வயநாடு தமிழகம் கற்க வேண்டிய பாடம்...
வரலாறு காணாத பேரழிவைச் சந்தித்திருக்கிறது கேரள மாநிலத்திலுள்ள வயநாடு. இதுகுறித்து பேசும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சூழலியல் பொறியாளர் பிரபாகரன் வீரஅரசு, ‘‘இத்துயர நிகழ்வை இயற்கைப் பேரிடர் என இயற்கையின் மீது பழிபோட்டு நாம் எளிதில் கடந்துவிடக் கூடாது. இந்நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இயற்கைச் சீற்றத்திற்கும் மனித செயல்பாடுகளே அடிப்படைக் காரணம்...’’ என வருத்தம் பொங்க சொல்பவர், இப்பேரழிவில் இருந்து கற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாகச் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்தும் பகிர்ந்தார்.
‘‘வயநாடு மாவட்டத்தில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வைத்திரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை பல ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தனர்.கடந்த ஜூன் 2018ம் ஆண்டு கோழிக்கோடு, கண்ணூர், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அங்கு ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதில், நிலச்சரிவு ஏற்பட பெருமழை ஒரு காரணம் என்றாலும், பல இடங்களில் அறிவியல்பூர்வமற்ற வகையில் மலைச்சரிவுகளில் கட்டப்பட்ட கட்டடங்களும் முக்கியக் காரணம் என்றது.
குறிப்பாக இயற்கையாக அமைந்த மலைச்சரிவுகள் மற்றும் மலைமுகடுகளைத் தோண்டி பிளந்து கட்டடங்களை எழுப்பியதால் அப்பகுதியின் நில அமைப்பே மாறிவிட்டதாகக் குறிப்பிட்டது.
பெரும் அளவில் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக மணலை இறுகப்பிடிக்கும் வேர்கள் இல்லாததன் காரணமாக, ‘நிலச்சரிவைத் தாங்கும்’ திறனை மண் இழந்திருக்கிறது என்றும், இத்தன்மையை இழந்த நிலப்பரப்பில் அதிதீவிர மழைப்பொழிவு மணல் அரிப்பையும், மணல் சரிவையும் அடிக்கடி ஏற்படுத்தும் என்றும் அப்போதே ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.
ஆனால், யாரும் இதைப் பெரிதுபடுத்தவில்லை. அந்த ஆண்டு ஆகஸ்டில் பெருமழை, வெள்ளம் கேரளாவைப் புரட்டிப்போட்டது. இந்நிலையில் 2019ம் ஆண்டு இதே வயநாடு பகுதியில் ஏற்பட்ட மழை மற்றும் நிலச்சரிவால் 17 பேர் இறந்தனர்.
இதற்கிடையே வயநாடு கல்பெட்டாவைச் சேர்ந்த ‘Hume Centre for Ecology and Wildlife Biology’ சுற்றுச்சூழல் நிறுவனம், 2018ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், வயநாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 90 சதவீத நிலச்சரிவுகள், மலைச்சரிவு 30 டிகிரியாக இருந்த இடங்களில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்தது.
இதேபோன்று மலைச்சரிவு 30 டிகிரியாக உள்ள இடங்கள் தமிழகத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இருக்கலாம். அதனால், இனி நிலம் வலுவிழப்பதைக் காடுகள் அழிப்புடனும், நிலச்சரிவைப் பெருமழையுடனும், பெருமழையைக் காலநிலை மாற்றத்துடனும் தொடர்புபடுத்திப் பார்க்க நாம் தவறினால் இப்பேரழிவுகளைத் தடுக்க முடியாது.
தமிழ்நாடு அரசு இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரி, குன்னூர், வால்பாறை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்...’’ என்கிறவர், செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டார்.
‘‘முதலாவதாக மாதவ் காட்கில் தலைமையிலான (WGEEP) அறிக்கையில், சூழல் கூர் உணர்வு மண்டலங்களாக தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளும், நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளும் கண்டறிப்பட்டுள்ளன. இதில் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகள் முக்கியமானவை. இந்தப் பகுதிகளில் உள்ள கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் காலி செய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படவேண்டும். குறிப்பிட்ட அந்த இடங்களில் புதிதாக எந்தவிதமான கட்டுமானங்களோ, குவாரிகளோ, சுரங்கங்களோ அமைக்க அனுமதிக்கக்கூடாது.இரண்டாவதாக அயல் படர் தாவரங்களைக் கட்டுப்படுத்தி, அந்த மலைகளுக்கு உரிய இயல் தாவரங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.
மூன்றாவதாக ஆண்டுதோறும் உதகையில் நடைபெறும் மலர்க் கண்காட்சியை மேட்டுப்பாளையம் அல்லது பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உதகையை சுற்றுலாத்தலமாக பிரபலப்படுத்த இத்தகைய விழாக்கள் தேவைப்பட்டன.
இப்போது விடுமுறை தினங்களிலேயே பல லட்சக்கணக்கான மக்கள் உதகையில் கூடுகின்றனர். இது அம்மலைக்கு மிகப்பெரிய அழுத்தமாக அமைகிறது. இந்தாண்டு ஏப்ரலில் ஊட்டி,கொடைக்கானல் பகுதிகளில் அதிகளவு கூட்டத்தால் தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையைப் பின்பற்றும் நிலைக்குச் சென்றது. நான்காவதாக தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலையில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் நீர்மின் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யவோ, புதிய நீர்மின் திட்டங்களைத் தொடங்கவோ கூடாது. அதுவும் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.ஐந்தாவதாக நிலச்சரிவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கக்கூடிய வகையிலும், ‘மாநில நிலச்சரிவு மேலாண்மை மையம்’ அமைக்கப்பட வேண்டும்.
நீலகிரிக்கு மேட்டுப்பாளையத்திலும்; கொடைக்கானலுக்கு வத்தலகுண்டிலும் அமைத்து தொடர்ந்து நிலச்சரிவு குறித்து கண்காணிக்க வேண்டும். நமக்கு எல்லா வளங்களையும் அளித்து நம்மைப் பாதுகாத்த மண் இப்போது நம்மைக் காவு வாங்க ஆரம்பித்திருக்கிறது. அதன் தாக்கத்தை மட்டுப்படுத்தி, நாம் செய்த தவறுகளை சரிசெய்வதே இப்போது நம்முன் உள்ள தலையாய பணி...’’ என்கிறார். பிரபாகரன் வீரஅரசு.
பேராச்சி கண்ணன்
|