காலரா இறப்பைத் தடுக்க இஸ்லாமியர் கண்டுபிடித்த பானம் இது...



100 ஆண்டுகள் கடந்து கோடைக்காலத்தை குளிர்விக்கும் இந்திய சிரப்!

இந்தியாவின் கோடை வெப்பத்துக்கு நூற்றாண்டு வரலாறு உண்டு. பிரித்தானியர் நம்மை ஆண்டுகொண்டிருந்த 1900ம் ஆண்டுகளில் பழைய தில்லியில் கோடை வெப்பம் மக்களை காலரா வடிவில் வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. மக்கள் வாந்தியாலும் பேதியாலும் மடிந்துகொண்டிருந்தார்கள். 
ஆங்கிலேய அரசு கையைப் பிசைந்துகொண்டிருந்தது. என்ன செய்யலாம் என்று நினைத்த அரசு அன்றைக்கு தில்லியில் இருந்த புகழ்பெற்ற முஸ்லிம் மருத்துவர் ஒருவரை அழைத்து, வாந்தி பேதியால் ஏற்படும் நீரிழப்பையும், அதனால் ஏற்படும் மரணங்களையும் தடுக்கமுடியுமா என்று ஆலோசனை கேட்டது.

அந்த மருத்துவரும் தன் மருத்துவ அனுபவத்தில் ஒரு பானத்தைத் தயாரித்துக் கொடுத்தார். அந்த பானத்தின் பெயர் ரூஹ் அஃப்சா (Rooh Hafza). ரூஹ் அஃப்சா பானம் காலராவின் தீவிரத்தைக் குறைத்ததோடு பின்வந்த காலங்களில் கோடை வெப்பத்தால் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கும் பானமாகவும் பிரபலமலடைந்தது. 
காலங்கள் செல்லச் செல்ல சகலவிதமான விசேஷங்களிலும் அருந்தும் பானமாக ரூஹ் அஃப்சா களை கட்டியது. மக்களின் வரவேற்பை புரிந்துகொண்ட மருத்துவர், அரசு சம்மதத்துடன் அந்த பானத்தை பெரிய அளவுக்கு தயாரித்து வழங்கினார்.

ஆனால், இந்திய பிரிவினை, பாகிஸ்தான் உருவாக்கம் போன்ற நிகழ்வுகளால் மருத்துவரின் இருமகன்களில் ஒருவர் இந்தியாவிலும், இன்னொருவர் பாகிஸ்தானிலும் குடியேற... அந்த பானம் இருநாடுகளிலும் தயாரிக்கப்பட்டு இருநாடுகளிலும் சக்கை போடு போட்டது. இன்று இந்தியாவில் இந்த பானத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ‘ஹம்டார்ட் லேபரிட்டரிஸ் இண்டியா’ (Hamdard Laboratories India). இன்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்த பானம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பானம் அப்படியே அருந்தக் கூடியதல்ல. இது ஒரு சர்பத் தயாரிப்பதற்கான ஓர் இனிப்பு வடிச்சாறு (ஸ்குவாஷ்). இனிப்புடன் இயற்கையாக விளைந்த மருத்துவ மூலிகைகள், பழங்கள், தாவரங்கள் என கலந்து கட்டியது இந்த உணவுச் சாறு (சிரப்). சுமார் 117 வருட பழமையான இந்த பானத்தின் மகிமை தெரியாதவர்கள்கூட இதை சில விசேஷங்களுக்காக மட்டுமே அருந்தும் நிலையில் மாற்று மருத்துவக் கடைகளை நாடெங்கும் தொடங்கியிருக்கும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் அண்மையப் பதிவு இந்த பானத்தின் பிரபலத்தை உயர்த்தியிருக்கிறது.

‘சர்பத் பெயரில் சதி செய்யும் சில நிறுவனங்களால் மசூதிகளும், மதராசாக்களும்தான் வளரும்’ என்று அவர் பேசிய வீடியோ, மறைமுகமாக ரூஹ் அஃப்சாவை குறிவைக்க... இந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தையும் எட்டியது.

