அடுத்த தலைமுறை யாரைக் காதலிக்கும்?



Kungumam magazine, 
Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil
 weekly magazine, Weekly magazine

              காலங்கள் வகுக்கப்படாத வரலாறு காதலுக்குத்தான் உண்டு. ஒரு கண்ணில் சூரியனும் ஒரு கண்ணில் சந்திரனும் கொண்டு அது இரவையும் பகலையும் ஒரே நேரத்தில் தரிசித்துக் கொண்டிருக்கிறது. காதலர்கள் வருகிறார்கள்; போகிறார்கள். அவர்கள் இட்டுக் கொண்ட முதல் முத்தம் முடியவே இல்லை. இடங்கள் மாறுகின்றன; இதழ்கள் மாறுகின்றன. காதலின் முத்தம் நூற்றாண்டுகளின் முத்தமாக நீள்கிறது.

‘காற்று வெளியிடைக் கண்ணம்மா’ என்று காதலை எண்ணிக் களிக்கின்றான் பாரதி.

‘நீல நிறம் - வானுக்கும் கடலுக்கும் நீலநிறம். காரணம் ஏன் கண்ணே - உன் கண்ணோ’ என்று காதலில¢ மிதக்கின்றான் கண்ணதாசன்.

காற்றைப் போல - கடலைப் போல - வானத்தைப் போல கட்டற்ற சுதந்திர உணர்வுதான் காதல். உயிரின் கவிதையாக - ரத்தத்தின் இசையாக - அணுக்களின் நடனமாக அது நமக்குள் ஒரு படைப்புணர்வைப் பூத்து விரிய வைக்கிறது.

‘ஒருநாள் ஒரு பொழுது
உந்தன் முகம் காணாட்டி
ஓடக்கரை மண்ணெடுத்து
உருவாரஞ் செஞ்சு பார்ப்பேன்’
என்று ஒரு கிராமத்துக்காரன் காதலியை நினைத்து உருகுகிறான்.

‘அரிசி அரிக்கையிலே
அரளிப்பூ தந்த மச்சான்
சோறு வடிக்கையிலே
சொக்குதய்யா உன் மயக்கம்’
என்று ஒரு கிராமத்துக்காரி காதலனை நினைத்து மயங்குகிறாள்.

இப்படித்தான் நம் முன்னவர்கள் காதலில் வாழ்ந்தார்கள். ‘காதலர் தினம்’ என்று தனியாக ஒரு நாளை அவர்கள் கொண்டாடியதில்லை. ஒவ்வொரு நாளையும் காதலோடு கொண்டாடினார்கள். அவள் களையெடுக்கும்போது கேட்கும் வளையல் சத்தம்; அவன் ஏற்றம் இறைக்கும்போது ஒலிக்கும் தண்ணீர்ச் சத்தம் எல்லாமும் அவர்களுக்குக் காதலாக இருந்தது.

விவசாயக் கலாசாரத்தோடு வாழ்ந்த நமது காதல் மனதை இன்று பன்னாட்டுக் கலாசாரம் குலைத்துவிட்டது. பெண்ணைக் கட்டில் பொம்மையாக்கி, விளம்பரப் பொருளாக்கி, நமது பெண்ணையும் மண்ணையும் அது சூறையாடிவிட்டது. அதன் ஏவல் பொருள்களான அலைபேசிகளும் கணினிகளும் செயற்கையான உயிரற்ற தொடுதலில் ஆண்களையும் பெண்களையும் சூடேற்றி விட்டிருக்கின்றன. செல்போனையும் கம்ப்யூட்டரையும் செல்லங்கொஞ்சி வருடி வருடி முத்தமிட்டு உருகும் விதையற்ற ஒரு சமூகத்தை அது உருவாக்கியிருக்கிறது. ஒரு பெண் அவளுக்கான ஆணையும், ஒரு ஆண் அவனுக்கான பெண்ணையும் முழுமையாகப் பார்க்கிற ‘காதல் கண்களை’ அது மறைத்துவிட்டது.

Kungumam magazine, 
Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil
 weekly magazine, Weekly magazine1856ம் ஆண்டு காரல் மார்க்ஸ் ஜென்னிக்கு ஒரு கடிதம் எழுதினார்: ‘அன்பே! உலகத்தில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அழகாகவும் இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு தோற்றமும் கவர்ச்சிக் கூறும் - ஏன் அதன் ஒவ்வொரு திரையும் ரேகையும் கூட என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பலமான, மிகவும் இனிமையான நினைவுகளை என்னுள்ளே கிளப்பிவிடக் கூடிய மற்றொரு அழகிய முகத்தை எங்கு காண்பேன்? உனது இனிய முகத்தோற்றத்தில் என்னுடைய முடிவில்லாத துன்ப துயரங்களையும், எனது ஈடு செய்ய முடியாத நஷ்டங்களையும் கூட நான் காண்கிறேன். உனது இனிய முகத்தில் முத்தமிடும்போது எனது வேதனைகளையும்கூட முத்தமிட்டுத் துடைத்துக் கொள்கிறேன்’ - காதலுக்கு இப்படிப்பட்ட கண்கள்தான் வேண்டும். எல்லாக் காதலர்களுக்கும் இப்படிப்பட்ட அழகான கண்கள் வாய்ப்பதில்லை.

