ரூ.50 ஆயிரத்துக்குள் வெளிநாட்டுச் சுற்றுலா!



வாழ்க்கையில் ஒருமுறையாவது ஏதாவதொரு வெளிநாட்டுக்குச் சென்று பார்த்துவிட வேண்டும் என்பது பலரது கனவு. இந்தக் கனவுக்குப் பொருளாதாரம் மட்டுமே இடையூறாக இருக்கும். இந்நிலையில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எந்தெந்த நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்ற விவரம் இதோ:

மலேசியா

மார்ச் மாதத்திலிருந்து அக்டோபருக்குள் எப்போது வேண்டுமானாலும் மலேசியாவுக்குச் சென்று வரலாம். இந்த நாட்களில் மலேசியாவின் காலநிலை இந்தியர்களுக்கு உகந்ததாக இருக்கும்.
மலேசியாவின் அடையாளமான இரட்டைக் கோபுரங்கள், மலாக்காவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தெருக்கள், லாங்கவியில் உள்ள அழகான கடற்கரைகள் என பல இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம். மட்டுமல்ல, நாசி லேமக், சார் க்வே டியூ போன்ற பிரத்யேகமான மலேசிய உணவுகளை ருசிக்கலாம்.
பெங்களூருவிலிருந்து கோலாலம்பூர் சென்று, வருவதற்கு ரூ.14 ஆயிரத்துக்குள்ளேயே விமான சேவைகள் கிடைக்கின்றன. கையில் ரூ.30 ஆயிரம் இருந்தாலே போதும், மலேசியாவைத் தரிசித்து விடலாம்.

மாலத்தீவுகள்

தொண்ணூற்று ஒன்பது சதவீதம் தண்ணீராலும், ஒரு சதவீதம் நிலத்தாலும் சூழப்பட்ட இடம், மாலத்தீவுகள். நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை ஒரு கனவைப் போல மாலத்தீவுகள் இருக்கும். பவளப்பாறைகள், வெள்ளை மணல் கடற்கரைகள், நீலமும், பச்சையும் கலந்த கடல் நீர், அழகான சூரிய அஸ்தமனம், சுவையான கடல் உணவுகள், சொகுசான தங்கும் விடுதிகள், கடல் குளியல் என மாலத்தீவில் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. மற்ற வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் பட்ஜெட் மட்டும் அதிகம்.

ஹாங்காங்

உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் ஓர் இடம், ஹாங்காங். உயரமான கட்டடங்கள் அதிகமாக உள்ள இடமும் இதுவே. வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல விரும்பும் பத்து இந்தியர்களில் இரண்டு பேர் முதலில் ஹாங்காங் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கின்றனர். அங்கிருக்கும் விக்டோரியா மலை, கவ்லூன் சந்தை, டிஸ்னிலேண்டை பார்க்கவே சில நாட்கள் பிடிக்கும்.

கையில் நிறைய பணம் இருந்தால் விதவிதமாக ஷாப்பிங் செய்யலாம். ஹாங்காங்கில் கிடைக்காத பொருட்களே இல்லை. உணவுப்பிரியர்களுக்கு வாத்துக்கறியும், டிம் சம்மும் இருக்கிறது.
ரூ.14 ஆயிரம் ரூபாய்க்குள் தில்லியிலிருந்து ஹாங்காங் சென்று, வருவதற்கான விமான சேவைகள் இருக்கின்றன. அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஹாங்காங்கில் குளிர்ந்த காலநிலை நிலவும். இந்த மாதங்கள் ஹாங்காங் சுற்றுலாவுக்கு ஏற்றது.

பாலி

இந்தோனேஷியாவில் அமைந்திருக்கும் பாலி தீவுக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், ஏப்ரலிலிருந்து அக்டோபருக்குள் செல்லும்போது இன்னமும் பாலி அழகாக இருக்கும்.
உபுட்டிலுள்ள படிக்கட்டுகளைப் போன்ற நெல் வயல்கள், செமின்யாக் கடற்கரையில் அரங்கேறும் விருந்து நிகழ்ச்சிகள், குடா கடற்கரையில் சூரிய குளியல் என அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் பாலியில் கொட்டிக் கிடக்கின்றன. நாசி கோரெங் என்ற சிறந்த பிரைடு ரைஸைத் தவறவிடக்கூடாது. மும்பையிலிருந்து பாலிக்கு விமானத்தில் சென்று வர ரூ.19 ஆயிரம் செலவாகும்.

உஸ்பெகிஸ்தான்

மத்திய ஆசியாவில் அமைந்திருக்கும் ஒரு நாடு, உஸ்பெகிஸ்தான். ஏப்ரலிலிருந்து ஜூன் மாதத்துக்குள் அல்லது செப்டம்பரிலிருந்து நவம்பருக்குள் செல்வது சரியாக இருக்கும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சமர்காண்ட், புக்காரா, கிவி ஆகிய நகரங்களை அலங்கரிக்கும் இஸ்லாமியக் கட்டடக்கலையை ரசிக்கலாம். 

உஸ்பெகிஸ்தானின் பாரம்பரிய உணவான ப்லோவ் மற்றும் சம்சாவை சாப்பிடலாம். இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாசாரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள நிறைய இடங்கள் இருக்கின்றன. விமானத்தின் மூலம் டெல்லியிலிருந்து ரூ.16 ஆயிரம் ரூபாய்க்குள் உஸ்பெகிஸ்தானுக்குச் சென்று வர முடியும்.

