ஆந்திர குக்கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட வி.ஏ.கே.ரங்காராவ் படித்ததும் வளர்ந்ததும் வாழ்வதும் சென்னையில். சிறுவயதில் குக்கிராமத்தில் பொழுதுபோக்குக்கு இடமில்லாதிருந்த நேரத்தில் அம்மாவிடமிருந்த கிராமபோன் மூலம் இசை கேட்டார் ரங்கா ராவ். பிறகு இசைச் சேமிப்பே முழுமூச்சானது அவருக்கு!
பிரபலமானவர்களின் உரைகள், நாடகங்கள், தனிப்பாடல்கள், திரைப்பாடல்கள் என 60 ஆயிரத்துக்கும் அதிகமானவற்றை இசைத்தட்டுகளாக தேடித்தேடி சேகரித்ததன் மூலம் இந்திய இசையின் களஞ்சியமாகத் திகழ்கிறார் ரங்கா ராவ். நேர்த்தியாக அடுக்கி வைக்கப் பட்ட தட்டுகளுக்கிடையே இருந்த அவரைச் சந்தித்தோம்.
‘‘உலக அளவில் 1899லிருந்து இசைத்தட்டுகள் உற்பத்தி செய்யப்படுது. இந்தியாவுக்கு 1902லிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அரக்கில் செய்யப்பட்ட அந்தக்கால தட்டுகள் ‘78 ஆர்.பி.எம்’னு அழைக்கப்பட்டது. அதாவது ஒரு நிமிஷத்துக்கு 78 முறை சுத்தும். 1973 வரை இதுபோன்ற தட்டுகள்தான். பிறகு பிளாஸ்டிக் தட்டுகள் வர ஆரம்பித்தன. 1973 வரை வந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவுகளைச் சேர்த்தேன். அதற்குப் பிறகான காலகட்டத்தில் வெளிவந்த 40 ஆயிரத்துக்கும் அதிக பதிவுகளையும் சேர்த்தேன். மொத்தமுள்ள 60 ஆயிரம் பதிவுகளில் மேற்கத்திய இசை, இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை என்று கலவையாக உண்டு. இவற்றில் 10 ஆயிரம் திரைப்பாடல்கள். நிஜ சம்பவ நிகழ்வுகளாகவே பத்து சதவீத தட்டுகள் இருக்கின்றன. காந்தி, நேரு பேச்சுகள், குடுகுடுப்பைக்காரன் பாடியது, சாவு வீட்டில் ஒப்பாரி, பீடி சிகரெட் விளம்பரம், மொழி கற்றுக்கொடுப்பது என்று ஏராளம்.
இதற்காக நான் நிறைய செலவு செய்தேன் என்று சொல்லமுடியாது. உழைப்புதான் அதிகம். நாலு பத்திரிகைக்கு விளம்பரம் கொடுத்துவிடுவேன். உதாரணமாக பெங்களூரில் இந்த ஹோட்டலில் ரூம் போட்டிருக்கிறேன்னு விளம்பரம் செய்வேன். போன் செய்தால் அங்கு போய் வாங்குவேன். இரண்டு ரூபா, ஐந்து ரூபான்னு எல்லாம் வாங்கியிருக்கேன்...’’ என்கிற ரங்கா ராவின் சேகரிப்பு இசை வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவுகிறது?

‘‘இசை பற்றி ஆயிரத்துக்கும் மேல கட்டுரைகள் எழுதி யிருக்கேன். உதாரணமாக தியாகராஜ பாகவதர் போல பத்து பேராவது இருந்தி ருக்காங்க. அவங்கள நாம மறந்துட்டோம். செருகளத்தூர் சாமா, ஜி.ராமநாதன், கே.ஆர்.ராமசாமி, நாகர்கோவில் கே.மகாதேவன், ஆர்.பாலசரஸ்வதி எல்லாம் சிறந்த பாடகர்கள். வெற்றிகரமாக ஓடிய ‘பில்ஹணன்’ படத்தில் பாடி நடித்தவர் பால
சரஸ்வதி. ‘தாசிப்பெண்’, ‘திரு நீலகண்டர்’ படங்களிலும் நடித்தார். ‘தேவதாஸ்’ படத்தில் ‘பாராமுகம் ஏனையா’, ‘அன்பே பாவமா’ போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்குப் பின்னணி பாடியவர். இதையெல்லாம் சொல்வதற்கு ஆட்களே இல்லையே இன்று...
சில படங்களுக்கு இசைத்தட்டுகள் வெளியிடப்படாததால் அவை பற்றிய நினைவுகளும் மறைந்து போனது. வைஜயந்திமாலாவின் தாயார் வசுந்தரா நடித்த ‘உதயணன் வாசவதத்தா’ படத்தின் பாடல்கள் யாரிடமும் இல்லை. நாதஸ்வர வித்வான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நடித்த ‘கவிராஜ காளமேகம்’ படத்துக்கு ரெக்கார்ட் வந்தும், பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
என்னிடம் 200 பேர் பாடிய தனிப்பாடல்கள் உண்டு. சாரதாம்பாள் என்கிறவர் பாடிய ‘வண்ணான் வந்தானே’ என்கிற பாட்டு நாட்டுப்புற மெட்டில் அமைந்த பாட்டு. அந்தக்காலத்தில் புகழ் பெற்ற பாட்டு. கொத்தமங்கலம் சீனு பாடிய தனிப்பாடல்களும் சிறப்பானவை. ஏ.சகுந்தலா பாடிய ‘பால்வடியும் முகம்’ பாட்டும் பிரபலம். காவடிச்சிந்து, கோலாட்டம், நொண்டிச்சிந்து பாடல்களும் முக்கியமானவை...’’ என்கிற ரங்கா ராவிடம் வித்தியாசமான சேகரிப்புகளும் உண்டு.
‘‘தூக்குதூக்கி என்ற பெயர்ல இரண்டு தடவை படம் வந்தது. 1930ல ஒரு தடவை, 1950களில் ஒரு தடவை. படம் வர்றதுக்கு முன்னாடியே ‘தூக்குதூக்கி’ ங்கிற பெயர்ல வந்த நாடக வடிவம் என்கிட்ட இருக்கு. நாடகம் மூன்று மணிநேரம் நடக்கும். ரெக்கார்டுல ஐம்பது நிமிஷம்தான் இருக்கு. நாடகத்துல உள்ள பல காட்சிகள் இரண்டு திரைப்படங்களிலும் உண்டு.
‘வள்ளித்திருமணம்’ இசை நாடக ரெக்கார்டு இருக்கு. இந்த நாடகம் ‘ஸ்ரீவள்ளி’, ‘வள்ளித்திருமணம்’, ‘வள்ளி கல்யாணம்’, ‘ஸ்ரீமுருகன்’ என்கிற பெயர்களில் திரைப்படங்களாக வந்தது. ‘கோவலன்’ என்ற பெயரில் மௌனப்படமும் வந்தது; பேசும்படமும் வந்தது. திரைப்படத்துக்கு முன் நாடகமாகவும் வந்தது. அதன் ரெக்கார்டும் என்னிடம் உண்டு’’ என்கிற ரங்கா ராவ், 1940&50களில் சுயமரியாதை பற்றி பெரியார் 6 நிமிடம் பேசும் ஒலித்தட்டைப் பொக்கிஷமாக வைத்திருக்கிறார்!
ரஞ்சித்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்