மனைவிக்காக கணவர் உருவாக்கிய குளம்!



சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டியெழுப்பிய காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹால் உலகமே அறிந்தது. இன்றும் எவர்கிரீனாக உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. 
அதேபோலான ஒரு கதைதான் இதுவும். ஆனால், இந்தக் கதை நடந்தது சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில். இங்கு எழுப்பப்பட்டது தாஜ்மஹால் அல்ல, ஒரு குளம். அதுவும் மனைவியின் நினைவாக உருவாக்கப்படவில்லை. மனைவிக்காகவே உருவாக்கப்பட்டது.     

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தக் கதையில், தன் மனைவிக்காக குளத்தை வெட்டியவர் அந்தக் கிராமத்தின் ஜமீன்தார். இன்றும் அந்தக் குளம் பல கிராமங்களுக்கு கோடைக் காலத்திலும் குடிநீர் ஆதாரமாக திகழ்வதுதான் சிறப்பு. 

சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் நகரத்திலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கந்தர்கா கிராமம். இங்குதான் இருக்கிறது அந்தக் குளம். இதனை, ‘படே தலாப்’ அதாவது பெரிய குளம் என வர்ணிக்கின்றனர் கிராமத்துவாசிகள்.

இந்தக் குளம் உருவான கதையை உள்ளூர்வாசியும், அந்த ஜமீன்தாரின் உறவினருமான ஜீவன் லால் ஒரு கதைபோல் சொல்கிறார். ‘‘150 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடியது. இது கோடைக் காலத்தில் இன்னும் அதிகரித்தது. 

அப்போது கிராமத்தின் ஜமீன்தாராக என் தாய்வழி கொள்ளுத் தாத்தா குர்மின் கௌடியா இருந்தார்.குர்மின் கௌடியாவின் மனைவியான என் கொள்ளுப் பாட்டி தண்ணீர் பிரச்னையால் அவதியுற்றார். அவர் குளிப்பதற்காக இரண்டு கிமீ தொலைவில் உள்ள மற்றொரு கிராமத்தின் குளத்திற்குச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த கிராம மக்கள் அவரைக் கேலி செய்து சிரித்துள்ளனர்.

‘ஜமீன்தாரின் மனைவியே தண்ணீருக்காக அலைகிறார். மனைவிக்குக் கூட ஜமீன்தாரால் தண்ணீர் ஏற்பாடு செய்து தரமுடியவில்லை’ என நக்கலடித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர் குளிப்பதை பாதியில் நிறுத்தி விட்டு சேறும் சகதியுமாக வீடு வந்து சேர்ந்துள்ளார். இந்த விஷயத்தைக் கேட்ட ஜமீன்தாரான என் கொள்ளுத் தாத்தா வேதனைப்பட்டு உடனடியாக இதற்கொரு தீர்வை எட்ட முடிவெடுத்தார். அதேநேரம் ‘இனி நம் கிராமத்தின் குளத்தில்தான் குளிப்பேன்’ என ஜமீன்தாரின் மனைவியான என் கொள்ளுப் பாட்டியும் வைராக்கியம் கொண்டார்.

அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அதற்கான இடத்தைத் தேடினார் ஜமீன்தார். ஆனால், நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாததால் எங்கே தோண்டுவது என்கிற குழப்பம் வந்தது. அப்போதுதான் கடவுள் அவருக்கு ஒரு வழியைக் காட்டினார்...’’ என்கிற ஜீவன் லால் அந்த வழி பற்றித் தொடர்ந்தார். ‘‘ஒருநாள் சில கால்நடைகள் சேறும், புற்களுமாக இருப்பதை கண்டார் ஜமீன்தார். கிராமத்தில் தண்ணீர் இல்லாதபோது எப்படி கால்நடைகளின் உடலில் சேறும், புற்களும் ஒட்டிக் கொண்டன என யோசித்தார்.

மறுநாள் அந்தக் கால்நடைகளைப் பின்தொடர்ந்து போகும்படி தன்னுடைய பணியாட்களுக்குக் கட்டளையிட்டார். அதன்படியே கால்நடைகள் கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு பகுதியில் சென்று அமர்ந்தன. பணியாட்கள் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே சேறும், புற்களுமாக இருந்தன. அப்படியாக அந்த இடம் தோண்டப்பட்டு முதல்கட்டமாக சிறிய நீர் ஆதாரத்திற்கு வழிகோலினார் ஜமீன்தார்.

அப்போது தன் மனைவியிடம், இந்த முழுக் குளமும் வெட்டி முடிக்கும்வரை இந்த சிறிய நீர் ஆதாரத்தில் குளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் கிராமத்திற்கு வெளியிலிருந்து நூறு தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டனர். சுமார் ஐந்து மாதங்களில் இந்த முழுக் குளமும் வெட்டிமுடிக்கப்பட்டது.அப்போதிலிருந்து இப்போது வரை இந்தக் குளம் வறண்டதே இல்லை. கோடைக் காலத்தில் அருகிலுள்ள மற்ற குளங்கள் வறண்டாலும்கூட இதில் எப்போதும் நீர் இருக்கும்.

தற்போது எங்கள் கிராமத்திற்கு மட்டுமில்லாமல் அருகிலுள்ள ஆறேழு கிராமங்களுக்கும் இந்தக் குளமே நீர் ஆதாரமாக உள்ளது. தவிர, பாசனத்திற்கும் பயன்படுகிறது. அதனால் நாங்களும் இந்தக் குளத்தை எந்த ஆக்கிரமிப்பும் செய்யாமல் பல ஆண்டுகளாக பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறோம்...’’ என்கிறார் ஜீவன் லால். இந்நிலையில் தற்போது துர்க் லோக்சபா எம்.பி.யான விஜய் பாகேல், ‘விரைவில் இந்தக் குளத்தின் பாதுகாப்பு மற்றும் புத்துணர்ச்சிக்கான திட்டம் தயாரிக்கப்படும்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹரிகுகன்