணைப் பார்த்துப் பார்த்து கண்வலி எடுத்துப்போகும் பையன், தன் காதல் கைகூடற வரைக்கும் அந்தப் பொண்ணுகிட்ட பேசிப் பேசிக் காதை வலிக்க வச்சிடுவான். இதைப் புரிஞ்சுக்கிட்டீங்கன்னா இந்தப் படத்துல சொல்லப்பட்டிருக்க ஒரு 24 வயசுப் பையனின் காதலை நீங்களும் அனுபவிக்க முடியும்...!’’
- ஜி