வருடம் ஒருமுறை மட்டுமே சந்திக்க நேர்ந்தாலும், விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்து நட்பு பாராட்டக் கூடியவர் இயக்குநர் ஷங்கர். கடந்த தன் ஒன்பது படைப்புகளிலும் சொந்தக்கற்பனையில் உருவான கதைகளை மட்டுமே இயக்கியதைத் தாண்டி இப்போது முதல்முறையாக ‘நண்பனி’ல் ரீமேக்குக்கு மாறியிருக்கிறார்.
‘‘ரீமேக் பண்ணக்கூடாதுன்னு நினைச்சவன் நான். ஏற்கனவே ட்ராவல் பண்ணிய அதே கதைல இன்னொரு பயணம் அலுப்பான விஷயம். ஆனா நானே டைரக்ட் செய்த ‘முதல்வனை’ இந்தியில ரீமேக் பண்ணணும்னு தேவை வந்தப்ப, அந்தக் கருத்தில இருந்து வெளியே வந்து யோசிச்சேன். இங்கே ரசிக்கப்பட்ட ஒரு விஷயம் இந்திய அளவில ரசிக்கப்படும் சாத்தியம் அதுல இருந்தது புரிஞ்சது. அதேபோல எந்தப்படைப்பிலும் செய்ய முடியாம விட்ட பகுதிகள் இருக்கும். அதையெல்லாம் ரீமேக்ல முழுமையாக்கற சாத்தியம் இருந்தது. அதுக்காக ‘நாயக்’ பண்ணினேன். இருந்தாலும் அதுவும் என் சொந்தக் கதைதான்...’’ என்று ஆரம்பித்தவர் தொடர்ந்தார்.
‘‘ஆனா ‘நண்பன்’லதான் எனக்கு சம்பந்தமில்லாத வேறு ஒரு கதைல பொருந்த நேர்ந்தது. இதுக்கும் கூட யோசிச்சேன். இந்தியில வெளியான ‘த்ரீ இடியட்ஸை’ பொறுத்தவரை நான் சிரிச்சு ரசிச்ச படம்ங்கிறதோட, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். அதுல மனதைத் தொடற சம்பவங்கள் இருக்கு. கல்வி பற்றிய பார்வை இருக்கு. படம் பார்த்து முடிஞ்சதும் ஒரு அமைதி குடிகொள்ற அழுத்தம் இருக்கு. இது நம்ம ஊருக்கும் வரணும், நம்ம ஆடியன்ஸுக்கும் இது கிடைக்கணும்னு ஒத்துக்கிட்டேன்.
ரீமேக்ன்றதால ஆரம்பத்தில கொஞ்சம் ரிலாக்ஸ்டா வேலை செய்ய முடியும்னுதான் நினைச்சேன். ஆனா இதுக்கான உழைப்பு அதிகமா இருந்தது பிறகுதான் புரிஞ்சது. ‘அடடா...’ன்னு ‘த்ரீ இடியட்ஸ்’ல பார்த்த விஷயங்கள் இதுலயும் இருக்கணும். அதே நேரம், ‘இதைவிடச் சிறப்பா பண்ணியிருக்கலாமே’ன்னு தோணற இடங்களை மிஸ் பண்ணிடாம பயன்படுத்தியாகணும். ஆனா ‘த்ரீ இடியட்ஸ்’ நல்ல ஸ்கிரிப்ட்டானதால அப்படிப்பட்ட இடங்கள் குறைவாதான் இருந்தது.
இதை தமிழ்நாட்டுக்குப் பொருந்தி வர்றமாதிரி சொல்லணும்னு அவசியம் வந்தபோது, அதுக்கு ஃப்ரெஷ்ஷா யோசிக்க வேண்டி வந்தது. அப்படி உக்காந்தப்ப, என் சுதந்திரமான ஸ்கிரிப்ட்டுக்கு எவ்வளவு காலம் ஆகுமோ அப்படியே இதோட தமிழ் ஸ்கிரிப்ட் உருவாக்கத்துக்கும் ஆறு மாசம் ஆச்சு. இதுல சண்டைக்காட்சிகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் இல்லை. பாடல்கள்ல மட்டும் அலங்காரத்துக்காக சிஜியைப் பயன்படுத்தியிருக்கேன். அதனால சர்வ ஜாக்கிரதையா ஒவ்வொரு விஷயத்தையும் அணுக வேண்டியிருந்தது...’’
‘‘தமிழ்ல அரிதான ‘மல்டிஸ்டார்’ விஷயமும் உங்களால சாத்தியப்பட்டிருக்குன்னு சொல்லலாமா..?’’
‘‘இது எல்லாமே ஸ்கிரிப்ட் சம்பந்தப்பட்டதுதான். மல்டி ஸ்டார் படம் பண்ணியாகணும்னு கதை எழுதினா சரியா வராது. கதைக்குத் தேவைப்பட்டா ஸ்டார்கள் சேர்ந்து நடிக்கலாம். அதைப் புரிஞ்சுதான் ஆமிர்கான்லேர்ந்து இங்கே விஜய் வரை ஒத்துக்கிட்டாங்க... ஆமிர்கானே மல்டி ஸ்டார் காஸ்டிங்குக்குக் கஷ்டப்பட்டதா சொன்னார்...’’
‘‘நம்ம மல்டிஸ்டார்கள் பத்தி சொல்லுங்க..?’’
