இன்னும் 25 ஆண்டுகளில், நாம் உணவுக்காக செலவிடும் தொகையில் பாதி தண்ணீருக்கானதாக மட்டுமே இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்போதே அந்த விபரீதத்தை உணர முடிகிறது. கேன் வாட்டர் இல்லாத நகரத்து வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 2 கோடி லிட்டர் தண்ணீர் விற்பனை ஆகிறது. இதற்காக பல ஆயிரம் அடிகள் பூமியைக் குத்திக் குதறுகிறார்கள். 1 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்க 4 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இப்படி கட்டுப்பாடே இல்லாமல் தண்ணீரை வீணடித்தால், ஒரு கட்டத்தில் பூமி தன் சுரப்பிகளை மூடிக்கொள்ளும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். என்னதான் மாற்று வழி..? பூமியைத் தோண்டாமல் தண்ணீர் கிடைக்குமா..?
‘‘கிடைக்கும்...’’ என்கிறார்கள் ஷ்யாம் சுந்தரும், அவரது மாமா டாக்டர் சிவகுமாரும். வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் அந்த கற்பனைக்குச் செயல்வடிவமும் கொடுத்திருக்கிறார்கள். அதுதான் ஆகாஷகங்கா!
இயற்கையைச் சிதைக்காமல், நிலத்தை காயப்படுத்தாமல் தரமான குடிநீரை வழங்கும் வாட்டர் பியூரிஃபையர்தான் ‘ஆகாஷகங்கா’. எளிமையாகச் சொன்னால், தண்ணீரே இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் இயந்திரம்!
மேஜிக் மாதிரி இருக்கிறதா? லாஜிக் வெரி சிம்பிள்!‘‘பூமிக்குக் கீழே மட்டும்தான் தண்ணீர் இருக்கறதா நாம நினைக்கிறோம். காற்றிலயும் ஏகப்பட்ட ஈரப்பதம் இருக்கு. மழை வர்றதுக்கு முன்னாடியும், வந்த பிறகும் உடம்பு நசநசன்னு வியர்க்கும். அதுக்கு அந்த ஈரப்பதம் தான் காரணம். அந்த ஈரப்பதத்தை ஈர்த்து, தண்ணீரா மாத்தும் டெக்னாலஜிதான் இது’’ என்று வியக்க வைக்கிறார் ஷ்யாம்.

ஷ்யாமின் பூர்வீகம் திண்ணியம். டாக்டர் சிவகுமார் சென்னை பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். இருவரும் சேர்ந்து, பல்வேறு தடைகளைத் தாண்டி
ஆகாஷகங்காவை உருவாக்கியுள்ளார்கள்.
‘‘2004ல சென்னையில தண்ணீர் பிரச்னை இருந்துச்சு. ஒருநாள் பேசிக்கிட்டிருந்தப்போ, ‘ஆகாயத்துல இவ்வளவு தண்ணீரை வச்சுக்கிட்டு, பூமியில தண்ணி கிடைக்காம அலையுறோமே’ன்னு மாமா சொன்னார். அந்த வார்த்தைகள்தான் ஆகாஷகங்கா உருவாக காரணம். ஒருசில வெளிநாடுகள்ல காற்றை குளிரவச்சு தண்ணீர் தயாரிக்கிறாங்க. அதைவிட அட்வான்ஸா ஒரு பியூரி
ஃபையரை உருவாக்கணும்னு முனைப்பா செயல்ல இறங்குனோம். இதுக்காகவே மாமா விருப்ப ஓய்வு பெற்றார். முதல்ல 50 மெஷின் தயாரிச்சு தெரிஞ்சவங்களுக்குக் கொடுத்தோம்.
ஒவ்வொரு மெஷினும் ஒரு லேப் மாதிரி இருக்கும். தொடர்ந்து 4 வருஷம் அந்த மெஷினோட செயல்பாட்டை கண்காணிச்சோம். பல கிராமங்களுக்கு இந்த மெஷினை இலவசமாக் கொடுத்து செயல்பாட்டைச் சோதிச்சோம். அடுத்து துபாய் மாதிரி வெயில் தேசங்கள்ல கொண்டு போய் சோதிச்சுப் பாத்தோம். எல்லாமே சக்சஸ். கிடைக்கிற தண்ணீரோட மாதிரியை எடுத்து பல லேப்களில் சோதனைக்கு உட்படுத்தினோம். மிகத்தரமான தண்ணீர்னு சான்றிதழ் கொடுத்தாங்க. இப்போ 5 மாடல்கள்ல இயந்திரத்தை உருவாக்கி மார்க்கெட் பண்ணப் போறோம்’’ என்கிறார் ஷ்யாம்.
தினம் 14 முதல் 165 லிட்டர் வரை தண்ணீர் தரும் வகையில் இந்த இயந்திரங்கள் உருவாக்க ப்பட்டுள்ளன. சுடும் வெயில், கடும் மழை என எல்லா தட்ப வெப்பத்திலும் இயங்கும். பெரிய ஃப்ளாட்டுகள், ஊராட்சிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் மாடல்களை வடித்திருக்கிறார்கள். சில மாடல்களை ஏசி ஆகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உள்ளே உள்ள ஃபேன் வெளிக்காற்றை ஈர்க்கிறது. இடையில் ஒரு ஏர் ஃபில்டர், காற்றில் உள்ள தூசிகளை வடிகட்டுகிறது. அடுத்து ஒரு காயில். காற்று அந்தக் காயிலில் மோதியதும் குளிர்ந்து நீராகிவிடுகிறது. அடுத்தடுத்து தண்ணீருக்கு 2 லெவல் ஃபில்ட்ரேஷன். 1 மைக்ரான் அளவுள்ள தூசிகள் கூட தேங்கிவிடுமாம். பின், தண்ணீர் ஒரு கண்டெய்னரில் சேகரிக்கப்படும். கண்டெய்னர் நிரம்பியதும் மெஷின் தானாக நின்று விடும்.
‘‘தண்ணீரால ஏற்படுற நோய்களுக்கு ஈகோலி, கோலிபார்ம், ஃபீகால் கோலிபார்ம் போன்ற கிருமிகள்தான் காரணம். இந்த கிருமிகள் நிலத்து நீர்லதான் வளரும். ‘ஆகாஷகங்கா’ நீர்ல எந்தக் கிருமிகளும் இருக்காது. டேஸ்ட்டும் நல்லா இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. காற்று இருக்கிற வரைக்கும் ஈரப்பதமும் இருக்கும். தண்ணீர் பிரச்னைக்கு இது மிகச்சிறந்த தீர்வு’’ என்கிறார் ஷ்யாம்.
செலவு?‘‘ஒரு லிட்டர் தண்ணீருக்கான மின்செலவு ரூ.1.20 முதல் 1.50 வரை. அதிக பராமரிப்பு தேவையில்லை. குறைந்தது 10 வருடங்கள் சிறப்பாக இயங்கும். கேன் வாட்டர்களோடு ஒப்பிடும்போது மிகப்பெரும் சேமிப்பு. நாளொன்றுக்கு 40 லிட்டர் தரக்கூடிய இயந்திரம் 30 ஆயிரம் ரூபாய். 165 லிட்டர் தரும் இயந்திரம் 94 ஆயிரம் ரூபாய். காலப்போக்கில் விலை குறைய வாய்ப்புண்டு’’ என்கிறார் ஷ்யாம்.
வெ.நீலகண்டன்
படங்கள்:ஆர்.சந்திரசேகர்