விஜயா டீச்சர்



Kungumam magazine, 
Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil
 weekly magazine, Weekly magazine

                கலைச்செல்வனுக்கு விஜயாவின் வார்த்தைகள் இன்னொருமுறை காதுக்குள் ஒலித்தன. ‘என்னைப் புரிஞ்சுக்கிட்ட ஒரே ஜீவன் நீங்கதான்..!’

விஜயாவை என்னவென்று புரிந்து வைத்திருக்கிறேன் என்பதை அவளுக்கு எப்படிச் சொல்வது..? என் மனதில் அவளைப் பற்றி என்ன பிம்பம் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியுமா..? அந்த பிம்பத்தை எடுத்துக் காட்டினால் என்னை எப்படிப் பார்ப்பாள்..?
‘உன் அழகு என்னை ஈர்க்கவில்லை. உன் வீட்டு காசு, பணம் என்னைக் கவரவில்லை. உன் படிப்போ, வேலையோ என்னைப் படிய வைக்கவில்லை. வள்ளலாரைப் போல வாடிய பிள்ளைகளைக் கண்டபோதெல்லாம் வாடும் உன் உள்ளம் எனக்குப் பிடித்திருக்கிறது. கஷ்டப்படும் தலைமுறைக்குக் காலமெல்லாம் கைகோர்த்துக் கைகொடுப்போம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால், விஜயா எப்படி எடுத்துக் கொள்வாள்? ‘‘ச்சீ... என் கஷ்டங்களை உன்கிட்ட வந்து சொன்னா, உடனே ‘வா... வந்து என் மாருல சாஞ்சுக்கோ’ன்னு குளிர்காயப் பார்க்கிற ஈனப் பிறவியாக இருக்கறியே’’ன்னு நினைத்து விடுவாளோ..?

பாட்டிலைத் திறந்து நெஞ்சு சட்டை நனைய மொத்த தண்ணீரையும் குடித்தார். விஜயாவைப் பற்றிய எண்ணத்தை இழுத்துப் பூட்டிவிட்டு, கையில் பேஸ்கட் பாலை எடுத்துக் கொண்டு மைதானத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

‘‘யாருப்பா... காலேஜ் நேரத்துல வேட்டி சட்டையிலே உள்ளே வர்றது..?’’ என்று வாட்ச்மேன் தடுக்க, ‘‘இது எங்கப்பா... பிரின்ஸிபல் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காரு... நீ வா..!’’ என்று பரோட்டா மாஸ்டரை உள்ளே இழுத்துக் கொண்டு நடந்தான் ஆனந்த்.

‘‘யோவ்... ஞாபகம் இருக்குல்ல! ஒரு பொம்பளைப் புள்ளைக்கு லெட்டர் குடுத்தேன்னு என்னை அப்பாவைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காங்க. அதுக்கு ஏத்த மாதிரி பேசணும்... புரியுதா?’’ என்றான் ஆனந்த்.

‘‘அண்ணே... அதெல்லாம் பின்னிருவோம்ணே...’’ என்றான் பரோட்டா.

‘‘நாசமாப் போச்சு! அப்பான்னு சொல்லி கூட்டிட்டுப் போறேன்... நீ என்னையே அண்ணேன்னு கூப்பிடுறே. விளங்கிரும்! யோவ்... எங்க அப்பா ரொம்ப கெத்தான ஆளு. அதுமாதிரி விறைப்பா நடந்து வா...’’ என்று அவனை தரதரவென்று இழுத்துக் கொண்டு பிரின்ஸிபல் அறை நோக்கிப் போனான் ஆனந்த்.

