பல் தேய்க்க உமிக்கரி கிடைக்குமா?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                      எப்பொழுதும் ஏதாவது ஒரு எழுத்தாளரை, புத்தகத்தைப் பற்றி பேசும் பெங்களூரு நண்பன் சுந்தரம் இந்த முறை, ‘உமிக்கரி வாங்கி அனுப்ப முடியுமா’ என்று கேட்டான். ‘அயோடின் கலக்காத உப்பு கிடைக்குமா’ என்றான்.

‘‘எதுக்குடா உமிக்கரியும் உப்பும்?’’

‘‘பல் தேய்க்கறதுக்கு’’

‘‘ஏன், டூத்பேஸ்ட்டெல்லாம் என்னாச்சு?’’

‘‘ஒருநாள் உட்கார்ந்து டி.வில வர்ற டூத்பேஸ்ட் விளம்பரத்தையெல்லாம் பாரு. அப்புறம் நீயும் என்னமாதிரி உமிக்கரியும் உப்பும்தான் கேட்ப. அவ்வளவு குழப்பமா இருக்கு.

ஒரு டூத் பேஸ்ட்டுல உப்பு கலந்திருக்குங்கிறாங்க. இன்னொண்ணுல ஆக்டிவேட்டட் கார்பன் கலந்திருக்குங்கிறாங்க. கிராம்பு, புதினா இப்படி புதுசு புதுசா கலந்து கலந்து, உண்மையிலேயே எந்த பேஸ்ட்டு பயன்படுத்துனா நம்ம பல்லைப் பாதுகாக்க முடியும்னு தெரில.

எங்க தாத்தா பாட்டியெல்லாம் உமிக்கரியும் உப்பும் வச்சுத்தான் பல் தேய்ச்சாங்க. பல்லுல கறையில்ல; பேசுனா துர்நாற்றம் வரல. கரியும் உப்பும் வச்சுத் தேய்ச்சா பல்லு தேஞ்சுரும்னு சொல்லி டூத்பேஸ்ட் அறிமுகப்படுத்துனாங்க. நம்ம தாத்தா, பாட்டி தப்பிச்சுட்டாங்க. நாம முழிக்கிறோம். இப்ப என்னடான்னா, கரியும் உப்பும் பல்லுக்கு ரொம்ப முக்கியம்னு தாத்தா சொன்னதை விளம்பரக்காரங்களும் சொல்றாங்க!’’

‘‘நீ ஒருத்தன்தாண்டா இப்படியெல்லாம் யோசிக்கிற!’’

‘‘இல்ல... இல்ல... டூத்பேஸ்ட் மட்டுமில்ல... நாம குடிக்கிற குளிர்பானம், நம்ம பயன்படுத்துற வெளிநாட்டுப் பொருள் பத்தியெல்லாம் நிறைய யோசிச்ச ஒரு மனிதர் இருந்திருக்கார். நெட்ல www.rajividixit.com பாரு.’’

ராஜீவ் தீட்சித்தைப் படித்தேன். ஒவ்வொரு நாளையும் வாளாக வீசி வீசி மரணம் வரைக்கும் போராடிய வாழ்க்கை. உத்திரப் பிரதேசம் அலிகாரில் (1967) பிறந்திருக்கிறார். கிராமத்தில் பள்ளிப்படிப்பு  .   அலகாபாத் என்.ஐ.டி&யில் பி.டெக், கான்பூர் ஐ.ஐ.டி&யில் எம்.டெக், பிரான்சில் பிஹெச்.டி என எல்லாமும் தொலைத்தொடர்புக் கல்வி. ஒரு விஞ்ஞானியாக பிரான்சிலும், இங்கே அப்துல் கலாமோடும் கூட பணியாற்றியிருக்கிறார்.

திடீரென ஒருநாள் வேலையை ராஜினாமா செய்தவர், பல போராட்டங்களின் விதைகளை தனது பாதைகளெங்கும் தூவிச் சென்றார். இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் பெருகப் பெருக, வறுமையும் வளர்ந்துகொண்டே வருவதைக் கவனப்படுத்தியவர், வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் விளையும் விபரீதத்தையும் விளக்கினார்.

பற்பசையில் புற்றுநோயை உருவாக்கும் அணுக்கள் இருப்பதை (இன்று நிறைய பேருக்குத் தொண்டையில் புற்றுநோய் இருக்கிறது?), வெளிநாட்டுக் குளிர்பானங்களில் மெல்ல மெல்லக் கொல்லும் நச்சுத்தன்மை கரைந்திருப்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்து அவர் நடத்திய போராட்டங்கள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. கிராமத்தில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பதற்காக ‘சுதேசி பொது அங்காடி’களை அமைத்திருக்கிறார். சுதேசி இயக்கம், சுதந்திரத்தைக் காப்பாற்றும் இயக்கம் என இவரே ஓர் இயக்கமாக இருந்திருக்கிறார்.

மதராஸ் மாகாணம் என்பது செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. தமிழ்நாடு, வடகேரளம், லட்சத்தீவுகள், கடலோர ஆந்திரமான ராயலசீமா, கர்நாடகத்தின் பெரும்பகுதி, தெற்கு ஒரிசாவும் அதில் அடக்கம். இந்த மதராஸ் மாகாணத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்துள்ளன.

