மீண்டு வருவேன்...



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

                       
                தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருக்கும் மேக்ஸ் கேன்சர் சென்டரில் சிகிச்சை எடுத்து வருகிறார் யுவி. நல்லவேளையாக நுரையீரலுக்குள் பரவும் மிக மோசமான கேன்சர் இல்லை இது. இரண்டு நுரையீரல் பைகளுக்கு இடையில் வந்திருக்கும் கட்டி என்பதால் குணமடைவதற்கு 95 சதவீத சான்ஸ் உண்டு. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகேஷ் ரோட்டகி என்ற டாக்டர் தலைமையிலான டீம் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ‘‘முன்பைவிட ஸ்டிராங்கான வீரனாக, புது சாம்பியனாக உங்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புகிறேன்’’ என்று வாக்குக் கொடுத்திருக்கிறார் நிகேஷ்.

‘‘ஏற்கனவே ஒரு மேட்ச்சில்கூட சிக்ஸர் அடித்துவிட்டு ஓடியபோது இருமினான். அப்போதே பரிசோதனை செய்யச் சொன்னேன். அவன் கேட்கவில்லை’’ என்று புலம்புகிறார் யுவராஜின் அப்பா யோகராஜ் சிங். சில ஆண்டுகளாக யுவராஜின் அப்பாவுக்கும் அம்மா ஷப்னமுக்கும் உறவு சரியில்லை. அப்பா சண்டிகரில் தனியாக இருக்க, அம்மாவுடன் குர்கானில் வாழ்ந்து வந்தார் யுவராஜ். மகனின் புற்றுநோய் இருவரையும் இணைத்து வைத்திருக்கிறது.

‘‘எனக்கு கேன்சர் என்று தெரிந்ததுமே ஆத்திரமும் இயலாமையும் சேர்ந்து பொங்கியது. நிபுணரின் கவுன்சலிங்தான் என்னை இயல்பாக்கியது’’ என்கிற யுவராஜுக்கு கிரிக்கெட்டில் சச்சின் குரு; புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அவரது குரு, லேன்ஸ் ஆம்ஸ்டிராங். அமெரிக்க சைக்கிள் சாம்பியனான இவருக்கு 96ம் ஆண்டு புற்றுநோய் வந்தது. போராடி மீண்ட அவர் ‘டூர் டி ஃபிரான்ஸ்’ எனப்படும் கடினமான சைக்கிள் ரேஸில் கலந்துகொண்டார். 99 முதல் ஏழு ஆண்டுகள் அதில் அவர்தான் உலக சாம்பியன். புற்றுநோயுடனான தனது போராட்டம் பற்றி ‘இட் ஈஸ் நாட் அபவுட் தி பைக்’ என்ற நூல் எழுதியிருக்கிறார். இப்போது இதைப் படித்துவரும் யுவராஜ், ‘‘இந்தியா திரும்புவதற்குமுன் ஆம்ஸ்டிராங்கை சந்திக்க ஆசை’’ என்கிறார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் புற்றுநோய் அறிகுறிகளோடு கண்டு பிடிக்கப்படு கிறார்கள். சரியான பரிசோதனை வசதிகள் இல்லை; சிகிச்சையும் காஸ்ட்லி. சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் சிகிச்சை பெற்று வீதிக்கு வந்தவர்கள் அதிகம். அதிலும் குழந்தைகளுக்கு வந்தால் இன்னும் கொடுமை. வலியும் வேதனையும் கடனும் மட்டுமே மிஞ்சியிருக்கும்!

இப்படிப்பட்ட சூழலில் யுவராஜால் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இங்கு வந்திருக்கிறது. அவரே முன்னுதாரணமாக இருந்து புற்றுநோயாளிகளுக்கு நிறைய செய்ய வேண்டும் என டாக்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- அகஸ்டஸ்