Kungumam magazine, 
Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil
 weekly magazine, Weekly magazine‘‘உங்க பையன் செய்த தப்பு என்னன்னு உங்ககிட்டே சொன்னானா..?’’ - பிரின்ஸிபல் இறுகிய முகத்தோடு கேட்க, ஆனந்த் முகத்தைப் பார்த்தான் பரோட்டா. ஆனந்த், ‘அமைதியாக இரு’ என்று சைகை காட்ட... தலையைக் கவிழ்ந்து நின்றான் பரோட்டா.
‘‘பாரு ஆனந்த்... நீ செய்த செயலுக்கு உங்கப்பா தலை கவுந்து நிக்கற மாதிரி ஆகிடுச்சு. உனக்கு வெட்கமா இல்லையா... சொல்லுங்க சார்! உங்க பையன் பிஹேவியர் ரொம்ப கீழ்த்தரமா போயிடுச்சு... அதான் கண்டிக்கறதுக்காக உங்களைக் கூப்பிட்டோம்...’’ என்று பிரின்ஸிபல் சொல்லி முடித்த நொடியில், ஆனந்த் பிடரியில் பொடேரென்று ஒரு போடு போட்டான் பரோட்டா.

‘‘பேரைக் கெடுக்கறதுக்குன்னே வந்து பொறந்திருக்கே... உன்னை எல்லாம் கொத்து பரோட்டா போடுற மாதிரி கொத்தி எறிஞ்சாத்தான் என் ஆத்திரம் அடங்கும்...’’ என்று மறுபடியும் பரோட்டா கையை ஓங்க, பிரின்ஸிபலே ஒருகணம் பதறிப் போனார்.
‘‘சார்... இவ்ளோ உணர்ச்சி வசப்படக் கூடாது நீங்க...’’ என்று அவர் தடுக்க, ‘‘நீங்க சும்மா இருங்க சார்... கல்லுலயும் கங்குலயும் நின்னு சம்பாதிச்சுச் கொடுத்து இவங்களைப் படிக்க அனுப்பினா இப்படியா செய்வாங்க..?’’ என்றான் பரோட்டா.

பிரின்ஸிபல் எழுந்தே விட்டார். ‘‘நீங்க கொஞ்சம் பொறுமையா இருக்கணும். என்ன தொழில் பண்றீங்க..?’’ என்று பேச்சை மாற்றுவதற்காக அவர் கேட்ட நொடியில், ‘‘பரோட்டா...’’ என்று ஆரம்பித்து விட்டான் பரோட்டா.

சட்டென்று நடுவில் புகுந்த ஆனந்த், ‘‘இந்த பரோட்டா எல்லாம் போடுவாங்க இல்லையா சார்... அந்த கடைக்குப் பக்கத்தில் ஸ்வீட் ஸ்டால் வச்சிருக்கார்... அதுதான் எங்க தொழில் சார்’’ என்றான்.

‘‘இல்லை! கல்லு... கங்குனு வருத்தப்பட்டுப் பேசினாரே..?’’ என்று பிரின்ஸிபல் விடாப்பிடியாகக் கேட்க, ‘‘அதுவா சார்? போளி சுடுறதுக்கு வேற யாரையும் விடமாட்டார்... கல்லுல நின்னு தானே சுடுவார். கடை கிச்சனில் விறகு அடுப்புதானே... அதைத்தான் கங்குனு சொன்னார்... இல்லப்பா..!’’ என்றான்.

‘‘ஆமாமா...’’ என்று அசடு வழிந்து சமாளித்த பரோட்டாவிடம், ‘‘சார்... உங்களுக்காக இந்த முறை இவனை மன்னிக்கிறேன். நீங்க இவ்ளோ டென்ஷன் ஆகும் போதே உங்க குடும்பப் பெருமை எனக்குப் புரியுது. கொஞ்சம் நிதானமா கண்டிச்சு வையுங்க...’’ என்று வழியனுப்புவது போலக் கைகூப்பினார்.

‘‘ரொம்ப நன்றி சார்... இனி அவனை நான் பார்த்துக்கறேன். நீங்க பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கம் வந்தா நம்ம கடைக்கு வாங்க... நம்ம கடை ஸ்வீட்ஸ் எல்லாம் டேஸ்ட்டா இருக்கும்...’’ என்று சொல்லிவிட்டு ஆனந்த் பக்கம் திரும்பி, ‘இப்போ கரெக்டா ஸ்வீட் ஸ்டால் ஆள் மாதிரி நடிச்சேனா..?’ என்று கண்களால் கேட்டான் பரோட்டா!

‘‘நிச்சயமா... இன்னிக்கு ஈவ்னிங்கூட நான் யுனிவர்சிட்டி வேலையா மதுரை போறேன்... அப்போ வர்றேன்...’’ என்றார் பிரின்ஸிபல்.

