‘உலகின் 700 கோடியாவது குழந்தை
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோ அருகில் மால் என்ற பகுதியில் அஜய்க்கும்
வினிதாவுக்கும் பிறந்த நர்கீஸ்தான்’ என சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள்.
இதில் நாம் பெருமைப்பட ஒரே ஒரு காரணம் உண்டு... ஒரு பெண் குழந்தை &
அதுவும் உத்தரப் பிரதேசத்தில் & சிசுக்கொலை என்ற கொடூரத்தைத் தாண்டி
பிறந்திருக்கிறதே! உலகின் மக்கள்தொகை வேகமாக எகிறினாலும், இந்தியாவில் பெண்
குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தபடி இருக்கிறது. இந்த ஆண்டு சென்சஸ்படி
ஆயிரம் ஆண்களுக்கு 914 பெண்கள். உ.பி. மாநிலத்தில் இந்த எண்ணிக்கை ஆயிரம்
ஆண்களுக்கு 899. இதன் அர்த்தம், 111 ஆண்களுக்கு மணந்துகொள்ள பெண்
கிடைக்காது. இதனால் நிகழும் கொடூர விளைவு...
றீஉத்தரப்
பிரதேசத்தின் பக்பத் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் வாழ வந்தவர் முன்னி.
கணவருக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் நிறைய. கணவருக்கு கல்யாண வயதில்
இன்னும் இரண்டு தம்பிகள். ‘‘புகுந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே மாமியார்
என்னைத் தனியாக அழைத்து, ‘உன் மச்சினன்களுக்கு பெண் கிடைக்கவில்லை.
கல்யாணம் ஆகுமா என்பதே தெரியவில்லை. ஒருவன்தான் தாலி கட்டினான் என்றாலும்,
மூன்று பேருக்குமே நீதான் மனைவி’ என்றார். அந்த நேரத்தில் நான் அடைந்த
அதிர்ச்சி இருக்கிறதே...’’ என இன்றும் கண்ணீரோடு நினைவுகூர்கிறார் முன்னி.
இப்போது 40 வயதாகும் முன்னிக்கு 3 குழந்தைகள். கணவருக்குப் பிறந்தவையா,
அவரது தம்பிகளின் வாரிசுகளா என்று தெரியாது. ‘‘ராத்திரி, பகல் வித்தியாசம்
பார்க்காம சித்திரவதை பண்ணுவாங்க. மறுத்தா அடி விழும். பல நாள் என் மேல
கெரசின் ஊத்தி தீ வச்சிருக்காங்க’’ என்று சொல்லும் முன்னி, இந்தக்
கொடூரத்திலிருந்து தப்பிக்க முயன்றிருக்கிறார். ஆனால், ஜாதிக்
கட்டுப்பாடுகள் நிறைந்த உ.பி. கிராமங்களில் பெண் தனியாக வெளியில் வருவது
சாத்தியமில்லாத விஷயம். எங்கும் புகார் செய்யவும் முடியாது. மீறி புகார்
செய்தாலும் நடவடிக்கை இருக்காது. நான்கு சுவர்களுக்குள் அழுது தீர்த்து,
இந்த வாழ்க்கையை சகித்துக்கொள்ளப் பழகிவிட்டார் முன்னி.

குமாரிக்கு
25 வயது. அதே பக்பத் மாவட்டத்தில் வாழ விதிக்கப்பட்டவர். முன்னியாவது
முறைப்படி பெரியவர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டவர். குமாரியை
ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்திவந்து திருமணம் செய்துகொண்டார் ஒருவர்.
அவருக்கு மூன்று தம்பிகள் இருக்க, முன்னிக்கு நேர்ந்த அதே கொடூரம்
குமாரிக்கும் தன் புகுந்த வீட்டில் நிகழ்கிறது.
றீசபீதாவுக்கு 25 வயது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். திருமண வயதில் உத்தரப் பிரதேசத்துக்கு
கடத்தி வரப்பட்டார். தன்னைவிட 19 வயது மூத்த ஒரு ஆணுக்கு கட்டாயத் திருமணம்
செய்து வைக்கப்பட்டவர். நல்லவேளை, அவரது கணவருக்கு சகோதரர்கள் இல்லை.
&
‘பெயர் சொல்லும் பையன் பிறந்தால்தான், கடைசி காலத்தில் உட்கார வைத்து
கஞ்சி ஊற்றுவான்’ என்ற தகர்க்கப்படாத நம்பிக்கை இன்னமும் பல பெண் சிசுக்களை
கருவிலும், உருவிலும் சாகடித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடூரத்தின்
மோசமான பின்விளைவை வட மாநிலங்கள் பலவும் அனுபவிக்க ஆரம்பித்த பிறகும், பெண்
சிசுக்கொலைகள் நின்றபாடில்லை. ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வளமான
கிராமங்களில் ஓரளவு வசதியோடு இருப்பவர்கள், மணந்து கொள்ள பெண் கிடைக்காமல்
தவிக்கிறார்கள்.
இவர்க
ளுக்காகவே ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தின் வறிய பகுதிகளிலிருந்து
பெண்களைக் கடத்திவரும் தொழிலை ஒரு கும்பல் செய்கிறது. சில பகுதிகளில், ‘கண்
காணாத இடத்துக்குப் போனாலும், நம் மகளுக்கு நிம்மதியான வாழ்க்கை
கிடைக்கிறதே’ என்ற நம்பிக்கையில் பெண்ணைப் பெற்றவர்களே அனுப்பி
வைத்துவிடுகிறார்கள். இப்படி அழைத்தோ, கடத்தியோ வரப்படும் பெண்கள்தான் நவீன
இந்தியாவின் பாஞ்சாலிகளாக துயர வாழ்க்கை வாழ நேர்கிறது. எதிர்காலத்தில்
இது இன்னும் என்னென்ன வடிவங்களை எடுக்குமோ என நினைத்துப் பார்க்கவே அச்சமாக
இருக்கிறது.
உலகின் மக்கள்தொகை 700 கோடியா, அந்த 700 கோடியாவது
குழந்தை எங்கு பிறந்தது என்ற சர்ச்சைகளை ஒதுக்கிவிட்டு, இந்த 700 கோடி
பேரும் நிம்மதியாக வாழும் சூழலை உலக நாடுகள் அவர்களுக்குக்
கொடுத்திருக்கிறதா என்பதை எல்லோரும் யோசிக்க வேண்டிய தருணம் இது!
எஸ்.உமாபதி