வீடியோ கேம் to நோபல் பரிசு!
உலகளவில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் மிகத் திறமையான பத்து பேரைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயமாக சர் டெமிஸ் ஹசாபிஸுக்கும் ஓர் இடம் இருக்கும். அந்தளவுக்கு இத்துறையில் பெரிய பங்களிப்பைச் செய்து வருகிறார். செயற்கை நுண்ணறிவு நிபுணர், தொழில் அதிபர், விஞ்ஞானி என பன்முக ஆளுமையாகத் திகழ்கிறார் இவர். சமீபத்தில் உலகில் செல்வாக்கான 100 பேரைப் பட்டியலிட்டது ‘டைம்’ பத்திரிகை. அந்தப் பட்டியலிலும் இடம் பிடித்தார்.

மட்டுமல்ல, ‘டைம் ‘ பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம் பிடித்து அசத்தினார். தவிர, புரோட்டீன் வடிவமைப்பு சார்ந்த செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்காக வேதியியல் துறையில் டெமிஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோக அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்து வழங்கப்படும் உயரிய பல விருதுகளைத் தன்வசமாக்கியிருக்கிறார்.
“செயற்கை நுண்ணறிவைச் சரியாக பயன்படுத்தினால் இன்னும் பத்து வருடங்களில் அனைத்து நோய்களையும் நம்மால் குணப்படுத்திவிட முடியும். முன்பே நோய்கள் வருவதைக் கண்டறிந்து எச்சரிக்கையாகவும் இருக்க முடியும்.
அதே நேரத்தில் நம்முடைய கட்டுப்பாட்டை மீறியோ அல்லது தவறாகவோ செயற்கை நுண்ணறிவு செயல்பட்டால், பருவநிலை மாற்றம் மாதிரி அதுவும் பெரிய பிரச்னையாகிவிடும்...” என்கிற டெமிஸ், 1976ம் வருடம் லண்டனில் பிறந்தார்.
தற்போது ‘கூகுள் டீப் மைண்ட்’ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். இதுபோக இங்கிலாந்து அரசின் செயற்கை நுண்ணறிவுத் துறையின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
டெமிஸின் தந்தை கிரேக்கத்தைச் சேர்ந்தவர்; அம்மா சிங்கப்பூரில் பிறந்தவர். டெமிஸோ வடக்கு லண்டனில் வளர்ந்தார். நான்கு வயதிலேயே திறமையான செஸ் விளையாட்டு வீரராக இருந்தார். 13 வயதிலேயே செஸ் விளையாட்டில் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்றுவிட்டார்.
தவிர, இங்கிலாந்தில் இருந்த பல ஜூனியர் செஸ் அணிகளுக்கு கேப்டனாகவும் திகழ்ந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஆக்ஸ்போர்டுக்கும் கேம்பிரிட்ஜுக்கும் இடையில் செஸ் போட்டிகள் நடக்கும்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பாக டெமிஸ்தான் கலந்துகொள்வார்.
தொண்ணூறுகளில் செஸ் விளையாட்டில் வெற்றி பெற்று, கிடைத்த பணத்தைக் கொண்டு சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை வாங்கினார். புத்தகங்களைப் படித்து, புரோகிராம் எழுதக் கற்றுக்கொண்டார். மனிதர்களுடன் மட்டுமல்லாமல், கம்ப்யூட்டருடனும் செஸ் விளையாட ஆரம்பித்தார். அப்படி விளையாடும்போது கம்ப்யூட்டர் எப்படி செஸ் விளையாடக் கற்றுக்கொண்டது என்ற கேள்வி அவரைத் தொந்தரவு செய்தது.
டெமிஸுக்கு கம்ப்யூட்டர் மீதான ஆர்வம் தீவிரமானது. இரவு, பகல் தூங்காமல் கம்ப்யூட்டருடனே இருந்தார். இந்த நாட்களில்தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமாகி, டெமிஸை வசப்படுத்தியது.
பதின் பருவத்தில் இருந்த மற்ற பையன்கள் எல்லாம் வீடியோ கேம்ஸை விளையாடிக்கொண்டிருந்த போது, தனது 17 வயதில் வீடியோ கேம் ஏஐ புரோகிராமராகவும், டிசைனராகவும் மாறி, வீடியோ கேம்களை உருவாக்கினார் டெமிஸ்.
தொண்ணூறுகளில் தன்னைப் போலவே திறமை வாய்ந்த ஒருவருடன் சேர்ந்து ‘தீம் பார்க்’ என்ற வீடியோ கேமை உருவாக்கினார். அப்போது இந்த கேம் சக்கைப்போடு போட்டது.
இந்த கேமை விளையாடுபவர்கள் தங்களுக்கு விருப்பமான வடிவில் தீம் பார்க்கை உருவாக்கலாம் அல்லது உருவாக்கிய பார்க்கை அழிக்கலாம். ஜாலியாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதே நேரத்தில் இந்த விளையாட்டு படைபாற்றலை மேம்படுத்துகிறது என்று பலரும் பாராட்டினார்கள்.
வீடியோ கேம்ஸ் உருவாக்கத்தில் சில ஆண்டுகள் ஈடுபட்டார். ஆனால், அது போதுமானதாக இல்லை. நரம்பியல் சார்ந்த ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தார். மனித மூளையை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவை அணுகுவதற்கான ஒரு புதிய திறப்பை நரம்பியல் சார்ந்த படிப்பு அவருக்குக் கொடுத்தது.
வீடியோ கேம்ஸில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வந்த டெமிஸ், எங்கெல்லாம் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு போகலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். இதற்காக அவர் உருவாக்கிய நிறுவனம்தான் ‘டீப் மைண்ட்’. இந்நிறுவனத்தின் சிறப்புகளை அறிந்த ‘கூகுள்’, உடனே ‘டீப் மைண்ட்’டைக் கையகப்படுத்தியது. மட்டுமல்லாமல், தலைமைப் பொறுப்பில் டெமிஸே தொடரவும் அனுமதித்தது.
செயற்கை நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்தி, மனித வாழ்க்கையை எப்படியெல்லாம் மேம்படுத்த முடியும். குறிப்பாக மனிதனின் ஆரோக்கியத்துக்காக செயற்கை நுண்ணறிவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். அந்த ஆராய்ச்சிதான் அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுக்கொடுத்தது.
‘‘அறிவியலில் என்னவெல்லாம் முடியுமோ, அதையெல்லாம் மறு வடிவமைப்பு செய்திருக்கிறார்...’’ என்று டெமிஸைப் புகழ்கின்றனர். தவிர, டெமிஸ் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் அரிய வகை மரபணு நோய்களைக் கண்டறியவும், அதைச் சமாளிக்கவும் உதவுகின்றன. தற்காலத்தில் நரம்பியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஆழமான அறிவும், அனுபவமும் கொண்டவராக மிளிர்கிறார்.
த.சக்திவேல்
|