‘‘விஜய்யை எனக்கு சின்ன வயசிலேர்ந்தே தெரியுமில்லையா. அவர் சைல்ட் ஆர்ட்டிஸ்டா நடிச்சப்ப நான் அவருக்கு வசனங்கள் சொல்லித் தந்திருக்கேன். ஒரு டைரக்டரோட மகனா இருந்தாலும், அதைத் தாண்டி ஒரு நடிகனா தன்னைத் தயார்படுத்திக்கிட்டார். நடனம், ஆக்ஷன்னு எல்லா விஷயத்திலும் தன்னை முழுமையான நடிகனா மாத்திக்கிட்டார். மெருகேத்தி நடிக்கிறார். ஆரோக்கியமான வளர்ச்சி அவரோடது. என்கூட அவர் ‘முதல்வன்’லயே நடிக்க வேண்டியது. சில விஷயங்களால அது நடக்காம போச்சு. முன்னே மாதிரியே என்னை ‘அண்ணா...’ன்னு கூப்பிட்டு, அதே சகோதர பாசத்தோடுதான் பழகினார். டிஸிப்ளினான நடிகர் விஜய்.
இந்தப்படத்தில நடிக்கணும்னு ஜீவாவுக்கே விருப்பம் இருந்தது. என்கிட்ட கேள்விகள் கேட்டுக் கேட்டுத் தெளிவா வந்து நடிச்சார். கூடவோ, குறையவோ இல்லாம, மீட்டருக்கு என்ன தேவையோ அதை சரியா தந்தார் ஜீவா.
ஸ்ரீகாந்த் தொழிலை நேசிக்கிற நடிகரா இருக்கார். அதோட நல்ல கோ ஆபரேஷனும் அவர்கிட்ட இருக்கு. இந்தப் படத்துக்கு அவர் சரியான தேர்வா இருக்கார். இலியானா பத்தி ஷார்ட்டா சொல்லணும்னா, ஸ்வீட்டான ஆர்ட்டிஸ்ட்...’’
‘‘வழக்கமா உங்க படங்களோட பிரமாண்டத்தை இதுல எதிர்பார்க்கலாமா..?’’
‘‘பாடல்கள்ல இருக்கும். நான்கு பாடல்களோட இம்பாக்ட் ஒரு பாடல்ல இருக்கிற மாதிரி ஒரு பாடல் வரும். அது என்னன்னு படத்தில பாருங்க. இன்னொரு பாடலுக்கு ஆம்ஸ்டர்டாம், ஸ்பெயின் போனோம். அதேபோல கிளைமாக்ஸ் லொகேஷனுக்கு ரொம்பவே அலைஞ்சு அதை அந்தமான்ல பிடிச்சோம். அந்தமானுக்குப் பக்கத்தில இருக்கிற ‘சீ லிங்க்’ங்கற அந்த இடம் கிளைமாக்ஸுக்கு புது அழகைத்தரும்.
மனோஜ் ஒளிப்பதிவு அற்புதமா கைகொடுத்திருக்கு. ஹாரிஸ் அவருக்கே உரிய துல்லியமான இசையோட டிசம்பர் முதல் வாரத்துல உங்க காதுகளுக்கு வர்றார். ‘எந்திரனு’க்குப் பிறகு ரசூல் பூக்குட்டி என்னோட வேலை பார்த்திருக்கார். ஃபரா கான் ஒரு பாடலுக்கு கோரியோகிராப் பண்ணியிருக்காங்க. மதன் கார்க்கி என்னோட சேர்ந்து வசனங்களை எழுதியிருக்கார். பொங்கலுக்குப் படம் ரிலீஸ்...’’
‘‘உங்க அடுத்த படம் பத்தி ரெண்டு செய்திகள் வந்துச்சு. ஒண்ணு அஜித்தை வச்சு ‘இந்தியன் 2’ எடுக்கப் போறதா...’’
‘‘ஒருமுறை ஏ.எம்.ரத்னத்து க்கிட்ட இந்தியன் தாத்தாவா அன்னா ஹசாரேவை வச்சு செய்திகள் வந்ததைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கும்போது இந்தியன் இரண்டாவது பார்ட் கூட பண்ணலாம்னு இயல்பா சொன்னேன். அவர் உடனே சுறுசுறுப்பாகி, ‘சொல்லுங்க, பண்ணலாம்...’னு கேட்டார். இந்த செய்தி ஒரு பத்திரிகையில வர, அவர்கிட்ட அஜித் டேட்ஸும் இருக்கவே இரண்டையும் இணைச்சு அப்படி செய்தி வந்துடுச்சு...’’
‘‘ரஜினியோட அடுத்த படம் பண்ணப் போறதாவும் ஒரு செய்தி...’’
‘‘அடடே... இது எனக்கே புதுசா இருக்கே..? என் ஒவ்வொரு படத்துக்குப் பிறகும் ஒரு விடுமுறை எடுத்துட்டு பிறகுதான் அடுத்த ப்ராஜக்ட்டைப் பத்தியே யோசிப்பேன். ஆனா ‘எந்திரன்’ முடியறதுக்குள்ளயே ‘நண்பன்’ முடிவாகி, இதுக்குள்ள வந்துட்டேன். அதனால இதை முடிச்சுட்டு ஒரு லீவ் எடுக்கணும். அதுக்குப் பிறகுதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கவே ஆரம்பிக்கணும்..!’’
வேணுஜி