பாடல்களே இல்லாத படத்தை இயக்கியிருக்கிறார் இந்த இசையமைப்பாளர்!
தமிழுக்கு ரஜினி என்றால் கன்னடத்துக்கு சிவராஜ்குமார். வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்தவராக இருந்தாலும் தனித்துவமான நடிப்பால் மூன்று தசாப்தங்களாக உச்ச நடிகர் என்ற அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.  சில ஆண்டுகளுக்கு முன் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் சேர்ந்து மாஸ் காட்டியவர் இப்போது ‘45’ படத்தில் மீண்டும் தமிழ் பேசவுள்ளார்.  பான் இந்திய சினிமாவாக உருவாகும் இந்தப் படத்தை அர்ஜுன் ஜனயா இயக்கியுள்ளார். கன்னட சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இவர் இந்தப் படத்தில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். புரோமோஷனுக்காக சென்னை வந்தவரிடம் பேசினோம்.
டைரக்ஷன் பண்ணும் ஆசை எப்படி வந்துச்சு?
சினிமாவில் இருபது வருடங்களாக இருக்கிறேன். சில வருடத்துக்கு முன் கதை எழுத நேரம் கிடைச்சது. எழுதி முடிச்சதும் யூனிக் ஸ்டைலில் கதை இருந்ததை என்னால் புரிஞ்சுக்க முடிஞ்சது.
கதை எழுதியதும் யாரிடமாவது இந்த கதையைக் கொடுத்து படமாக்கலாம் என்ற ஐடியாவில் இருந்தேன். அப்படி சிவாண்ணாவிடம் (சிவா அண்ணா!) கதை சொல்லப் போனேன். கதை சொல்லும்போது நடிகர்களின் பெர்பாமன்ஸ் எப்படி இருக்க வேண்டுமோ அதே மாதிரி மாடுலேஷனுடன் சொல்லி காண்பிச்சேன்.
என்னுடைய கதை சொல்லும் விதம் சிவாண்ணாவுக்கு பிடிச்சதோடு ‘இவ்வளவு அழகாக கதையை உள்வாங்கி வெச்சிருக்கீங்க, உங்களைத்தவிர வேறு யார் இந்தப் படத்தை செய்தாலும் இவ்வளவு நேர்த்தியா வருமான்னு தெரியலை.
நீங்களே டைரக்ஷன் பண்ணுங்க. நான் நடிக்கிறேன்’னு சொல்லிட்டார்.சிவாண்ணா கால்ஷீட் இருந்தால் தயாரிப்பாளர் கிடைப்பதில் சிரமம் இருக்காது. அப்படி இந்தப் படத்தை தயாரிக்க ரமேஷ் சார் முன் வந்தார். நடிகர், தயாரிப்பாளர் கிடைத்தாலும் டைரக்டராக என்னை நான் எப்படி தயார் செய்யப்போகிறேன் என்ற கேள்வி இருந்துச்சு. ஏனெனில் ப்ராக்டிக்கலாக எனக்கு டைரக்ஷன் தெரியாது. அதை தெரிஞ்சுக்க முழு சினிமாவையும் அனிமேஷனில் எடுக்க முடிவு பன்ணினேன். அந்தப் படத்துக்கு பேக்ரவுண்ட் மியூசிக், எபெக்ட்ஸ், டிடிஎஸ், டப்பிங், எடிட்டிங் என ஒரிஜினல் படம் போல் ரெடி பண்ணினேன். மூவி கேப்சரிங் முறையில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் எல்லா கேரக்டரிலும் நானே நடிச்சேன். அந்த அனிமேஷன் படத்தை எடுக்க சுமார் 20 மாதங்கள் ஆயிடுச்சு.
முதலில் ஒரு வெர்ஷன், அப்புறம் இன்னொரு வெர்ஷன்னு கிட்டத்தட்ட மூணு முறை எடுத்தேன். ஃபைனல் வெர்ஷனை சிவாண்ணா, உப்பி (உபேந்திரா) சார், ராஜ் பி.ஷெட்டி என எல்லோரிடமும் காண்பிச்சேன்.
பொதுவாக ஹீரோவிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்குவார்கள். நான் படம் காண்பிச்சு கால்ஷீட் வாங்கினேன். எல்லோருக்கும் கதை, காட்சியோட நீளம் தெரியும் என்பதால் என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்தார்கள். தேவை இல்லாத, வீண் என்று சொல்ல முடியாதளவுக்கு கதைக்கு என்ன ஃபுட்டேஜ் தேவையோ அதை மனசில வெச்சு ஒர்க் பண்ணினோம். அது என்ன ‘45’?