நீதிமன்றம் அந்த சாமியாரின் குறிப்பிட்ட அந்த வீடியோவை நீக்கச் சொல்லி தீர்ப்பு வழங்கவே இந்த பானம் இந்தியாவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. சென்னையிலும் இந்த பானம் பல சூப்பர் மார்க்கட்டுகளிலும் மளிகைக் கடைகளிலும் கிடைக்கிறது.

இந்நிலையில் இந்த பானத்தின் வரலாறு, முக்கியத்துவம், பலன்கள் பற்றி அது தொடர்பான ஆர்வலர்களை பிடித்துப் பேசினோம். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்தா மருத்துவமனையின் கீழ் வரும் யுனானி மருத்துவத் துறையின் மருத்துவரான ரிஸ்வான் உற்சாகமாக பேசத் தொடங்கினார்.

‘‘1904ம் ஆண்டு மற்றும் அதன் பிறகான காலத்தில் தில்லியில் காலரா பரவியதைத் தொடர்ந்து யுனானி மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவரான ஹக்கீம் ஹஃபீஸ் அப்துல் மஜீத் என்பவரை ஆங்கிலேய அரசு சந்தித்து அந்த நோயைக் கட்டுப்படுத்தக் கேட்டுக்கொண்டது.

மஜீத்தும் தன் மருத்துவ அனுபவத்தைக் கொண்டு இந்த சிரப்பைஉருவாக்கினார். அந்த இனிப்பு சிரப் இயற்கையான மருத்துவ மூலிகைகள், பழங்கள், பூக்கள் மற்றும் காய்களில் இருந்து தயாரிக்கப்பட்டது. 

காலராவால் பாதிக்கப்படுபவர்கள் வாந்தி மற்றும் பேதியால் பெரும் நீரிழப்புக்கு உள்ளாவார்கள். இந்த நீரிழப்பைப் போக்குவதற்கே இந்த பானத்தை மஜீத் கண்டுபிடித்தார். ஆனால், போகப் போக கோடை வெப்பத்தாலும் நீரிழப்பு ஏற்படவே இந்த பானத்தின் தேவையும் பயன்பாடும் பிறகான காலத்திலும் உணரப்பட்டது.

இந்த சிரப்பில் 87 சதவீதம் சர்க்கரை இருப்பதால் சர்க்கரை நோய் இருப்பவர்கள் அருந்துவதில் கவனம் தேவை. ஆனால், நீரிழப்பால் முதலில் சர்க்கரையின் அளவு குறையும். ஆகவே வெப்ப காலத்தில் வியர்வையால் சர்க்கரையின் அளவு குறைபவர்கள் இந்த சிரப்பைக் தண்ணீரிலோ அல்லது பால் போன்ற பொருட்களிலோ கலந்து குடிப்பது சக்தியையும் உற்சாகத்தையும் தரும்...’’ என்கிறார் ரிஸ்வான்.இந்த ரூஹ் அஃப்சா பானம் இன்று பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் பெயரில் போலிகளும் நடமாடுகின்றன.

ஒரிஜினல் பானம் 750 மில்லி லிட்டரில் அதாவது முக்கால் லிட்டரில் விற்பனைக்கு கிடைக்கிறது. போலிகளை கண்டுபிடிக்க இந்த ஒரிஜினல் பானத்தின் மூடியில் ‘ஹம்டார்ட்’ என்ற எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன. 

இந்த பானத்தின் பாட்டில்களில் பானத்தில் என்ன வகையான பொருட்கள் இருக்கிறது என்ற குறிப்பும் இருக்கிறது. உதாரணமாக இந்த இனிப்பு சிரப்பில் மல்லி, கசகசா, ரோஜா, காசினி கீரை, புதினா, கேரட், திராட்சை, தாழம்பூ, அன்னாசி, ஆரஞ்சு போன்ற இன்னும் சில உணவுப் பொருட்கள் இருப்பதாக குறிப்பு உள்ளது.

