திருப்பு முனை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            வெற்றியின் பாதையில்
தங்களை திருப்பிவிட்ட தருணங்களை,
ஜெயித்தவர்கள் அடையாளம் காட்டும் தொடர்
டாக்டர் சுரேந்திரன்

ஆயிரம் குறைகள் இருந்தாலும், இன்றும் அரசு மருத்துவமனைகள்தான் ஏழை மக்களின் உயிர் காக்கும் கோயில்கள். அரசு மருத்துவரான டாக்டர் சுரேந்திரனுக்கு, இந்தியா முழுக்க கிளைகள் வைத்திருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வருகிறது. ‘‘இன்னும் எவ்ளோ நாளைக்குத்தான் கவர்மென்ட் ஹாஸ்பிடலைக் கட்டிக் கொண்டு அழப் போறீங்க டாக்டர்? உங்க திறமைக்கு நீங்க எங்கேயோ போக வேண்டிய ஆளு. பொழைக்கத் தெரியாம இருக்கீங்களே? வி.ஆர்.எஸ் கொடுத்துட்டு நம்மகிட்ட வந்துடுங்க. அடிக்கடி வெளிநாட்டுப் பயணம், நினைச்சுப் பார்க்க முடியாத சம்பளம்னு ராஜமரியாதை கிடைக்கும்’’ என்கிற ஆசை வார்த்தைகளை புன்னகையோடு மறுத்திருக்கிறார் சுரேந்திரன். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல், கணையம் பிரிவு மற்றும் ரத்தக்கசிவு தடுப்பு மையத்தின் தலைவர்.

அரசு மருத்துவமனையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிற மருத்துவர். ‘கேஸ்ட்ரோ என்ட்ராலஜி’ என்கிற கல்லீரல், கணையம் அறுவை சிகிச்சைத் துறையில் இந்திய அளவில் விரல்விட்டு எண்ணக்கூடிய நிபுணர்களில் ஒருவர். சுரேந்திரன் போன்ற அர்ப்பணிப்பு உணர்வுள்ள மருத்துவர்கள் இன்னும் இருப்பதால் மட்டுமே, ஏழை எளிய மக்கள் தங்களின் உயிர் பற்றிய நம்பிக்கையோடு அரசு மருத்துவமனைகளுக்குப் போக முடிகிறது. இப்போதும் தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக விளங்கும் தர்மபுரி மாவட்டத்திலிருந்து மருத்துவம் படித்த சுரேந்திரனின் நம்பிக்கைப் பயணம் பல திருப்பங்களைக் கொண்டிருக்கிறது.

‘‘தர்மபுரி மாவட்டத்தின் அரூர் தாலுக்காவில் மருக்காளம்பட்டி என்கிற சிறிய கிராமம் சொந்த ஊர். அப்பா சாதாரண கிளார்க் வேலையிலிருந்து, தேர்வெழுதி படிப்படியாக அரசு அதிகாரியாக உயர்ந்தவர். நேர்மையை நெறியாகக் கொண்டு வாழ்ந்தவர். துணை தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற காலத்திலும், மாதக் கடைசியில் குடும்பம் நடத்தத் தடுமாறுகிற சராசரி நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. திடீரென்று வருகிற செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகிற அப்பாவுக்கும், வேலையில் நெருப்பு போன்று நேர்மையாகவும் கம்பீரமாகவும் இருக்கிற அப்பாவுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ‘பதவிங்கிறது சுகத்தை அனுபவிக்கிற விஷயமில்லைப்பா. அது பெரிய பொறுப்பு. ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டியதை நேர்மை தவறி கெடுக்கிறது குற்றம் மட்டும் இல்லை; அது பாவம். குற்றம் அந்தப் பிறவியோட போயிடும். பாவம் பரம்பரை பரம்பரையா தொடர்ந்து வரும்’ என்கிற அப்பாவின் வார்த்தைகள் இளம் வயதில் மனதில் கல்வெட்டுகளாக பதிவாயின.