45 நாட்களில் நடக்கும் கதை இது. மற்றபடி படத்தை புரிஞ்சுக்க எப்படி நான் சொன்னாலும் அது கதையை சொன்ன மாதிரி இருக்கும். அடிப்படையில் இது ரிவெஞ்ச் ஸ்டோரி. ஃபேண்டஸி கலந்து எடுத்துள்ளோம். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எல்லாமே புது அனுபவமாக இருக்கும். ரசிகர்களுக்கான எண்டர்டெயின்மென்ட் முழுமையா இருக்கும். கொஞ்சம் மெசேஜும் சொல்லியுள்ளோம்.
சிவராஜ்குமார் - உபேந்திரா என ஒரே படத்தில் இரண்டு ஆளுமைகளிடம் எப்படி வேலை வாங்கினீர்கள்?
வெளியேதான் அவர்கள் லெஜெண்ட். செட்டுக்கு வந்துவிட்டால் இயக்குநரின் நடிகர்களாக மட்டுமே தங்களை வெளிப்படுத்துவார்கள். இரண்டு பேரும் பல ப்ளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்தவர்கள்.
அவர்கள் செய்யாத - நடிக்காத - ஜானர் இல்லை. இதுல இரண்டு பேருக்கும் புது கேரக்டர். அதுவே அவர்களை உற்சாகமாக நடிக்கத் தூண்டியது. என்ன ஆச்சர்யம் என்றால் சிவாண்ணா டேக் போவதற்கு முன் பல முறை ரிகர்சல் பண்ணுவார். நடந்து வர்ற காட்சியாக இருந்தாலும் அதற்கும் ப்ராக்டீஸ் பண்ணுவார்.
உபேந்திரா நடிகர் மட்டுமல்ல. சிறந்த இயக்குநர். ஆனால், எந்த இடத்திலும் சின்ன சஜஷன் சொன்னதில்லை. ஷாட் எப்படி இருக்கும்ன்னு அவருக்கு தெரியும். நடிக்கும்போது அவருடைய பாடிலேங்வேஜுக்கு ஏற்ப மாடுலேஷனை மாற்றி நடிப்பார்.
ராஜ் பி ஷெட்டிக்கு கதையை மூவ் பண்ற மாதிரி முக்கியமான கேரக்டர். கன்னட சினிமாவுல முக்கியமான ரைட்டர் கம் ஆக்டர். எந்த ரோல் கொடுத்தாலும் அந்தக் கேரக்டராக மாறக்கூடியவர். உங்களுக்கு விஜய்சேதுபதி மாதிரி எங்களுக்கு ராஜ் பி ஷெட்டி. தமிழ் ஆடியன்ஸுக்கு படத்துல என்ன இருக்கு?
இந்தப் படத்தை இந்தியா முழுவதும் கனெக்ட் பண்ணிக்கலாம். கதை நல்லா இருந்தால் ரசிகர்கள் கைவிடமாட்டார்கள். பான் இந்திய சினிமா என்பதற்காக பணத்தைக் கொட்டி படம் எடுத்தாலும் ஓடப் போவதில்லை. கதை முக்கியம். இதில் கதை இருக்கு. ஆடியன்ஸுக்கு பிடிக்குமா என்று டெஸ்ட் பண்ணிய பிறகுதான் ஷூட் போனோம்.
பாடல்கள் எப்படி வந்துள்ளன?
நான் டைரக்ஷன் என்பதால் மியூசிக்கல் சப்ஜெக்ட்டாக இருக்கும்னு நினைக்கிறார்கள். உண்மையை சொல்லணும்னா படத்தில் பாடல்கள் கிடையாது. இந்தக் கதைக்கு பாடல் தேவைப்படவில்லை. புரோமோஷன் சாங் தீம் சாங் மட்டும் இருக்கும்.
மற்றபடி கதையோடு கலந்த பாடல்கள் இருக்காது. பின்னணி இசை அதை நிறைவு செய்துவிடும்.தமிழில் ‘கிக்’ படத்திற்கு இசை அமைத்தீர்கள். அதன்பிறகு உங்களைப் பார்க்க முடியவில்லையே? இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற மேதைகளின் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். எனக்கு தமிழ்ப் படங்கள் பண்ண ஆசை. சந்தானம் படத்தை கன்னட டைரக்டர் செய்ததால் வந்த வாய்ப்பு அது. நல்ல கதைகள் வந்தால் தமிழில் மியூசிக் பண்ணுவேன்.
எஸ்.ராஜா
|