உலகின் மிகப் பணக்கார கிராமம்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                 வாழ வழியற்றுப் போவதாலும், பிழைப்பு கிடைக்காததாலும், வசதிகள் இல்லாததாலும் கிராமங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நகரங்களை நாடி வருவது உலகம் முழுக்க பொதுவான விதி. இந்த நகர்மயமாதலின் விளைவாக சென்னை போன்ற பெருநகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. பிளாட்பாரத்தில் கிடந்தாவது நகரத்தில் பிழைக்கலாம் என வருபவர்கள் உண்டு.

ஆனால் ‘ஒரு கிராமம் கூட்டு முயற்சி எடுத்தால், நகரங்களில் இருப்பவர்கள்கூட வேலை தேடி அங்கு ஓடிவருவார்கள்’ என்பதற்கு உதாரணமாக இருக்கிறது ஒரு சீன கிராமம். 2 ஆயிரம் பேர்கூட வசிக்காத ஒரு குக்கிராமத்துக்கு வந்து தங்கி 20 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், அந்த கிராமத்தின் சாதனையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

சீனாவின் ஜியாங்ஸு மாகாணத்தில் இருக்கிறது ஹுவாக்ஸி கிராமம். கடந்த 1961ம் ஆண்டு ஆரம்பித்து, ஐம்பது ஆண்டுகளில் இந்த கிராமத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், ‘வானத்துக்குக் கீழே இருக்கும் கிராமங்களில் நம்பர் ஒன் கிராமம்’ என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த கிராமத்தின் மாற்றங்களுக்கு சில நாட்களுக்குமுன்பு பொன்விழா கொண்டாடப்பட்டது. அப்போது 328 மீட்டர் உயரமுள்ள பிரமாண்ட ஹோட்டல் இங்கு திறக்கப்பட்டது. உலகின் டாப் 15 உயரக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. ஒரு கிராமத்தில் இப்படி ஒரு வானுயர்ந்த கட்டிடம் வருவதற்குக் காரணம், வூ ரென்போ என்ற மனிதர்.

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள்தான் கிராமங்களையும் நகரங்களையும் நிர்வகிக்கிறார்கள். அப்படி இந்த கிராமத்தின் நிர்வாகிதான் வூ. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை மாட்டு வண்டிகளும் குடிசைகளுமாக லோக்கல் வரைபடத்தில்கூட இடம்பிடிக்கத் தகுதியில்லாத கிராமமாக இருந்தது ஹுவாக்ஸி. வூ ரென்போ இதை மாற்றியமைத்தார்.
வெறும் விவசாயம் மட்டுமே போதாது என்பதை உணர்ந்த அவர், கிராமக் கமிட்டி சார்பில் தொழிற்சாலைகள் உருவாக்கினார். கிராமமே அவர் பின்னால் இருந்தது. விவசாயத்தோடு தொடர்புடைய தொழில்கள், பிறகு ஸ்டீல் தொழிற்சாலை, அதன் தொடர்ச்சியாக ஜவுளித் தொழிற்சாலை என வளர்ச்சிகள் வந்தன. எல்லாவற்றுக்கும் கிராம மக்கள் எல்லோருமே முதலாளிகள்; தொழிலாளிகளும் அவர்கள்தான். ‘வளர்ச்சி தேவை என்றால் லீவ் எடுக்காமல் உழைக்க வேண்டும்’ என கிராமமே முடிவெடுத்தது. இன்றுவரை இங்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை நாட்கள்தான்!

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஒவ்வொரு வருஷ முடிவிலும் எவ்வளவு லாபம் வந்திருக்கிறது என்று கணக்கு பார்க்கிறார்கள். அதில் ஐந்தில் ஒரு பங்கை கிராம மக்கள் பிரித்து எடுத்துக்கொள்கிறார்கள். மீதி நான்கு பங்கு திரும்பவும் தொழில்களில் முதலீடாகிவிடுகிறது.

இப்படியாக ஐம்பது வருடங்களில் இந்த கிராம மக்களின் முதலீடு ஆயிரத்து 300 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. சீன பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகி இருக்கிறது இந்த கிராம மக்களின் கூட்டு நிறுவனம். ஒரு காலத்தில் சைக்கிள்கூட சொந்தமாக வைத்தில்லாத இந்த கிராம மக்கள், சமீபத்தில் கப்பல் போக்குவரத்து நிறுவனம் தொடங்கி இருக்கிறார்கள். சீக்கிரமே விமான நிறுவனம் தொடங்கும் உத்தேசம் இருக்கிறதாம்.

ஹுவாக்ஸி கிராமத்தில் இப்போது 2 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிராம கமிட்டியே சகல வசதிகளோடு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது. 18 வயதைத் தாண்டிய எல்லோருக்கும் கார்கள் உண்டு. மருத்துவம், கல்வியில் ஆரம்பித்து, வீட்டுக்கு சமையல் எண்ணெய் வரை எல்லாவற்றையும் கிராமக் கமிட்டி தந்துவிடும். பக்கத்து நகரத்துக்குப் போனால்தான் நல்ல ஆஸ்பத்திரி, நல்ல ஸ்கூல் என்ற கதை இங்கு இல்லை. உலகின் மிகத் தரமான பள்ளியும் மருத்துவமனையும் இந்தச் சின்ன கிராமத்தில் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 60 லட்சம் ரூபாயாவது சேமிப்பு கைவசம் இருக்கும். ‘ஏழை’ என்ற அடையாளத்தோடு யாரையும் இந்த கிராமத்தில் பார்க்க முடியாது. 

ஒருநாள் கூட ஓய்வின்றி உழைத்தாலும், அவ்வப்போது குடும்பத்தோடு பொழுதுபோக்க சிறந்த பூங்காக்களையும் ஊரில் கட்டி வைத்திரு க்கிறார்கள். தாஜ்மகால், எகிப்தின் பிரமிடு என உலக அதிசயங்களின் மாதிரி வடிவங்களைக் கொண்ட தீம் பார்க் இங்கு ஸ்பெஷல்.

இந்த கிராமத்தின் செழிப்பு எல்லோரையும் வசீகரிக்க, இப்போது அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்தும், தொலைதூர நகரங்களிலிருந்தும் பலர் வேலை தேடி வருகிறார்கள். இப்படி சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்திருக்கிறது கிராமம். இந்த கிராமத்தின் வெற்றிக் கதையை நேரில் பார்க்க, உலகெங்கிலுமிருந்து வருஷத்துக்கு 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகிறார்கள்.

‘நவீன சோஷலிஸ கிராமம்’ என்ற பெருமையோடு உலகையே அண்ணாந்து பார்க்க வைத்த இந்த வெற்றிக்கதைக்குப் பின்னால் உழைப்பும் கூட்டு முயற்சியும் மட்டுமே இருக்கிறது. இந்தியாவிலும் ஏராளம் கிராமங்கள் இருக்கின்றன. யாராவது முயற்சி செய்து பார்க்கலாமே!
அகஸ்டஸ்