‘தீயவன் எத்தனை சக்தி பெற்றவனாக இருந்தாலும் நல்லவனிடம் வீழ்வான்’ என்கிற ஆதி தத்துவம்தான். ஆனால், வில்லன்கள் ஜெயிக்கும் தீய விஷயங்களை ரசிக்க ஆரம்பித்திருக்கும் இந்தத் தலைமுறைக்குப் புரியும் விதத்தில் அதை ஹைடெக்காகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அனுபவ் சின்ஹா.
லண்டனில் ஆரம்பிக்கிறது கதை. கம்ப்யூட்டர் பிம்பங்களை நிஜத்தோற்றங்களாகவே வெளிக்கொணர்ந்து அதைத் தொட்டு உணரும் அளவில் தொழில்நுட்பப் புரட்சி செய்திருக்கும் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வீடியோ கேமை வடிவமைக்கும் வல்லுநர் ஷாருக் கான். அவரது வெள்ளந்தி குணத்தை மனைவி கரீனா கபூராலும், பத்து வயது மகனாலுமே தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், மகனின் விருப்பத்துக்காக அதிசக்தி கொண்ட ‘ரா1’ என்கிற வில்லன் கேரக்டரை வீடியோ கேமில் உருவாக்குகிறார் அவர். ‘ஜி 1’ என்கிற ஹீரோ பாத்திரத்தின் மூலம் அந்த கேமில் ‘ரா1’னுடன் விளையாட முடியும்.

அரிய சக்தி படைத்த ‘ரா 1’ ஒருகட்டத்தில் எந்தக் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் தானே தன் செயல்பாட்டை நிர்ணயித்துக் கொள்கிறது. யாராலும் தன்னை வெல்ல முடியாது என்று நம்பும் ‘ரா 1’னை இரண்டு லெவல்களில் ஷாருக்கின் மகன் ஜெயித்துவிட, அவனைக் கொல்லும் நோக்கத்தில் மேற்படி தொழில்நுட்பத்தின் மூலம் கேமிலிருந்து வெளியே வந்து அவனைத் தேட ஆரம்பிக்கிறது. ஹீரோ ‘ஜி 1’னை வெளிக்கொண்டு வந்து ‘ரா 1’னை அழிக்கும் சிறுவனின் முயற்சிதான் மீதிக்கதை.
அப்பாவியான அனிமேஷன் வல்லுநர் வேடத்திலும், பின்பாதியில் ‘ஜி 1’ என்கிற கிராபிக்ஸ் தோற்றத்திலுமாக இரண்டு பாத்திரங்களில் ஷாருக் அதீத உற்சாகத்துடன் நடித்திருக்கிறார். அப்பாவித்தனமான கேரக்டரைவிட ‘ஜி 1’ கேரக்டர் குழந்தைகளாலும் அதிகம் ரசிக்கப்படும். ஷாருக்கின் போட்டோவைப் பார்த்துத் தானும் வேட்டி கட்டிக்கொள்ள முயல்வதிலிருந்து, டிவியில் பார்த்த படம் போல கரீனாவின் பின்பக்கம் தட்டி வாழ்த்து சொல்வது வரை ‘ஜி 1’னின் விஷமத்தனங்களை படம் நெடுக ரசிக்கலாம்.
பத்து வயது மகனுக்கு அம்மாவாக வந்தாலும் கரீனாவின் வனப்புக்கு எந்தக் குறையுமில்லை. எந்தத் தோற்றத்திலும் வர முடிந்த ‘ரா 1’ கரீனாவின் தோற்றத்திலும் ஒரு கட்டத்தில் வர, அது கிளாமருக்கும் கரீனாவின் ‘வில்ல’த்தன நடிப்புக்கும் துணை போகிறது.
கதைப்படி ஹீரோ, ஷாருக்கின் மகனாக வரும் அர்மான் வர்மாதான். இன்றைய சிறுவர்களின் மனப்போக்கை அப்படியே காட்டி, நடிக்கிறான் என்ற நினைப்பே எழாமல் இயல்பாக நடித்திருக்கும் அர்மானுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
அனுபவ் சின்ஹாவின் கற்பனையை நிஜமாக்கியிருப்பதில் ஒளிப்பதிவு இயக்குநர் நிகோலா பெகோரினியும், ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டியும், கலை இயக்குநர்கள் சாபு சிரில், மார்க்காஸ் ஊக்கேவும் கவனிக்கத்தக்கவர்கள். விஷால் - சேகரின் இசையில் பாடல்கள் தாளம் போடவைக்கின்றன. கார் சேஸிங்கும், ரயில் காட்சிகளும் அசர வைக்கின்றன.
வைரமுத்துவின் பாடல்களும், ரஜினி வரும் ஒரு காட்சியும் நிஜமான தமிழ்ப்படம் போலவே நினைக்க வைக்கின்றன. ஹீரோவுக்கும், வில்லனுக்கும் ‘ஜீவன்’, ‘ராவண்’ உச்சரிப்பில் வரும் ஹைடெக் பெயர்களைத் தேர்ந்தெடுத்திருக்கும் கற்பனை பாராட்ட வைக்கிறது. கதைக்குள் வரும் முதல் அரைமணி நேரம் பொறுமை காத்தால் பிறகு ரசிக்க நிறைய இருக்கிறது படத்துக்குள்.
குங்குமம் விமர்சனக்குழு