என்னுடைய ஆதர்சம் அப்பாதான். எங்கள் பகுதியில் எல்லாரும் ‘எம்.ஜி.ஆர் மகன்’ எனச் சொல்லிக் கூப்பிடுவாங்க. எம்.ஜி.ராஜகோபால் என்கிற பேர் அந்தப் பகுதி மக்களுக்கு எம்.ஜி.ஆர். என்று பழகிப்போனது. டாக்டர் ஆக வேண்டும் என்கிற விதையை விதைத்தவர் அவர்தான். இதய வால்வு குழாயில் பிரச்னை இருந்து சென்னை அரசு மருத்துவமனையில் அப்பா அனுமதிக்கப்பட்டார். இதய அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் சதாசிவம் வார்டுக்கு வரும்போது எல்லோரையும் வெளியே அனுப்பி விடுவார்கள். சந்தை மாதிரி சத்தமாக இருந்த பகுதி, கப்சிப் என்று அமைதியாகும். நான் பயந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்வேன். ‘‘எல்லோரும் ஏன் பயப்படுகிறார்கள்’’ என்று கேட்டதும், ‘‘அது பயம் இல்லடா தம்பி, மரியாதை. அவரால எவ்ளோ உயிர் பொழைக்குது தெரியுமா’’ என்று மருத்துவத் துறையின் மகத்துவத்தையும், மருத்துவரின் பெருமையையும் அப்பா சொன்ன அந்த நாளில்தான் எனக்குள் விதை விழுந்தது.

தர்மபுரி அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து சுமாரான மதிப்பெண்களோடு பத்தாம் வகுப்பு தேறினேன். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.யூ.சி படிக்க இடம் கிடைத்தது. சென்னைக்கு வந்த பிறகுதான், எவ்வளவு போட்டி போட்டு படிக்க வேண்டும் என்று புரிந்தது. தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும். எவ்வளவு நன்றாகப் படித்தாலும் பதில் எழுதத் தெரியாமல் ஃபெயில் ஆவது உறுதி என்று நினைத்தேன்.

மறுநாள் தேர்வுத்தாளை திருத்தி எடுத்துவந்த பேராசிரியர், ‘சுரேந்திரன் 86’ என்றார். அதுவே வகுப்பில் முதல் மதிப்பெண் என்றும் அவர் சொன்னபோது சலனமே இல்லாமல் உட்கார்ந்திருந்தேன். காரணம், வகுப்பில் இரண்டு சுரேந்திரன்கள் இருந்தோம். ஃபெயில் ஆக வேண்டியவன் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்க வாய்ப்பில்லைதானே? இன்னொரு சுரேந்திரன் எழுந்து நின்று கைதட்டல் வாங்கினான். பேராசிரியர் அவனைப் பாராட்டி பேப்பரை நீட்டிய போதுதான், அது அவன் கையெழுத்து இல்லை என்பது தெரிந்தது. அது நிஜமாகவே என்னுடைய விடைத்தாள். ஆசிரியர் கடுமையான குரலில் என்னிடம் சொன்னார். ‘‘உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லேன்னா எப்படி? தாழ்வு மனப்பான்மைதான் உன்னை மாதிரி பசங்களுக்கு முதல் எதிரி!’’

பாலபாடத்தை அன்று பேராசிரியர் போதித்தார். அவர் சொல்லித்தந்த பாடத்திலேயே சிறந்த பாடமாகவும். நான் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகிற பாடமாகவும் அது அமைஞ்சது. இன்றும் என்னைப்போல கிராமப்புறத்திலிருந்து வருகிற மாணவர்கள் தொலைந்து போவதும், இருக்கிற இடம் தெரியாமல் அடையாளம் இழப்பதும் தாழ்வு மனப்பான்மையால்தான். சென்னைக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே, தயக்கங்கள் உடைந்து நம்பிக்கையோடு படித்தேன். பலன் பி.யூ.சி. தேர்வு முடிவில் தெரிந்தது.

சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில், டாக்டர் படிப்பில் சேர இன்டர்வியூ அழைப்புக் கடிதம் வந்தது. அப்பாவுக்கு சந்தோஷமும் பதற்றமும் ஒரே நேரத்தில் வந்தது. என் அக்காவும் வெளியூரில் தங்கி மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். அந்தச் செலவை சமாளிக்கவே சிரமமாக இருந்த நிலையில், எனக்கான செலவையும் இனி சமாளிக்க வேண்டும் என்கிற பதற்றம். 1969ல் திடீரென்று 350 ரூபாய் புரட்டுவது பெரிய கஷ்டம். அதுவும் மாதக் கடைசி. அந்தக் கடிதம் கிடைத்த உடனே பணத்தைக் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். நானும் அப்பாவும் எங்கள் ஊர் பஸ் கம்பெனி முதலாளியை சந்திக்கப்போனோம். தீர்த்தகிரி கவுண்டர் என்கிற நல்ல உள்ளம் படைத்த மனிதர், நாங்கள் கேட்டதும் யோசிக்காமல் 400 ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து நீட்டினார். ‘‘நம்ம ஊர்ல இருந்து ஒரு பையன் படிச்சி டாக்டராகிறது எவ்ளோ பெரிய சாதனை’’ என்று பாராட்டுப் பத்திரம் வாசித்து, உதவிக் கரத்தையும் நீட்டினார் அவர். என் வாழ்க்கையை மாற்றி அமைத்த, காலம் அறிந்து செய்த உதவி.