வியட்நாம்

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலும், ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலும் சொர்க்கம் போல காட்சியளிக்கும் வியட்நாமுக்கு செல்ல ரூ.12 ஆயிரம் ரூபாய் இருந்தாலே போதும். தில்லியிலிருந்து வியட்நாமுக்கு விமானத்தில் சென்று வரலாம். ஹனோய் நகரத்தின் தெருக்கள், வியட்நாமின் சிறப்புகளை வெளிப்படுத்தும் ஹோய் ஆன் நகரம், ஹா லாங் பேயின் சுண்ணாம்புக்கல் தீவுகள் என வியட்நாமில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றன.

பைக் பிரியர்களை குஷிப்படுத்தவே சில இடங்கள் இருக்கின்றன. அங்கே பைக் ஓட்டுவதற்காக மட்டுமே வியட்நாமிற்கு வருகிறவர்கள் இருக்கின்றனர்.

முக்கியமாக போ மற்றும் பான் மி ஆகிய உணவுகளைத் தவறவிடக்கூடாது. அதிகபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்குள் வியட்நாமைப் பார்த்துவிடலாம்.

சிங்கப்பூர்

உலகின் முதல் இரவு நேர உயிரியல் பூங்கா இயங்கும் இடமே சிங்கப்பூர்தான். இங்கே இரவு நேர சஃபாரி வெகு பிரபலம். இதற்காகவே சிங்கப்பூருக்குப் பயணம் செய்பவர்கள் இருக்கின்றனர்.
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான நாட்கள் சிங்கப்பூருக்குப் பயணிக்க ஏற்றது. இந்த நாட்களில் அங்கே நிலவும் காலநிலை வெளியே சுற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். 260 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் பூங்கா, சைனா டவுன், சென்டோஸா தீவு என சிங்கப்பூரில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன.

ஹைனானீஸ் சிக்கன் ரைஸ் மற்றும் சில்லி கிராப்பைத் தவறவிடக்கூடாது. விமானம் மூலமாக மும்பையிலிருந்து சென்று, வர ரூ.18 ஆயிரமும், சென்னையிலிருந்து சென்று, வர ரூ.12 ஆயிரமும் செலவாகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

நவம்பர் முதல் மார்ச் வரையிலான நாட்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பயணம் மேற்கொள்வது நல்லது. மற்ற மாதங்களில் வெயில் தாங்கமுடியாமல் இருக்கும்.
துபாயில் உள்ள புர்ஜ் கலீபா, துபாய் மால், பாலைவன சஃபாரி, அபுதாபியில் உள்ள மசூதிகள் என நிறைய இடங்களில் சுற்றிப்பார்க்கலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர்களில் 85 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியர்களும் அடங்கும்.

துபாயில் ஷாப்பிங் செய்யலாம். சவர்மா மற்றும் மானகிஸ்ஸை சாப்பிடாமல் இந்தியாவுக்குத் திரும்பவே கூடாது. ரூ.13 ஆயிரத்தில் மும்பையிலிருந்து துபாய்க்குச் சென்று வருவதற்கும், ரூ.15 ஆயிரத்தில் சென்னையிலிருந்து துபாய்க்குச் சென்று வருவதற்கும் மலிவான விமானசேவைகள் இருக்கின்றன.

தாய்லாந்து

வெளிநாட்டுப் பயணத்துக்காக திட்டமிடும் இந்திய இளைஞர்களின் முதல் தேர்வே, தாய்லாந்துதான். நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான நாட்களில் தாய்லாந்துக்குத் தாராளமாக பயணிக்கலாம். பாங்காக்கின் சந்தைகள், சியாங்மாவில் உள்ள புத்த விகாரைகள், புகேட்டில் உள்ள கடற்கரைகள் என தாய்லாந்தை வலம் வந்துகொண்டே இருக்கலாம்.

டாம் யும் சூப் மற்றும் மன்ச் ஆன் பேட் தாய் போன்ற பிரத்யேகமான தாய்லாந்து உணவுகளைச் சுவைக்கலாம். மும்பையிலிருந்து பாங்காக்குக்குச் சென்று, வர ரூ.14 ஆயிரமும், தில்லியிலிருந்து புகேட்டிற்குச் சென்று வர ரூ.18 ஆயிரமும் விமானப் பயணத்துக்குத் தேவைப்படும்.

கென்யா

கிழக்கு ஆப்பிரிக்காவின் முக்கிய தேசம், கென்யா. ரூ.23 ஆயிரம் ரூபாயில் மும்பையிலிருந்து கென்யாவுக்குச் சென்று வர முடியும். அந்தளவுக்கு மலிவான விமான சேவை கிடைக்கிறது.
உலகிலேயே சிறந்த சுவை கொண்ட தேநீரையும், காபியையும் கென்யாவில் சுவைக்கலாம். முக்கியமாக யாமா கோமா எனும் கென்யன் பார்பிக்யூவின் சுவை அள்ளும். குறிப்பாக என்றைக்கும் மறக்க முடியாத சஃபாரி அனுபவத்தைக் கென்யாவில் பெறலாம். நகுரு ஏரி, அம்போசெலி தேசிய பூங்கா என சுற்றிப்பார்க்கவும் நிறைய இடங்கள் இருக்கின்றன.  

த.சக்திவேல்