டீச்சர்களுக்கான அறையில் தனியாக உட்கார்ந்திருந்த விஜயா, அறை வாசலில் நிழலாடுவதைப் பார்த்து நிமிர்ந்தாள். அழுது வீங்கிய கண்களோடு உள்ளே நுழைந்தாள் ஈஸ்வரி. சட்டென்று எழுந்த விஜயா, ஈஸ்வரியின் கைகளை ஆறுதலாகப் பற்றினாள். ‘‘என்ன ஈஸ்வரி... இப்படி முகமெல்லாம் வீங்கிப் போய் வந்து நிக்கிறே? ஒரு மணி நேரம் பர்மிஷன்னு சொன்னதும் ஏதாவது கோயிலுக்கு கீயிலுக்கு போயிட்டு வருவேன்னு நினைச்சேன்... கல்யாண நாளும் அதுவுமா இப்படி வந்து நிக்கறே..?’’ என்றாள்.

Kungumam magazine, 
Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil
 weekly magazine, Weekly magazineஈஸ்வரி கைப் பையை மேஜை மீது வீசிவிட்டு நாற்காலியில் சரிந்தாள். ‘‘எனக்கு கல்யாண நாள் ஒண்ணு தான் கேடு... என் நிம்மதியைத் தொலைச்ச நாளைக் கொண்டாடலைன்னு நீ வருத்தம் வேற படுறே. ஏழு வருஷமா நான் படுற பாட்டைப் பார்த்தும் உனக்கு அது கொண்டாடப்பட வேண்டிய நாளுன்னு தோணுது பாரு... ஆச்சரியமாத்தான் இருக்கு! எங்க கல்யாண நாளுக்கு அக்கா குடும்பத்துக்கே புதுத் துணி எடுத்துட்டு வந்திருக்காரு மகராசன். ஆனா, எனக்கும் புள்ளைக்கும் ஒரு கைக்குட்டைகூட கிடையாது. கேட்டா, ‘நாம மத்தவங்களுக்கு பரிசு குடுத்து அவங்க சந்தோஷப்படுறதைப் பார்த்து சந்தோஷப்படணும்’னு வியாக்கியானம் பேசுறாரு.

இவரு சங்கதி தெரிஞ்சு நான் பயலுக்கு ஒரு செட் டிரஸ் எடுத்து வச்சிருந்தேன். எனக்கு தீபாவளிக்கு எடுத்த புடவை இருந்தது. அதைக் கட்டிக்கலாம்னு பார்த்தா, ‘எனக்கு புதுத் துணி எடுத்துக் குடுக்கணும்னு தோணலையா’ன்னு காலையிலேயே மல்லுக் கட்டுறாரு. ‘இந்தா... இந்தச் சேலையைக் கட்டிக்கோ’ன்னு தூக்கி மூஞ்சிலே வீசிட்டு வந்துட்டேன். புள்ளை கேட்டானேன்னு ஆசையா செய்த கேசரி அடுப்படியிலே கிடக்கு... என்ன பொழப்பு இது!’’ என்று குமுறி அழுத ஈஸ்வரிக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று விஜயாவுக்குத் தெரியவில்லை.

கல்யாணமான புதிதில் ஈஸ்வரி கதை கதையாக வந்து சொல்வதைக் கேட்கும்போது கல்யாண ஆசை நெஞ்சு நிறைய கிளம்பி எழும். ஆனால் இப்போது, ‘கல்யாணம் என்பதே காலில் கட்டப்பட்ட விலங்கு’ போலத் தெரிகிறது. ‘அன்பாகத்தானே இருந்தான்... நடுவில் ஏன் புத்தி இப்படி பிசகிப் போனது’ என்ற கேள்வியைப் பலமுறை ஈஸ்வரியிடம் கேட்டிருக்கிறாள்.

