நான்கரை லட்சம் சதுர அடி ரூ. 170 கோடி செலவு 12 லட்சம் புத்தகங்கள் ஆயிரக்கணக்கான இணைய இதழ்கள் ‘தமிழகத்தின் பெருமிதம்’ என்று கொண்டாடும் வகையில் ஏராள வசதிகளோடு உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் உயர் மருத்துவமனையாக மாற்றப்போவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசின் இந்த அறிவிப்பு, படைப்பாளிகள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
‘‘அரசின் இந்த நடவடிக்கை அறிவு சார்ந்ததல்ல. காழ்ப்புணர்வோடு எடுக்கப்பட்டது. கலைஞர் நடந்தார் என்பதற்காக அந்தத் தெருவையே இடிக்க வேண்டும் என்பதுபோன்ற மனப்போக்கை இந்த முடிவில் பார்க்க முடிகிறது...’’ என்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன்.
‘'பகுத்தறிவோடு எடுக்கப்பட்ட முடிவு அல்ல இது! எதற்காகக் கட்டுகிறோம் என்று திட்டமிட்டு, அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகளோடு தான் ஒரு கட்டிடத்தைக் கட்டுகிறார்கள். நூலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவது எளிதல்ல. அதோடு, இது நூலகத்துறை நிதியில் கட்டப்பட்டது. பொது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிக் கட்டப்பட்டதல்ல. அரசு நினைத்தால் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் சரியல்ல.
மருத்துவமனை தேவைதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. குழந்தைகள் மீது அரசுக்குள்ள அக்கறை மகிழ்ச்சி தருகிறது. ஆனால் பாருங்கள்... இப்போதைய மருத்துவமனைகளில் எத்தனை சரியாக இயங்குகின்றன? கிராமங்களில் இருக்கக்கூடிய பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை; மருந்துகள் இல்லை; முறையான உள்கட்டமைப்பு இல்லை. எழும்பூரில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கான தலைமை மருத்துவமனையிலேயே போதிய வசதிகள் இல்லையே... அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கலாமே..?
அரசுக்கு ஏதோ ஒரு சாக்கு தேவைப்படுகிறது. நூலகம் உள்ள இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட தற்போதைய முதல்வர் முன்பு முயற்சித்தபோது, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அந்த ஆத்திரம்கூட இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம். எதையும் மக்கள் நலன் சார்ந்தும் பகுத்தறிவோடும் பார்க்க வேண்டும். ஜோசியர்கள் சொன்னார்கள் என்பதற்காக கண்ணகி சிலையையே அகற்றியவர்கள் அல்லவா இவர்கள்..?

திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த சிறந்த செயல்களில் ஒன்று இந்த நூலகம். ஒருதடவை இந்த நூலகத்தை சுற்றிப் பார்ப்பவர்கள், அரசின் முடிவை கண்டிப்பாக எதிர்ப்பார்கள். வாசிக்கத் தகுந்த சிறந்த ஏற்பாடுகளோடு பல மொழிகள் சார்ந்து ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நிரம்பியிருக்கின்றன. நான் சென்றபோது 500க்கும் அதிகமானவர்கள் மகிழ்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஹிலாரி கிளிண்டன் வந்து பார்த்து பாராட்டிச் சென்றிருக்கிறார். இரவு பகல் பார்க்காமல் இதை உருவாக்க அதிகாரிகள் உழைத்திருக்கிறார்கள். தங்கம் தென்னரசு போன்றோரின் உழைப்பும் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. கனவுகளோடு கட்டப்பட்ட நூலகம் இது.
டிபிஐ வளாகம் இப்போதே நெருக்கடியில் தவிக்கிறது. நூலகம் அமைக்கத் தகுந்த இடமல்ல அது. அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கிறபோது செம்மொழி நூலகத்துக்கு ஏற்பட்ட கதி இந்த நூலகத்துக்கும் ஏற்படுமோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியில் அசிங்கப்பட்ட தமிழக அரசு, மீண்டும் அதைப் போன்றதொரு அவமானத்தை சந்திக்கப் போகிறது.
அரசு நூலகத்தை இடம் மாற்றும் முடிவைக் கைவிட வேண்டும். இது எழுத்தாளர்கள் மத்தியில் கோபத்தையும் வருத்தத்தையும் உருவாக்கியுள்ளது. இதைவிட சிறப்பாக வேறொரு நூலகத்தை அமைத்து விட முடியாது. மேலும் இதை மேம்படுத்தலாமே. புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க வாய்ப்பு ஏற்படுத்தலாமே. உள்ளே உள்ள பிரமாண்டமான அரங்கத்தை புத்தக வெளியீடு மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு இலவசமாகத் தரலாமே...
முக்கியப் படைப்பாளிகளைத் திரட்டி சென்னையில் பிரமாண்ட போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். சட்டரீதியாகவும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’’ என்று கொதிக்கிறார் தமிழ்ச்செல்வன்.
நூலகத்தை மாற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், முடிவு அரசின் கையில்!
வெ.நீலகண்டன்