சென்னையில் பல பெரிய சூப்பர் மார்க் கெட்டுகளில் இந்த பானத்தை வடநாட்டிலிருந்து நேரடியாகவே கொள்முதல் செய்கிறார்கள். சென்னையில் உள்ள சில்லறைக் கடைகள் மற்றும் தனிப்பட்ட நுகர்வோருக்கு இந்த பானத்தை விற்கும் ஒரே கடையான திருவல்லிக்கேணியில் உள்ள குர்ஸீத் தாவகானா யுனானி மருந்துக் கடையின் உரிமையாளரான கயாஸ் அகமத் பேக்கிடம் பேசினோம்.‘‘1968ல் இந்த மருந்துக் கடையை என் அப்பா நடத்தினார். நான் சிறுவனாக இருந்தபோதே இந்த பானத்தை விரும்பி அருந்தியிருக்கிறேன். அப்போது கண்ணாடி பாட்டில்களில் வரும். விலை கூட அப்போது 5 ரூபாய்க்கு கிடைத்தது.

ஒருகாலத்தில் காலராவுக்கு சிறந்தது என்றிருந்த இந்த பானம் பிறகு காலராவால் ஏற்பட்ட நீரிழப்பு என்ற காரணத்துக்காக கோடை காலத்திலும் விரும்பி அருந்தப்பட்டது.
இன்று கோடைக்காலம் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களிடையே ரம்ஜான் நோன்பு மற்றும் திருமணம் போன்ற விசேஷகாலங்களிலும் இந்த பானம் பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமியர்கள் தவிர்த்தும் இந்த பானத்துக்கு நல்ல வர வேற்பு உண்டு. இந்த பானத்தின் இயற்கையான தயாரிப்பால் அதே கோடையால் எழும் அல்சர், குடல் புண் நோய் போன்றவற்றுக்கும் இந்த பானம் சிறந்த மருந்து என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இதனால் சென்னை போன்ற பெரிய நகரில் உணவகங்களிலும் வீடுகளிலும் இந்த பானத்துக்கு ஒரு மவுசு உண்டு. ‘ரூஹ் அஃப்சா’ என்ற உருது வார்த்தைக்கு அர்த்தம் ‘ஆன்ம புத்துணர்ச்சி’. இந்தப் பெயருக்கு ஏற்ற இந்த பானத்தை பால், தயிர், நீர், ஐஸ்க்ரீம், புட்டிங், சோடா, பழ நறுக்குகளில் கலந்து குடிப்பது உடலுக்கு ஒரு புத்துணச்சியை ஏற்படுத்தும். இந்த முக்கால் லிட்டர் பாட்டிலில் சுமார் 20 கப் பானம் தயாரிக்கலாம். ஒரு கப் குளிர்ந்த நீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் சிரப் போதுமானது. பிரட்டில் தொட்டுக்கூட இந்த சிரப்பை சாப்பிடலாம்.

உண்மையில் இந்த பானத்துக்கு பல காலமாகவே அவ்வப்போது எதிர்ப்புகள் வரவே செய்தன. அசைவம் கலக்குகிறார்கள்... இஸ்லாமியர்களை மட்டுமே வைத்து இந்த பானத்தை தயாரிப்பதால் சர்பத் ஜிகாத்... என்றெல்லாம் இதுபற்றி வதந்திகளைக் கிளப்பினார்கள்.இந்த பொய்யான எதிர்ப்புகளால்தான் இந்த பானம் பிரபலமடைந்தது! அந்த வகையில் வதந்தியாளர்களுக்கு நன்றி...’’ எனப் புன்னகைக்கிறார் கயாஸ் அகமத்.

செய்தி: டி.ரஞ்சித்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்