‘‘என்னத்த நல்லாயிருந்தேன்... பல விஷயங்களை வெளியிலே சொல்ல முடியாம தவிச்சிருக்கேன். பகலெல்லாம் கடுவன் பூனை மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு அலையற மனுஷன், ராத்திரியானா கையைத் தூக்கிப் போடுவாரு. தட்ட முடியுமா... தாலி கட்டினவராச்சேனு திரும்பிப் படுப்பேன். சரி, இந்த ஆசையிலயாவது மனுஷன் கொஞ்சம் ஒட்டுதலா இருக்காரா பார்ப்போம்னு ஒரு நப்பாசைதான். ஆனா, எல்லாம் விடியுற மட்டும்தான்! மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடும்.

Kungumam magazine, 
Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil
 weekly magazine, Weekly magazineஇவ்வளவு ஏன்... ‘ஒரு பையன்தானே இருக்கறான்... அவசரப்பட்டு ஏண்டி ஆபரேஷன் பண்ணிட்டே’ன்னு கேட்டியே? இப்போ சொல்றேன்... ‘இன்னொரு புள்ளை... தேவதையா பெத்துக் குடு’ன்னு கொஞ்சும்போது பேசுற மனுஷந்தான் ஒரு தடவை நாள் தள்ளிப் போனப்போ, ‘எங்கம்மாவுக்கு மஞ்சக்காமாலை வந்திருக்கு... இந்த நேரத்திலே அவங்களைப் பார்த்துக்க யாருமில்லை’ன்னு கூட்டிட்டுப் போய் கலைச்சுட்டாரு... நான் நாற்பதாவது நாள் போய் ஆபரேஷன் பண்ணிட்டு வந்துட்டேன்... இவனுக்கெல்லாம் பொம்பளைப் புள்ளை ஒரு கேடான்னு!’’ மேலே பேச முடியாமல் வெடித்து அழுதாள் ஈஸ்வரி.

விஜயாவுக்கு வேதனை பொங்கியது. ஏன் இந்த ஆண் சமூகம் பெண்களை இப்படி குத்திக் குத்தி காயப்படுத்துகிறது என்ற கேள்வி அவளைத் துளைத்தது. ‘உங்களுக்கெல்லாம் அடிமைகள்தான் வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பிறகு ஏன் அழகாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்’ என்ற ஆத்திரம் பொங்கியது.

பானையிலிருந்து ஜில்லென இரண்டு டம்ளர் தண்ணீர் மொண்டு குடித்துவிட்டு, ஈஸ்வரிக்கும் கொண்டு வந்து கொடுத்தாள். ‘‘கொஞ்ச நேரம் கண்ணை மூடி ரிலாக்ஸ்டா இரு... உன் கிளாஸை வேணா நான் பார்த்துக்கறேன். ரெஸ்ட் எடு. மனசைக் குழப்பிக்காதே... எல்லாத்துக்கும் விடிவுகாலம் பிறக்கும்’’ என்று விஜயா ஆறுதலாகப் பேச, மீண்டும் வெடித்து அழுதாள் ஈஸ்வரி.

‘‘யோவ்... சும்மா ஒரு பேச்சுக்கு உன்னை எங்கப்பான்னு கூட்டிட்டுப் போனா அடியைப் போடுற அங்கே வந்து! என்ன, நக்கலா? கணேசன்ட்ட சொன்னா வேலை காலியாகிரும் தெரியும்ல...’’ என்று ஆனந்த் பின்மண்டையைத் தடவிக் கொண்டே சொல்ல... பதிலுக்கு முறைத்தான் பரோட்டா.

‘‘அப்பு... இப்ப நான் உள்ளே போய் ‘நான் பரோட்டா மாஸ்டர்... இவங்கப்பா இல்லை’ன்னு ஒரு வார்த்தை சொன்னா உன் லைஃப் காலி... தெரியும்ல! கடைக்கு வரும்போது எவ்ளோ டார்ச்சர் கொடுப்பே... கந்தலாயிருவேடி...’’ என்று நாக்கைத் துருத்தி சொல்லிவிட்டு நடந்த பரோட்டாவைப் பார்த்து மிரண்டு போய் நின்றான் ஆனந்த்.

‘‘அப்பா இம்புட்டு கோபப்படும்படி என்ன தம்பி செய்தே..?’’ என்றார் வாசலில் நின்ற வாட்ச்மேன்.
(தொடரும்)

படங்கள்: புதூர் சரவணன்