சில மாதங்களுக்கு முன்பு ‘ஃபேஸ்புக்’கில் ஒரு சம்பவம். பையன் ஒரு பத்திரிகைக்காரன்; பெண் ஒரு மென்பொருள் பொறியாளி. அவன் டெல்லி; அவள் மெக்சிகோ. இருவரும் பேசத் தொடங்கிய சில மாதங்களில் ‘ஃபேஸ்புக்’கிலேயே நண்பர்களை முன்வைத்து, நாதஸ்வரத்தின் மங்கல இசையைப் பாடவிட்டுத் திருமணம் செய்துகொண்டார்கள். நேரில் சந்திக்கவே இல்லை. ஆறே மாதங்களில் மறுபடியும் நண்பர்களை முன் வைத்து, ‘ஃபேஸ்புக்’கிலேயே விவாகரத்தும் செய்துவிட்டார்கள்.

கொஞ்சம் காலத்திற்கு முன்பு கன்னியாகுமரியில் ஒரு இளைஞன், தன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக ஒரு கல்லூரி மாணவியின் முகத்தில் திராவகம் வீசியதை நாம் மறந்திருக்க மாட்டோம். இதையெல்லாம் பார்க்கிற போது இங்கே பலருக்கும் காதல் பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது.

இனம் இனத்தோடு; பணம் பணத்தோடு என்று நடக்கிற திருமணங்களுக்கு இடையில், காதல் திருமணங்கள்தான் சாதி மதமற்ற ஒரு சமத்துவ சமூகத்தை உண்டாக்கி வளர்க்கும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் இன்று ‘காதலர் தினம்’ என்று ஒருநாளை விளம்பரப்படுத்திக் கொண்டாட வேண்டிய நிலைக்கு நகரத்து இளைஞர்களும் பெண்களும் ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

காதலர் தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்திகள், கேக்குகள், சாக்லெட்டுகள், வாழ்த்து அட்டைகள், பனியன்கள், கைப்பட்டைகள், அணிகலன்கள் தயாரித்து வணிகர்கள் கடைவிரிக்கிறார்கள். அந்த அலங்காரப் பொருள்களுக்கும் பரிசுப் பொருள்களுக்கும் இடையில் காதலும் ஒரு நுகர்வுப் பொருளாகிவிட்டது. பெண்ணும் ஆணுக்கு ஒரு கவர்ச்சிப் பரிசாக ஆக்கப்பட்டுவிட்டாள். இதில் காதலும் மெல்ல மெல்ல பலியாகிக் கொண்டிருக்கிறது.

காதலுக்கு ஆணும் வேண்டும்; பெண்ணும் வேண்டும். ஆனால் இங்கே ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண்கள் இருக்கிறார்களா? உலகில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து மோசமான நிலையில் இருக்கும் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியாவை அறிவித்திருக்கிறது ஐ.நா. சபை. ‘கடந்த 2011ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களில் பெண் குழந்தை விகிதம் மிகக் கவலைக்குரியதாக இருக்கிறது’ என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையிலேயே அறிவித்திருக்கிறார்.

ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் 2500 பேரில் 18 பேர் மட்டுமே பெண்கள் இருக்கிறார்கள். ஒட்டகம் ஒரு பெண் குட்டியை ஈன்றெடுத்தால் ஊருக்கே லட்டு கொடுக்கும் அவர்கள், அவர்களில் ஒரு பெண்- பெண் குழந்தையை ஈன்றெடுத்தால் எல்லோருக்கும் தெரியும்படி ஒரு மண்சட்டியைப் போட்டு உடைக்கிறார்கள். கள்ளிப்பாலை ஊற்றிப் பெண் சிசுக்களைக் கொல்வது நம்மூரில் சிலருக்குத்தான் தெரிந்து அரங்கேறுகிறது. ஆனால் வடமாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகாரில் நடக்கும் பெண் சிசுக் கொலைகள் அங்குள்ள பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனாலும் யாராலும் தடுக்க முடியாத அளவுக்கு அவை துணிகரமாக நடந்தேறுகின்றன.

இந்தியாவில் மட்டுமல்ல... அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வெளிநாடுகளில் வாழும் இந்தியப் பெண்களும் தங்களுக்குப் பிறக்கப்போவது பெண் குழந்தை என்று ‘ஸ்கேன்’ மூலம் அறிந்தால் கருச்சிதைவு செய்து கொள்கிறார்களாம். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் கணக்கெடுப்பின்படி 190 ஆண்களுக்கு 100 பெண்கள்தான் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி
விவரம் சொல்கிறது.

பெண் கருவில் கொல்லப்படுகிறாள்

பாலியல் வன்முறையால் கொல்லப்படுகிறாள்

வரதட்சணைக் கொடுமையால் கொல்லப்படுகிறாள்

சந்தேகத்தின¢ பெயரால் கொல்லப்படுகிறாள்

கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறாள்.

பூமியில் இன அழிவைச் சந்திக்கும் உயிரினங்களில் புலி முதலிடத்தில் இருக்கிறது. சில அபூர்வமான பறவையினங்களும் பட்டாம்பூச்சியினங்களும் அழிந்தே விட்டன என்று சூழலியலாளர்கள் சொல்கிறார்கள். அந்தப் பட்டியலில் இனி பெண்ணையும் சேர்க்க வேண்டிய நிலை வரலாம்.

எனக்குள்ள கவலையெல்லாம், இனிவரும் தலைமுறை யாரைக் காதலிக்கும் என்பதுதான்; ஆணும் ஆணும் காதலிக்கும் சமூகத்தை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
(சலசலக்கும்...)
பழநிபாரதி