மெரினா சினிமா விமர்சனம்



Kungumam magazine, 
Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil
 weekly magazine, Weekly magazine

                            பள்ளிக்குப் போன பசங்களின் கதையைத் தன் முதல் படத்தில் சொன்ன இயக்குநர் பாண்டிராஜ், இந்த முறை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய பசங்களின் கதையைச் சொல்லியிருக்கிறார். அதன் களமாக அவர் எடுத்துக்கொண்டிருப்பது மெரினா கடற்கரை வாழ்க்கை.

மழை இரவில் பயணிக்கும் அமரர் ஊர்தியுடன் தொடங்கும் காட்சியில், கனமான கதை ஒன்றுக்குத் தயார் செய்துகொண்டு நிமிர்ந்து உட்கார்கிறோம். விடிய விடிய பயணிக்கும் வண்டி சென்னையில் வந்து நிற்க, உள்ளேயிருந்து நம்மைவிட ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் சிறுவன் ‘பக்கடா பாண்டி’ இறங்கி வேலை தேடி வருகிறான். அவனுக்கே தான் வந்த வண்டி எது என்று விடிந்த காலைப்பொழுதில்தான் தெரிகிறது. ‘காட்சிகளை மட்டும் பார்த்து எந்த கனமான விஷயத்தையும் நீங்களாக எதிர்பார்த்து விடாதீர்கள்’ என்று இப்படி முதல் காட்சியிலேயே சொல்லாமல் சொல்லிவிடுகிறார் பாண்டிராஜ்.

சென்னைக்கு வேலை தேடி வரும் சிறுவன் பிழைக்க என்னென்ன விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிலைகளைப் பாண்டி வாயிலாகச் சொல்ல ஆரம்பிக்கும் காட்சிகள் சுவாரசியமாகத்தான் இருக்கின்றன. அவனுடைய அவசரப் பசிக்கு உணவளித்தாலும், ‘‘பிச்சை மட்டும் எடுக்காதே...’’ என்று அறிவுறுத்தும் பிச்சைக்காரர், தூங்க விடாமல் துரத்தும் போலீஸுக்கு பயந்து மரத்தின் மேலேறித் தூங்கினால் அங்கேயும் வாடகை கேட்கும் இன்னொரு சிறுவன், உடனடியாகக் கிடைத்த வேலையில் தண்ணீர் பாக்கெட்டை தன் சாமர்த்தியத்தால் அமோகமாக விற்றாலும் அதற்கும் கட்டை போடும் சக விற்பனைச் சிறுவர்கள், வேலை இல்லாத நேரங்களில் அவர்களுக்குள்ளேயே நிகழ்த்திக் Kungumam magazine, 
Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil
 weekly magazine, Weekly magazineகொள்ளும் விளையாட்டுப் போட்டிகள், திடீர் திடீரென்று மெரினாவில் அமலாகும் தடைகளால் விற்பனையாளர்கள் எப்படி வேலைகளை மாற்றிக்கொள்ள நேர்கிறது என்றெல்லாம் சிரிக்க ரசிக்க பயணப்பட்டாலும், டேட்டாக்களாகவே விரியும் காட்சிகளில் ஒரு கட்டத்தில் கதை இல்லாத வெற்றிடம் தெளிவாகவே தெரிகிறது. பாண்டியுடன் தோழமை கொள்ளும் சிறுவன் கௌதம் புருஷோத்தை போலீஸ் தேடும் காட்சிகள் மட்டும் ‘இதற்குள் ஏதோ மேட்டர் இருக்கிறது’ என்று எண்ண வைக்கின்றன.

அதே மெரினாவின் இன்னொரு அடையாளமான காதல் ஜோடியாகிறார்கள் சிவகார்த்திகேயன், ஓவியா. ஓவியாவைக் கவர சிவகார்த்திகேயன் செய்யும் லீலைகள், ஓவியாவின் பசிக்காக சிவாவின் பாக்கெட் காலியாகும் தருணங்கள், காதலின் முதல் கட்டத்திலேயே அவர்களிடம் ‘சங்கு’ விற்க வரும் சிறுவன், ஓவியாவின் ஊடல்களுக்கு எதிர்த்தாக்குதல்களாக ஆப்பு, ரிவிட்களை சிவா கூரியரில் அனுப்புவது என்று அந்த லவ் எபிசோட் ஸோலோவாக ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் விஜய்யும், இசையமைப்பாளர் கிரீஷும் பெருமைப்படத்தக்க அறிமுகங்கள்.  

சிறுமியை ஆடவிட்டுப் பாடகர் பாடும் பாடல்களை டி.எம்.எஸ் குரலிலேயே ஒரிஜினல் பாடல்களாகப் பயன் படுத்தியிருப்பது தேன். சிறுவர்களின் ஏளனங்களைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு உதவும் போஸ்ட் மாஸ்டர், நல்ல குடும்பத்தில் இருந்தும் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட முதியவர் அனாதைப்பிணமாகி விடக்கூடாது என்றெண்ணி அவர் உடலைப் போலீஸாரிடம் போராடி வாங்கி ஈமக் கிரியைகள் செய்யும் சிறுவர்கள், அவர்களது கல்வியின் அவசியத்தை உணர்த்தும் ஜெயப்பிரகாஷ் போன்ற கேரக்டர்களில் பாண்டிராஜ் அடையாளம் தெரிகிறார்.

 இருந்தாலும் சிறுவர் வாழ்க்கையின் சோகத்தை விற்பனைப்பொருளாக்கி விடக்கூடாது என்று எண்ணினாரோ என்னவோ, ரசிக்கும் பக்கங்களை மட்டுமே தொட்டதில் மேலோட்டமான முயற்சியாகவே ஆகியிருக்கிறது படம்.
மெரினா - கரையோர கால் நனைப்பு..!
- குங்குமம் விமர்சனக்குழு