வரும் 14ம் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தேவயானி பிரவேசிக்கப் போகிறார், சன் டிவி வழியாக. உங்கள் யூகம் சரிதான். சினி டைம்ஸின் ‘முத்தாரம்’ மெகா தொடர் மூலமாகத்தான் தேவயானி வரவிருக்கிறார். ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி மெகா வெற்றிபெற்ற ‘மெட்டி ஒலி’யைத் தந்த ‘சினி டைம்ஸ்’ எஸ்.சித்திக் தயாரிக்க, இந்தத் தொடரை இயக்குகிறார் ஆர்.கணேஷ்.
பெண்களின் பிரச்னையை முன்னிறுத்தும் தொடர்தான் என்றாலும், பொறுமையில் பூமாதேவிக்கு ஒப்பான ஒரு பாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் தேவயானி. ஒரு பக்கம் குடும்பத்தில் மகளாக, சகோதரியாக, மருமகளாக குடும்ப உறவுகளைத் தாங்குவதும், இன்னொரு பக்கம் வேலைக்குப் போகும் பெண்ணாக பிரச்னைகளை எதிர்கொள்வதுமாக இன்றைய சமூகத்தில் ஒரு பெண் எதிர்கொள்ளும் அத்தனைப் போராட்டங்களின் பிரதி நிதியாகவும் வரவிருக்கிறார் தேவயானி.
‘‘எனவே தேவயானியை எல்லாக் குடும்பத்தினரும் தங்கள் குடும்பத்துப் பெண் போலவே நினைக்க முடியும்...’’ என்கிற கணேஷ், ‘‘இதில் தேவயானி பாத்திரத்தின் பெயர் ‘ரஞ்சனி’. அழகு, அமைதி, அன்புடன் எந்தப் பிரச்னையையும் கையாளும் அழகில், ‘இப்படி ஒரு மனைவி அமையமாட்டாளா..?’ என்று எந்த ஒரு ஆணும் ஏங்கும் விதத்திலும், ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று பெண்கள் முடிவெடுக்கும் விதத்திலும் ரஞ்சனி இருப்பாள்...’’ என்று மேலும் ஆர்வத்தைக் கூட்டுகிறார்.
ரஞ்சனிக்கு ஆரத்தி தயாரா..?
ஜி