இலையில் விழுந்த பட்ஜெட்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            கணக்கு கனகசபேசன் என்றொரு பள்ளி நண்பன் எனக்கு உண்டு. படிக்கிற காலத்திலே அவன்தான் வகுப்பிலேயே கணக்கில் புலி, சிறுத்தை எல்லாமும்.

அவனுக்கு அடுத்த இடத்திலேயே ‘டெஸ்க்மேட்’டாக உட்கார்ந்திருந்ததால், வகுப்புப் பரீட்சை நேரம் சில உதவிகளை நான் அடைய முடிந்ததை மறுப்பதற்கில்லை. பள்ளிப்பருவம் முடிந்து வருஷங்கள் பல ஓடியாயிற்று. எப்போதாவது அபூர்வமாக சந்தித்துக் கொள்வோம். நான் கடலூரில்... அவன் சென்னையில்!

‘லயோலாவில் என் பிள்ளைக்கு அட்மிஷன் கிடைக்குமா’ என்று மோப்பம் பிடிக்க சென்னை வந்தபோது கணக்கு கனகசபேசன் வீட்டுக்குப் போய் எட்டிப் பார்த்துவிடலாமெனத் தோன்றியது. கல்லூரி அட்மிஷன் நேரம் எந்தத் திக்கிலிருந்து என்ன உபகாரம் கிடைக்குமோ என்று அலையத்தானே வேண்டியிருக்கிறது.

போன் செய்தேன். வழக்கம்போல, ‘‘வாயேண்டா வீட்டுக்கு’’ என்று அழைத்தான்.

‘‘வந்தே விடறேண்டா’’ என்று வாக்குக் கொடுத்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அவன் வீட்டில் போய் இறங்கியாயிற்று.

கணக்கு கனகசபேசன் கேட்ட முதல் கேள்வி... ‘‘ஆட்டோவிலா வந்தே?’’ என்பதுதான்.

‘‘ஆமாம்.’’

‘‘எவ்வளவு தந்தே?’’ என்றான்.

‘‘அறுபது ரூபாய்.’’

‘‘அநியாயம்டா... ஷேர் ஆட்டோவில் வந்திருக்கலாமே...’’ என்றான்.

‘‘தெரியலை’’ என்றேன்.

‘‘பத்து ரூபாயோடு போகிற சமாசாரத்துக்கு அறுபது தந்திருக்கிறே. சரி, ஸ்டேஷன்ல இறங்கியதும் காப்பி கீப்பி சாப்பிட்டியா என்ன? அதுக்கப்புறம் இரண்டாம் காப்பி சாப்பிடற வழக்கம் உண்டா?’’

‘‘இல்லை’’ என்றேன்.

‘‘ரொம்ப நல்லதாப் போச்சு! சரி, நீ குளிச்சிட்டு டிபனா? டிபன் சாப்பிட்டுட்டு குளியலா? இல்லே... சமையல் சூடா ஆகிண்டிருக்கு. டைரக்டா சாப்பிட்டுக்கிறாயா?’’

‘‘நீ எப்படி?’’

‘‘நான் நேரா சாப்பாடு!’’

‘‘அப்படியே நானும்’’ என்று சொல்லி வைத்தேன். வயிற்றிலே பசி என்றாலும், இப்படிக் கேட்கும்போது அதை சொல்லிக்கொள்ள முடியவில்லை.

‘‘சரி, நான் மார்க்கெட் போய் இலை வாங்கிண்டு வந்துடறேன். நுனி இலை என்ன விலை என்கிறே! நம்பமாட்டே... அஞ்சு ரூபா!’’

‘‘ரொம்ப பெரிசோ?’’

‘‘நீ ஒண்ணு... மூணு சாணுக்கு கொஞ்சம் குறைவாகவே இருக்கும்!’’

‘‘சிட்டியோல்லியோ... அதான்!’’

‘‘அங்கெல்லாம் எப்படி? உங்க வீட்டுலேயே வாழை மரம் இருக்கும்.’’

‘‘ஆமாம். ரெண்டு வெச்சிருக்கேன்.’’

‘‘ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஏற்பாடு. டபால் டபால்னு அறுத்துக்கலாம். இங்கே சகலத்துக்கும் காசு. கோவைக் காய் நேற்று வாங்கிண்டு வந்தேன். அது கெட்டகேடு, கிலோ முப்பது ரூபாய். கெஸ்ட் கிஸ்ட் வரலைன்னா... உங்கிட்ட சொல்றதுக்கென்ன, ஒரு அப்பளத்தை கிழிச்சுப் போட்டு வத்தக்கொழம்புதான் எனக்கும் இவளுக்கும். அப்பளம் மட்டும் என்ன... ஒரு அப்பளம் ஒரு ரூபாய். சரி, நீ போய் குளிச்சிட்டு வந்துடேன். சோப்பு கீப்பு வேணுமா?’’

‘‘நான் சோப்பு தேய்ச்சிக்கிற வழக்கமில்லை.’’

‘‘என்ன தேய்ச்சிக் குளிப்பே?’’

‘‘கடலை மாவுதான்...’’

‘‘என்னப்பா நீ? எந்த உலகத்திலே வாழ்ந்துண்டு இருக்கே. கடலைப் பருப்பு கிலோ அறுபது ரூபாய். மளிகைக் கடைப் பக்கமே நீ போனதில்லையா?’’

