‘அங்காடித் தெரு’வில் அசத்தலான வில்லனான இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அடுத்தடுத்து மிரட்டுவார் என்று எதிர்பார்த்தால் ‘சட்டப்படி குற்றத்’தில் மிரள வைத்ததோடு சரி. இப்போது பெஸ்ட் ரீல்ஸின் ‘பள்ளிக்கூடம் போகாமலே’ படத்தில் குணச்சித்திர வேடம் ஏற்றிருக்கிறார் அவர். இரண்டே படங்களில் வில்லன் வேடம் அலுத்துவிட்டதா..?
‘‘நிச்சயமாக இல்லை...’’ என்றவர் தொடர்ந்தார்.
‘‘இந்தப் படத்தோட டைரக்டர் பி.ஜெயசீலன், எனக்கு 15 வருஷ நண்பர். எங்களைப் போலவே டைரக்டர் ஆகிற ஆசைல வந்தவருக்கு புரடக்ஷன் யூனிட் வாசலைத் திறக்கவே புரடக்ஷன் எக்ஸிக்யூடிவ்வா மாறிட்டார். நான் டைரக்டராகிறதுக்கு ஒரு காரணமா அமைஞ்சவர். அதுபோலவே இன்னும் பலரையும் உரிய இடத்தில அடையாளம் காண்பிச்சு, அவங்க டைரக்டராக உதவியவர். புரடக்ஷன்ல இருந்தாலும் எங்களோட ஸ்டோரி டிஸ்கஷன்கள்ல கலந்துக்கிட்டு ஒரு அஸிஸ்டன்ட் டைரக்டராவே செயல்படுவார்.
அப்படிப்பட்ட அனுபவம் உள்ள அவர் திடீர்னு ஒருநாள் கூப்பிட்டு, தான் டைரக்டராகிற விஷயத்தைச் சொல்லி, ‘இந்தப் படத்தில நீங்களும் இருக்கீங்க. பிளஸ் 2 படிக்கிற பையனுக்கு அப்பாவா...’ன்னார். அப்பாவா நடிக்க எனக்கு விருப்பமில்லாம இருந்தது. ஏதோ காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கலாம்னு கதை கேட்டேன். கேட்டு முடிச்சதும் உண்மையிலேயே அழுதேன். எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கேன். ஆனா கேட்டதும் கண்கலங்கிய முதல் கதை இதுதான்.
முதல் விஷயம், இந்தப்படத்தோட கதை கல்வி சம்பந்தப்பட்டது. இன்றைய மாணவர்களோட நிலையையும், நெருக்கடியையும் அழகா எடுத்துச் சொல்ற லைன். இப்படிப்பட்ட ஸ்கிரிப்ட்டுகளை மலையாளத்துல அடிக்கடி பார்க்கலாம். ஆனா தமிழ்ல ‘பூவே பூச்சூடவா’, ‘பூ விழி வாசலிலே’ன்னு எப்பவோ வரும். ரொம்ப காலம் கழிச்சு தமிழ்ல வரவிருக்க அப்படிப்பட்ட படம் இது. இங்கே மொத்த மக்கள் தொகையில நடுத்தர வர்க்கம் அதிகமா இருக்கு. பட்ஜெட்லயே ஓடற தங்களோட வாழ்க்கை அடுத்த தலைமுறைக்கும் தொடராம, அவங்க நல்லா படிச்சு மேல் நிலைக்கு வரணும்னு ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்து அப்பாவும் நினைக்கிறார். அப்படி ஒரு அப்பாவா நான் வர்றேன்.

இந்தப்பட ஷூட்டிங்னா, நான் நாலு நாளைக்கு முன்னாலேயே ஷேவ் பண்ணக்கூடாது. தலையில எண்ணெய் தேய்ச்சுக்கக் கூடாது. அயர்ன் பண்ணாத சட்டை, தேய்ஞ்ச செருப்பு... இதுதான் கெட்டப். ஏன்னா கால் டாக்ஸி டிரைவரா இதுல வர்றேன். இந்த நெருக்கடியில மகனைப் படிக்கச் சொல்ற என்னோட போராட்டமும், மகனோட சூழல்ல அவனுக்கு இருக்கிற நெருக்கடிகளும் சேர்ந்து முரண்பாட்டை ஏற்படுத்த, கடைசியில விரும்பியது நடந்ததாங்கிற கிளைமாக்ஸ். என் மகனா நடிச்சிருக்க தேஜாஸ், மலையாள வில்லன் நடிகர் அலெக்ஸோட மகன். ரத்தத்திலேயே நடிப்பு இருக்கிறதாலயோ என்னவோ... அற்புதமா நடிச்சிருக்கார். ஐஸ்வர்யா கிருஷ்ணன் ஹீரோயினாகியிருக்க படத்துல காதல் கிடையாதுங்கிறது இன்னொரு ஹைலைட். எனக்கு ஜோடியா தேவதர்ஷினி நடிச்சிருக்காங்க.
‘அழகன் அழகி’, ‘பாகன்’, ‘இரவும் பகலும்’ படங்கள்ல நீங்க கேட்ட வில்லனா, காமெடி போலீஸாவெல்லாம் நடிச்சுக்கிட்டிருக்கேன். அதுல இந்தப்பட கேரக்டர், மனசில நிற்கக்கூடிய அற்புதமான குணச்சித்திர வேடம்ங்கிறது நடிகனா எனக்குப் பெருமை சேர்க்கக் கூடியதுதான்..!’’
ஜி