அப்போதெல்லாம் மதிப்பெண் இருந்தாலும், நேர்முகத் தேர்வு வைத்துத்தான் தேர்ந் தெடுப்பார்கள். ‘வீட்டில் வேறு யாராவது டாக்டர் படிச்சி ருக்காங்களா’ என்பதே முதல் கேள்வி. ‘ஆமாம்’ என்று தலையாட்டிவிட்டால், தேர்வு செய்யமாட்டார்கள் என்று அங்கிருப்பவர்கள் பேசிக் கொண்டார்கள். என்னுடைய அக்கா மருத்துவம் படிப்பதைச் சொல்வதா, வேண்டாமா என்று குழப்பம். முதலில் பாடத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லிவிட்டேன். இன்டர்வியூ அதிகாரி சொல்லி வைத்தது போல் அதே கேள்வியைக் கேட்டார். ‘‘வீட்ல யாராவது எம்.பி.பி.எஸ் படிக்கிறாங்களா’’ என்றதும், ‘ஆமாம், இல்லை’ என்று ஒரே சமயத்தில் இரண்டுவிதமாகவும் தலையாட்டினேன். ‘ஆமாவா? இல்லையா?’ என்று நிறுத்தி நிதானமாக கேட்டார். பயத்தோடு ‘‘ஆமாம்’’ என்றேன். ‘‘ஏன் ரெண்டு விதமாவும் தலையாட்டினே?’’ என்று கேட்டார். ‘‘யாராவது டாக்டருக்குப் படித்தால் நீங்க ஸீட் இல்லைன்னு சொல்லிடுவீங்கன்னு பேசிக்கிட்டாங்க’’ என அப்பாவித்தனமாக சொன்னதும் அவருக்கு சிரிப்பு வந்தது. ‘‘அப்போ, ‘இல்லை’ன்னு ஸ்ட்ராங்கா தலையாட்டி இருக்கலாமே’’ என்று கேட்டார். ‘‘பொய் சொன்னது தெரிஞ்சா அப்பா திட்டுவாரு’’ என்று சொன்னதும், வெளியே இருந்த அப்பாவை அழைத்து வரச்சொன்னார்.

‘‘பசங்களை நல்லா வளர்க்கிறீங்க. வெரிகுட்’’ என்ற பாராட்டோடு மருத்துவம் படிக்கிற வாய்ப்பும் கிடைச்சது. என் அப்பாவுக்கு, நான் எம்.பி.பி.எஸ். ஸீட் வாங்கியதைவிட, உண்மை பேசியதில் பூரிப்பு அதிகம். 

அடுத்த சம்பளம் வந்ததும், என்னை அழைத்துக்கொண்டு தீர்த்தகிரி கவுண்டரிடம் போனார் அப்பா. வாங்கிய பணத்தை அப்பா திருப்பியதும் அவருக்கு வருத்தம் வந்தது. ‘‘நம்ம ஊருக்கு கௌரவம் தந்திருக்கான் உங்க மகன். அதுக்கு நாங்க ஏதாவது செய்யணும் இல்லையா?’’ என்று வாங்க மறுத்துவிட்டார். ‘‘கடன் வாங்குறபோதும் பையனைக் கூட்டிட்டு வந்தேன். காரணம், அப்பா கஷ்டப்பட்டு தன்னைப் படிக்க வைக்கிறார்னு அவனுக்குப் புரியணும். அப்பதான் ஒழுங்கா படிப்பான். இப்போ பணத்தைத் திரும்பத் தரும்போதும் கூட்டிக்கிட்டு வந்தேன். கஷ்டத்துக்குக் கடன் வாங்கினா, சொன்ன பேச்சு தவறாம அதைத் திருப்பித் தந்துடணும்ங்கிற நல்ல பழக்கம் அவனுக்கு வரணும். அதுக்காக வேண்டியாவது நீங்க பணத்தை வாங்கிக்கணும்’’ என்று சொன்னதும் ஏறிட்டுப் பார்த்த தீர்த்தகிரி கவுண்டரின் கண்களில், அப்பா மீது அவருக்கு இருந்த மரியாதையும், அன்பும் தெரிந்தது. எந்தப் பல்கலைக்கழகத்திலும் சொல்லித் தராத பாடங்களை அப்பா சொல்லித் தந்தார்.   

மருத்துவக் கல்லூரியில் தாழ்வு மனப்பான்மை இன்றி, தயக்கம் தொலைந்ததில் நியாயமாக இருக்க வேண்டிய பயம் இல்லாமல் போனது.
(திருப்பங்கள் தொடரும்...)
த.செ.ஞானவேல்