‘‘அப்படியா! எல்லாம் லலிதாவோட டிபார்ட்மெண்ட். கடலைப்பருப்பு அத்தனை விலையா?’’

‘‘அதை வாங்கி அரைத்துத்தான் கடலைமாவு பண்ணுகிறோம். கடையிலே ஒரு பிளேட் பஜ்ஜி நாலு வைத்து தருகிறான் முப்பது ரூபாய். நாங்க குளிக்கறதுக்கு கடலை மாவு யூஸ் பண்ணுறதே இல்லை.’’

‘‘நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன்.’’

‘‘சரி, நான் போய் இலை வாங்கி வந்துடறேன்.’’

குளித்துவிட்டு இலைக்காகக் காத்திருந்தேன். நண்பரின் மனைவி... ‘‘அவர் வரும் வரை பேப்பர் படிக்கலாமே. இதோ வாங்கி வந்துவிடுறேன்’’ என்று கிளம்பினார்.

அடுத்த வீட்டுக்குப் போய் அம்மையார் பேப்பர் வாங்கி வந்து தந்தார்.

ஒரு பின்குறிப்பாக, ‘‘நாங்க பேப்பரே வாங்கறதில்லை. எதிர்வீட்டுக்காரர்தான் வாங்கறார். படிச்சிட்டு எங்களுக்குத் தருவார். ஆளுக்குப் பாதி போட்டுக்குவோம்’’ என்றார்.

நான் நினைத்துக்கொண்டேன்... ‘எல்லாம் சரி. பழைய பேப்பர் யாருக்கு சொந்தம்?’ நான் அவனை கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.


சாப்பிட இலை போட்டாயிற்று. என்னைக் கவர்ந்த அயிட்டம் உருளைக்கிழங்கு சிப்ஸ்.

‘‘சிப்ஸ் பிரமாதம்’’ என்று புகழ்ந்தேன்.

‘‘கடையிலே நூறு கிராம் பதினெட்டு ரூபாய். அநியாய விலை. ஆனா, அதுதான் நமக்கு ஒரு வகையிலே மலிவு. வீட்டிலே பண்ணினோம்னா ஒரு கிலோ உருளைக்கிழங்கு முப்பது ரூபாய். எண்ணெய் அரை கிலோ அறுபது ரூபாய். அப்புறம் கேஸ் கீஸ் என்று கணக்குப் பார்த்தால் ஒரு சிப்ஸ் ஒரு ரூபாய் ஆயிடறது. உனக்கு போட்டதிலே எட்டு சிப்ஸ் இருந்தது. எட்டு ரூபாய் ஆயிடறது.’’

எனக்கு சிப்ஸ் தின்பதற்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

நண்பன் தொடர்ந்தான்... ‘‘சிப்ஸ் ஒரு கிலோவா செய்து வைத்துவிட்டால் பத்து நாள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம்தான். ஆனா, சிப்ஸ் குறையக் குறைய ஸ்டாக்கின் மதிப்பும் குறைகிறது. பத்து நாளில் எந்த இன்ட்ரஸ்ட்டும் தராமல் நம்ம நூறு ரூபாய் முதலீடு அழிந்து போய் விடுகிறது. எந்த முதலீட்டையும் வளர விடணுமே தவிர, டிமினிஷ் ஆக விடக்கூடாது. தின்னுவதற்கு செலவழித்தாலும் வேறு எதற்கு செலவழித்தாலும் லாபகரமாக இருக்கவேண்டும். பழைய காலத்தில் விருந்தாளிகளுக்கு ஆசார உபசாரம் செய்வார்கள். அவர்களுடைய வயிறும் மனசும் குளிர்வதற்குத்தான். அவர்கள் போகிறபோது சும்மா போய்விடுவார்களா? ஐம்பது நூறு என்று குழந்தைகள் கையில் கொடுத்துவிட்டுப் போவார்கள்...’’

‘‘நீ சொன்னது ரொம்ப சரி. நம்ம பெரியவங்க எதையுமே ஆராய்ச்சி பண்ணி நல்லதே நடக்கிற மாதிரி சம்பிரதாயங்களை ஏற்படுத்தி இருக்காங்க’’ என்று அவன் கருத்துகளை ஆமோதித்தேன்.

மறுநாள் அவன் வீட்டிலிருந்து புறப்படும்போது ஞாபகமாக அவன் வீட்டுக் குழந்தைகள் இரண்டு பேர் கையிலும் ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன்.
அவர்கள் வீட்டில் ஒரு டிபனும் ஒரு சாப்பாடும் சாப்பிட்டிருக்கிறேன்.

இருநூறு ரூபாய் சரிதானே!

யார் வீட்டுக்கு சாப்பிடப் போனாலும் ஓசியிலே கிடைத்தது என்று மகிழ்ந்து விடாமல், போகிறபோதே அந்த வீட்டுக்கு பழங்களோ பிஸ்கட்டோ தாராளமாக வாங்கிப்போவது நல்ல வழக்கம். அதே போல, புறப்படுகிறபோது ஏதாவது சின்ன பிரசன்ட்... ‘உங்களுக்குன்னு வாங்கி வந்தேன்’ என்று கொடுத்துவிட்டு வந்தால் கௌரவமாக இருக்கும்!
(சிந்திப்போம்)
பாக்கியம் ராமசாமி