ஒரு கிராமத்துக்கு ஓர் உயர் நிலைக் கல்விக்கூடம், பத்து கிராமங்களுக்கு ஓர் அறுவை சிகிச்சை மருத்துவக்கல்லூரி என லட்சக்கணக்கான கல்விக்கூடங்களும், ஆயிரக்கணக்கான மருத்துவக் கல்லூரிகளும் இருந்திருக்கின்றன. அத்தகைய மாணவர்களும் ஆசிரியர்களுமான ஒரு சமூகம் இங்கே வாழ்ந்திருக்கிறது. இப்படி கற்பிக்கப்பட்ட கல்விதான் நம்மிடையே விஞ்ஞானபூர்வமான பழக்கவழக்கங்களுடன் கூடிய ஒரு நேரிய பண்பாட்டை நிலையாகக் கட்டி வைத்திருந்தது. பருவங்களுக்கேற்ற உடைகள், தட்பவெப்பத்துக்கேற்ற உணவுகள் அனைத்தையும் ஆய்ந்தறிந்து உட்கொண்ட ஒரு பண்பாடு இங்கே விரிந்திருந்தது.

மெக்காலே பிரபு  இந்தியாவுக்கு வந்து இவற்றை யெல்லாம்தான் ஆராய்ந்து தெளிந்து ஆங்கிலேயருக்கு எழுதினார். அதன்பிறகுதான் மேற்கத்திய கல்விமுறையாலும் பழக்க வழக்கங்களாலும் நமது கலாசாரம் சிதையத் தொடங்கியது. ஆங்கிலேயர் நாட்டைத் தந்துவிட்டுப் போன பிறகும் நாம் நமது மூளைகளை மீட்கவே இல்லை.

இதைப்பற்றி ராஜீவ் தீட்சித் நிறைய சிந்தித்திருக்கிறார்; பேசியிருக்கிறார்; போராடியிருக்கிறார். பிறகு அவருடைய போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டார்கள். ராஜீவ் தீட்சித் மீதும் பல நிறங்கள் பூசப்பட்டன. இந்த நிறங்கள் எவ்வளவு உண்மையென்று தெரியவில்லை. பகத்சிங்கை தனது ஆதர்சமாகக் கொண்டு செயல்பட்ட ராஜீவ் தீட்சித், 2010 நவம்பர் 30 அன்று தனது இறுதிமூச்சை இந்த சமூகத்துக்காக அர்ப்பணித்திருந்தார். அவர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்கிற சந்தேகத்தோடு அவரது உடல் நீலம் பாரித்துக் கிடந்ததாம். அப்போது அவரது வயது 43.

இன்று தண்ணீர் இல்லாத கிராமங்களால், கழிவறைகள் இல்லாத பள்ளிக்கூடங்களால், வறுமை வாட்டி வதைத்த மக்களால் நிறைந்திருக்கிறது இந்தியா. மக்கள்தொகைக்கேற்ப உணவு உற்பத்தி இல்லை. விவசாயத்துக்கு நிலம் இல்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்களிலும் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. நிலத்தையும் மனித வளத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு ‘உணவுப்பொருள் பணவீக்க உயர்வு பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது’ என்று தலைவர்கள் பேசுவது, குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிற கதைதான்.

ராஜீவ் தீட்சித்தை முன்வைத்து எனக்கும் சில கேள்விகள் எழுகின்றன.

 பன்னாட்டு நிறுவனங்கள் வருவதற்கு முன்னால் நாம் பல் தேய்த்ததில்லையா?

 இந்த நிறுவனங்களின் சோப்புகளும் ஷாம்புகளும் வருவதற்கு முன்னால் நாம் சுத்தமாகக் குளித்ததில்லையா? துவைத்ததில்லையா?

நமது திருப்பூரிலிருந்து தயாரித்து ஏற்றுமதியாகும் ஆடைகள், அங்கே உள்ள நிறுவனங்களின் அடையாளப் பெயரோடு மீண்டும் நம்மிடையே விற்கப்படுகின்றன. நாமும் ‘இந்த பிராண்ட் ஜீன்தான் அணிவேன்; இந்த பிராண்ட் ஜட்டிதான் போடுவேன்’ என்று வாங்கி மாட்டிக்கொள்கிறோம்.

நமது நிலம், நீர், காற்று, சிந்தனை அனைத்தையும் அடகு வைத்துவிட்டோம். பன்னாட்டு நிறுவனங்களின் தொப்பியையும் ஷூவையும் போட்டுக்கொண்டு நிர்வாணத்தோடும் பசியோடும் நிற்கிறது இந்தியா. அதைவிடப் பெரிதாக நிற்கிறது ஒரு கேள்வி:

இந்தியா -
வல்லரசு நாடா?
நல்லரசு நாடா?
கொல்லரசு நாடா?
உமிக்கரி கேட்ட நண்பன்தான் என்னை இந்தியாவைப் பார்த்து இவ்வளவு பெரிய கேள்வியைக் கேட்க வைத்துவிட்டான். ஆனால், அவன் கேட்ட உமிக்கரியும் அயோடின் கலக்காத உப்பும் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
(சலசலக்கும்...)

அபசுர அவதாரம்

அந்நிய தேசத்து
அழுக்கு பானங்களைப்
பேரம் பேசாமல்
வாங்குகிற இந்தியன்

தாய்பூமியின்
தூய தயாரிப்பான
இளநீருக்குப் பேரம் பேசி
சோரம் போகின்றான்

அருந்துகையில்
அந்நிய பானம்
தலைகுனிவைத் தருகிறது

இந்த தேசத்து
இளநீரோ
தலைநிமிர்த்தித் தானே
அருந்த வைக்கிறது!
அப்துல்காதர்
(‘மின்னல் திரிகள்’ நூலிலிருந்து...)
பழநிபாரதி